முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆனை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்த இந்தோனேஷியாவின் ஜெகார்தா மாநில ஆளுநர் பசுக்கி ரிஜஹஜா பூர்நமாவுக்கு (Basuki Tjahaja Purnama) 2 வருட சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் நேற்று (09) தீர்ப்பளித்துள்ளது.
வன்முறைகளை தூண்டியதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. தலைநகருக்கான ஆளுநர் பதவிக்கு போட்டியிட்ட முதலாவது சீனாவைச் சேர்ந்த கிறிஸ்தவராக அவர் பதிவாகியிருந்தது. தனது தேர்தல் பிரசாரத்தின் போது முஸ்லிம்களுடைய புனித நூலான அல்குர்ஆனை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிரான மேன்முறையீடு செய்யப் போவதாக அவர் கூறியுள்ளார். பூர்நமாவின் இஸ்லாம் தொடர்பான கருத்து, இந்தோனேஷியாவிலுள்ள இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.