முகம்மத் இக்பால், சாய்ந்தமருது
“சாட்சியம்” என்னும் முஸ்லிம் காங்கிரசின் மாதாந்த சஞ்சிகையின் முதலாவது வெளியீட்டு விழா நேற்று கொழும்பில் அமைந்துள்ள மேல்மாகாண கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த சஞ்சிகை வெளியீடானது மிகவும் வரவேற்கக்கூடியதாக இருந்தாலும், இதில் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் ஒரு பந்தி கட்டுரையேனும் பங்களிப்பு இல்லாததனால், பல போராளிகள் தங்களது அதிருப்திகளை என்னிடம் கொட்டி தீர்த்தார்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் அதிகாரத்தில் இருக்கின்றபோது, அந்த அதிகாரத்தினை அனுபவிப்பதற்காக ஒரு கூட்டம் அவ்வப்போது வந்து சேரும். இது 1994 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரைக்கும் நடைபெற்று வருகின்ற விடயமாகும்.
ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் எந்தவித அதிகாரத்திலும் இல்லாமல் எதிர்க்கட்சி வரிசையில் அமருகின்ற சந்தர்ப்பங்களில் இவ்வாறான எவரையும் மு.கா பக்கம் காணமுடியாமல் இருக்கும். ஏனென்றால் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற வேறு அரசியல் தலைவர்களுடன் அவர்கள் ஒட்டிவிடுவார்கள். இது கடந்தகால அனுபவமாகும்.
இப்படிப்பட்டவர்களுக்கு நிரந்தரமான கட்சியுமில்லை, கொள்கையுமில்லை. எந்த சந்தர்ப்பத்தில் எதனை அனுபவிக்க முடியுமோ அதனை அனுபவிப்பதுதான் அவர்களது கொள்கையாகும்.
மிகவும் நளினமாகவும், இனிமையாகவும் பேசக்கூடிய இவ்வாறானவர்கள், தங்களது இனிமையான பேச்சின் மூலம் அரசியல்வாதிகளை இலகுவில் கவர்ந்துவிடுவார்கள். இவர்களது நளினமான பேச்சில் பொய்களும், ஏமாற்றுக்களும் உள்ளது என்பதனை அரசியல்வாதிகள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள்.
ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் கட்சிக்கு தன்னை உரமாக அர்ப்பணித்து, கட்சியின் வளர்ச்சிக்காக பல தியாகங்களை செய்து அழகு பார்ப்பதே போராளிகளின் கொள்கையாகும். இப்படிப்பட்ட போராளிகள் நளினமாக பேச தெரியாதவர்கள்.
அந்தவகையில் நேற்று வெளியிடப்பட்ட முஸ்லிம் காங்கிரசின் “சாட்சியம்” என்னும் சஞ்சிகையில் போராளிகளின் எந்தவித சாட்சியங்களும் உள்ளடக்கப்படவில்லை. மாறாக முஸ்லிம் காங்கிரஸ் இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பதனால், பருவகாலத்துக்காக அந்த அதிகாரத்தினை அனுபவிக்க வந்தவர்களின் தனியுரிமை மட்டுமே அதில் காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்த விடயத்தில் தேசிய தலைவரை குறைகூற முடியாது. அவருக்கு இருக்கின்ற வேலைப்பளு காரணமாக அவர் ஓட்டத்திலேயே இருப்பதனால் இவ்வாறான விடயங்களை பற்றி சிந்திக்க அவருக்கு சந்தர்ப்பமில்லை.
எனவே முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றுடனும், அதன் வளர்ச்சியுடனும் தங்களை அர்பணித்து கட்சிக்காக எதனையும் எதிர்பாராது செயலாற்றுகின்ற போராளிகள் மட்டுமே கட்சியின் சாட்சியங்களை கூற முழு தகுதியுடையவர்கள். மு.கா அதிகாரத்தில் இருக்கின்றபோது அதன் அரசியல் அதிகாரத்தினை அனுபவிக்க வந்தவர்கள் எவரும் சாட்சியம் கூற தகுதியற்றவர்கள். அத்துடன் போராளிகளின் எந்தவித பங்களிப்புமின்றி வெளியிடப்பட்ட “சாட்சியம்” என்னும் சஞ்சிகை போராளிகளால் அங்கீகரிக்க முடியாததாகும்.