வடக்கும், கிழக்கும் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரஃபும்.

ஹம்ஸா கலீல்-

"மானிடத்தை மூடியிருக்கும் கங்குல் இரவுகளை ஒட்டி ஒழிக்கும் சூரியன் அரசியல் அதிகாரமே"

முஸ்லிம் மக்களுக்கான தனி மாகாண கோரிக்கை என்பது இன்று நேற்று எழுந்ததல்ல.

அஷ்ரஃப் முஸ்லிம் மக்களுக்கு தனியானதோர் அரச நிர்வாகத்தை - மாகாணத்தை கேட்கிறார் என்று அவர் மீது அன்று இனவாதம் பூசப்பட்டது. இது வரலாறு தெரியாதவர்கள் இட்ட கயிறு.

டொனமூர் ஆணைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்ட மாகாண சபையானது 1940 ம் ஆண்டு விவாதிக்கப்பட்டது.

1959 ம் ஆண்டு திருகோணமலை மாநாட்டில், வடகிழக்கின் தமிழ் பேசும் மக்களுக்கான இரு அரசுகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்று தனி முஸ்லிம் அரசு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. தந்தை செல்வா இம் மாநாட்டினை அலங்கரித்தார்.

தந்தை செல்வா அந்தக் காலத்திலேயே முஸ்லிம் மக்களுக்கான தனி மாகாண சபை - அரசு ஒன்றின் அவசியத்தை உணர்த்தியும் இருந்தார்.

1984களில் சர்வ கட்சி மாநாடு. மாநாட்டின் நடுவிலே தமிழர் விடுதலைக் கூட்டணி கிழக்கிலங்கைக்கு ஓர் அரசியல் சுற்றுலா வந்தது.

சுற்றுலா வந்த தமிழர் விடுதலை கூட்டணி தலைவர்களை கிழக்கிலங்கை முஸ்லிம் பிரமுகர்கள் சந்திக்க தலைவர் அஷ்ரஃப் ஏற்பாடு செய்தார்.

தமிழர் விடுதலை கூட்டணி சார்பாக அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், பூ.கணேசலிங்கம், சம்பந்தன், ஆ.வேல்முருகு ஆகியோர் கலந்து கொண்டனர். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் அமைப்புக்குழு கலந்து கொண்டது.

அச் சந்தர்ப்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களிடம் தலைவர் அஷ்ரஃப் ஒரு வேண்டுகோளை முன் வைத்தார்.

"முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, வடகிழக்கு இணைந்த ஆட்சி அமைப்பு வேண்டும் என்ற கோரிக்கையை தமிழர் விடுதலைக் கூட்டணி கைவிட வேண்டும்."

அன்று தமிழர் தலைமைகளை நோக்கிய மறைந்த மாபெரும் தலைவர் அஷ்ரஃபின் வேண்டுகோள் இதுவாகத்தான் இருந்தது.

1986 ம் ஆண்டு வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய பேச்சுக்கள் நடைபெற்ற காலம் அக் காலப்பகுதியில் தலைவர் அஷ்ரஃப் தமிழ் தலைவர்களை நோக்கி

"வடக்கும் கிழக்கும் இணைந்த சுயாட்சியில் முஸ்லிம்களின் நிலை என்ன என விளக்குங்கள்"

என்றதொரு வினாவை தொடுத்திருந்தார். தலைவரின் வினாவை 26.07.1986 முதற்பக்க செய்தியாக வீரகேசரி பத்திரிகை பிரசுரித்திருந்தது. ஆனாலும் தலைவர் அஷ்ரஃபின் வினாவிற்கான சீரான விடை இன்று வரை தமிழர் தலைமைகளினால் வழங்கப்படவில்லை.

வடக்கும் கிழக்கும் இணைந்த சுயாட்சியில் இலங்கை வாழ் முஸ்லிம்களின் நிலை என்ன என்பது பற்றி இலங்கை அரசு தரப்பிலும் சீரான பதில்கள் இல்லை.

வரலாற்றில் வடகிழக்கு இணைப்பிற்கு தலைவர் அஷ்ரஃப் எங்கும் இதய சுத்தியுடன் ஆதரவு தெரிவித்திருந்ததில்லை.

மீண்டும் இன்று வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய பேச்சுக்கள் மறைமுகமாக இடம்பெறுகிறது. இணைப்பிற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துப் பறிமாற்றங்கள் இடம்பெறுகிறன. இக்காலகட்டத்தில் வடக்கு கிழக்கு இணைப்பை வலியுருத்தும் தமிழ் தலைவர்களிடமும் வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஆதரவான கருத்துக்களை கூறிவரும் முஸ்லிம் தலைமைகளிடமும் தலைவர் அஸ்ரஃப் அன்று தொடுத்த வினாவை மீண்டும் இன்று தொடுக்க முஸ்லிம் சமூகம் கடமைப்பட்டுள்ளது.

வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களின் விகிதாசாரம் 17ஆக குறையும் அபாயம் இருக்கிறது. வடகிழக்கு இணைந்த மாகாண சபையில் முஸ்லிம் மக்களின் சமத்துவம், சுயநிர்ணயம், ஆட்சி உரிமை, நிலப்பங்கீடு என அனைத்தும் கேள்விக்குற்படுத்தப்படுகிறது.

வடக்கு கிழக்கு இணைப்பிற்கு ஆதரவான கருத்துக்களை கூறி வருபவர்கள், வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், அவர்கள் முஸ்லிம் சமூகத்துக்கும் செய்கின்ற மிகப் பெரிய துரோகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பூமி. அப் பூமி ஒரு இனத்திற்கு மாத்திரம் உரித்தான பூமி அல்ல. அப் பூமி அதில் வாழ்கின்ற சகல சமூகத்தினருக்கும் உரித்தான அவர்கள் ஆட்சி புரியும் பூமியாக என்றும் இருக்க வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிந்தே இருக்க வேண்டும். இதுவே எமது கோரிக்கையாகவும் வேண்டுகோளாகவும் இருக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -