சிறைச்சாலைகளில் சர்வ மத வழிபாட்டுத் தலங்களை அமைப்பதன் ஊடாக நல்ல சமூகமொன்றினை கட்டியெழுப்பும் திட்டத்துக்கு அமைவாக மொனராகலை சிறைச்சாலை வளாகத்தில் முஸ்லிம் பள்ளிவாசலொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனை, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.
எதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை காலை 10 மணிக்கு மொனராகலை சிறைச்சாலை வளாகத்தில் நடைபெறவுள்ள பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளதுடன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் விக்கிரமசிங்க, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் எம்.எம்.என்.சீ.தனசிங்க உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
சிறைச்சாலைகளில் வசிக்கின்றவர்களது மத அனுஷ்டானங்களை சுதந்திரமாக முன்னெடுப்பதற்காக அங்கு சர்வ மத வழிபாட்டுத் தலங்கள் அமைத்து, சிறந்த நல்லிணக்க சமூகமொன்றினை உருவாக்குவதற்கான திட்டங்களை விடயப்பரப்புக்குப் பொறுப்பான அமைச்சு முன்னெடுத்துள்ளது.
அந்தவகையில், மொனராகலை சிறைச்சாலையில் பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ரமழான் மாதம் நெருங்கும் நிலையில் இப்பள்ளிவாசல் திறந்து வைக்கப்படவுள்ளமையால் அங்குள்ள 10 முஸ்லிம் சிறைக்கைதிகளும் மிகுந்த பயனடையவுள்ளனர். இதேவேளை, மேற்படி சிறைச்சாலையில் மொத்தம் 300 சிறைக்ககைதிகள் உள்ளமைக் குறிப்பிடத்தக்கது.