உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்க நாடு முழுவதிலும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு விடுப்பதற்கு மஹிந்த அணி தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி இறுதி முடிவுகள் எடுப்பதற்கு இந்த வாரம் கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூடவுள்ளனர் என்று தெரியவருகின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு மஹிந்த அணி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. மே தினக் கூட்டத்திலும் அவர்களின் பிரதான கோரிக்கையான உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்பதையே முன்வைத்துள்ளது.
அரசு தொடர்ந்து இந்த விடயத்தில் அசமந்தப் போக்கில் செயற்பட்டு வருவதால் அரசுக்குப் பெரியதொரு அழுத்தத்தைக் கொடுக்கும் வகையில் நாடு முழுவதிலும் பூரண ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுக்க மஹிந்த அணியான பொது எதிரணி தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் இதற்கான திகதி தீர்மானிக்கப்படும் என்று அறியமுடிகின்றது.