நடிகர் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பின்பு ரசிகர்களை சந்தித்து வருகிறார் கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமணமண்டபத்தில் கடந்த 15 ஆம் திகதி ரசிகர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்களாக ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
அப்போது ரசிகர்களை குடும்பம் குடும்பமாக வரவழைத்து தனது அருகில் வைத்து அவர்களுடன் ரஜினி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தொடக்க நாளில் ரஜினிகாந்த் அரசியல் பற்றி பரபரப்பு கருத்துக்களை வெளியிட்டார், அவரது கருத்துக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் ‘ரஜினிகாந்த் பா.ஜனதாவுக்கு வந்தால் அவரை வரவேற்போம்’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இது பற்றி நிருபர்கள் ரஜினியிடம் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு ரஜினி பதில் கூறுகையில் ‘அரசியலுக்கு வருவது குறித்து இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. எனது கருத்தை ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டேன் என்றார்.