அமெரிக்க ராணுவத்தின் சிறப்புப்படை, அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்ற இரவில் என்ன நடந்தது என்பது குறித்து அவரது மனைவி முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.
அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது, கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தின் சிறப்புப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சுட்டுக் கொல்லப்பட்ட அந்த இரவில் என்ன நடந்தது என்பது குறித்து ஒசாமாவின் நான்காவது மனைவி அமால் முதன் முறையாக தகவல்களை பகிர்ந்துள்ளார்.
2011, மே மாதம் முதல் திகதியன்று இரவு உணவு முடித்து, தொழுகைக்கு பின்னர் பின்லேடனும், அமாலும் படுக்கையறைக்கு சென்றுள்ளனர்.திடீரென்று ஒசாமா ரகசியமாக மறைந்து வாழ்ந்து வந்த வீட்டில் மின்சாரம் தடைபட்டு, வீடு முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. பாகிஸ்தானில் மின்சாரத் தடை ஏற்படுவது வழக்கமானது என்பதால், யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
காரணமே இல்லாமல் கலக்கம் ஏற்பட்டு தூக்கம் கலைந்து விழித்துக்கொண்ட அமாலுக்கு, மாடியில் யாரோ ஏறுவது போல தோன்றியதால் கவலை ஏற்பட்டுள்ளது.இதற்கிடையில் "தூக்கத்தில் இருந்த பின்லேடனும் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார். அவர் முகத்தில் அச்சம் நிலவியது அப்பட்டமாக தெரிந்தது".
அப்போது "அமெரிக்காவின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் வீட்டின் அருகே இருந்தது. சில நிமிடங்களில் மற்றொரு ஹெலிகாப்டரும் வந்துவிட்டது. அத்துடன், அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு குழுவும் அவர்களுடன் இணைந்து கொண்டது'', என்று தெரிவித்துள்ளார் அமால்.
குடும்பத்தினரிடம் பேசிய ஒபாமா, ''அவர்கள் கொல்ல விரும்புவது என்னைத்தான் உங்களை அல்ல'' என்று சொன்னதுடன், மனைவிகளையும், குழந்தைகளையும் வீட்டின் கீழ்தளத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளார்.
இருந்தபோதிலும், தனது மகன் ஹுசைனுடன் ஒசாமாவின் அருகிலேயே இருக்க அமால் முடிவு செய்திருக்கிறார். தங்கள் இருப்பிடத்தைப் பற்றிய முழுத் தகவல்களையும் யாரோ அமெரிக்காவிற்கு தெரிவித்துவிட்டார்கள், இல்லையென்றால் இது என்றுமே சாத்தியமாகியிருக்காது என்று கூறியுள்ளார் அமால்.
அப்போது அமெரிக்கா ராணுவத்தினர் மேல் மாடிக்கு வந்துவிட்டனர். அதன்பிறகு அனைத்தும் சில நிமிடங்களில் முடிந்துவிட்டது. மட்டுமின்றி பல ஆண்டுகளாக ரகசியமாகவும், பாதுகாப்பாகவும் இருந்த அந்த வீடே தங்களுக்கு மரணப்பொறியாக மாறிவிட்டது என முடித்துள்ளார் அமால்.