இலங்கையில் கடந்த மாதம் நிலவிய சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட மண் சரிவில் பாதிக்கப்பட்ட 516 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் கடந்த மாதம் நிலவிய சீரற்ற காலநிலையால் நாடெங்கிலும் மக்கள் பாதிக்கப்பட்டனர். துரதிஸ்டவசமாக இவ்வனர்த்தத்தின்போது சில உயிர்களையும் இழக்க நேரிட்டது. பலர் தங்களது இருப்பிடங்களையும், உடமைகளையும் இழந்து முகாம்களில் தங்களது அன்றாட கடமைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றது. இவ்வருடம் மண்சரிவு வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது அமைச்சினூடாக 525 வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்முறை வெகுவாக பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்டத்தில் 209 வீடுகள், காலி மாவட்டத்தில் 155 வீடுகள், கேகாலையில் 8 வீடுகள், நுவரெலியா மாவட்டத்தில் 100 வீடுகள், 525 வீடுகள், பதுளை மாவட்டத்தில் 53 வீடுகள் நிர்மாணிக்கப்படவிருக்கின்றன. இதேவேளை சிறிதாக பாதிப்புக்குள்ளான குடியிருப்புகளை மீள்புரணமைக்கும் வகையில் தற்காலிக நிவாரணமாக 6000 கூரை தகடுகளும் வழங்கப்படவிருக்கின்றன. இதற்கு மேலதிகமாக அவர்களுக்கான குடிநீர் வசதிகள், அத்தியவசிய பொருட்கள் போன்றவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு தகவல்கள் கோரப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக 2017ம் ஆண்டுக்கான எனது அமைச்சின் நிதியொதுக்கீட்டில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஹட்டன், நுவரெலியா, பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, காலி ஆகிய 7 பிராந்தியங்களுக்கூடாக 1968 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வகையான திட்டங்களை நாம் முன்னெடுக்கும் அதேவேளை இதுவரை மண்சரிவு பாதிக்குள்ளான, மண்சரிவு அபாயம் ஏற்படுமென எதிர்வு கூறப்படுகின்ற இடங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஏறத்தாழ 12000 வீடுகள் நிர்மாணிக்க தேவையிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்.