யுத்தம் முடிவடைந்தாலும் அதன் பாதிப்பின் வடுக்கள் தொடர்கின்றன-மடுவில் ரிஷாட்


அமைச்சரின் ஊடகப்பிரிவு-

யுத்தம் முடிவடைந்த போதும் யுத்தத்தின் வடுக்களால் மோசமாக பாதிக்கப்பட்டு இன்னும் தலைதூக்க முடியாத பிரதேசங்களில் ஒன்றாக இருக்கும் மடுப் பிரதேசத்தை முன்னேற்ற வேண்டிய கடப்பாடும், பொறுப்பும் நமக்கு உண்டென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் மடுப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் கீரிசுட்டான் கிராமத்தில் பல்வேறு தேவைகளை இனங்கண்டு தீர்த்து வைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்று உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் மன்னார் மாவட்ட ஆயர் வண. கலாநிதி. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, மடு பங்குத் தந்தை மதன்ராஜ், உதவி அரசாங்க அதிபர் திரு. டீ.மெல், மடு பிரதேச செயலாளர் சத்திய ஜோதி, வண ஜெயபாலன், அமைச்சரின் இணைப்பாளர்களான செல்லத்தம்பு மற்றும் நந்தன், உப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.எம். அமீன், நிறைவேற்று பணிப்பளர் மார்க் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். கிராமத்தின் தேவைகள் தொடர்பாக ஊர் பிரமுகர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் அமைச்சர் உரையாற்றினார்.

அவர் கூறியதாவது,

மன்னார் மாவட்டத்திலே குறிப்பாக மடுப் பிரதேசத்திலே யுத்தம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை நாம் அறிவோம். இதனால் மடுவின் கல்வி வளர்ச்சி பின்னடைந்தது. கடந்த காலங்களில் வடமாகாண முன்னாள் ஆளுநரின் உதவியுடன் இந்தப் பிரதேசத்திற்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து கல்வியை ஊக்கப்படுத்தினோம். அரச அதிகாரிகளும், அலுவலர்களும், ஆசிரியர்களும் இந்தப் பகுதியில் பணி புரிவதற்கு தயக்கம் காட்டிய ஒரு காலம் இருந்தது. அந்த நிலை இப்போது மாறி வருவது மகிழ்ச்சி தருகின்றது. மடுப் பிரதேச கல்வி வளர்ச்சியில் முன்னேற்றம் காண்கின்றோம்.

கீரிசுட்டான் சின்னஞ்சிறிய கிராமமாயினும், பென்னம்பெரிய தேவைகளை கொண்டிருப்பதை நாம் உணர்கின்றோம். கல்வி, சுகாதாரம், விவசாயம், பாதை போன்ற விடயங்களில் இந்த மக்கள் பல்வேறு கஷ்டங்களையும், பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருகின்றனர். மடுப் பிரதேசத்திற்கான பங்கு தந்தை அவர்கள், இந்த மக்களின் நலன்களில் அக்கறையுடன் செயற்படுபவர். ஊர் மக்கள் படுகின்ற அவஷ்தைகளை தீர்த்து வைக்க வேண்டுமென்ற உண்மையான எண்ணத்தில் அவர் தனது ஆன்மீக கடமைகளுடன் மக்கள் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதில் தனது நேரத்தை செலவிடுகி;ன்றார். மனித நேயத்துடன் பாடுபடுகின்றார். அதே போன்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளையுடன் நான் முன்னர் இணைந்து பணியாற்றி இருக்கின்றேன். மீள் குடியேற்ற அமைச்சராக நான் இருந்த போது மட்டு – திருமலை ஆயராக அவர் பணியாறறியவர்;. அகதிகளின் நல்வாழ்வுக்காக அவரின் ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற்று பணியாற்றியிருக்கின்றேன்.

வீதி அபிவிருத்தி அமைச்சரின் உதவியைப் பெற்று கிராமத்துக்கான பாதைகளை புனரமைப்பதற்காக நடவடிக்கை எடுப்பேன். தேவை ஏற்படின் அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றையும் சமர்ப்பிக்க எண்ணியுள்ளேன். வருட முடிவிற்குள் இவ்வருடத்திற்கான நிதி ஒதுக்கீட்டை முடிந்தளவு பெற்று பாதையை புனரமைப்போம்.

இந்தக் கிராமத்தின் வைத்திய வசதி கருதி ஆரம்ப மருத்துவப் பிரிவொன்றை அமைத்து தரும் வகையில் 2018ம் ஆண்டுக்குள் அந்த திட்டத்தை உள்வாங்குமாறு மாகாண சுகாதார பணிப்பாளரை கோரியுள்ளேன். ஒரு வைத்தியர், நான்கு மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட இந்தப் பிரிவில் வைத்தியசாலைக் கட்டிடத்திற்கென 15மில்லியனும், வைத்திய தங்குமிடத்திற்கென 50லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்ப வைத்தியசாலை பூரணமாக்கப்படும்.

மாணவர்கள,; பயணிகளின் வசதி கருதி 5லட்சம் ரூபா செலவில் பஸ் தரிப்பிடம் ஒன்றும் அமைத்து தரவேண்டுமென்ற உங்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும். அத்துடன் இந்தப் பிரதேசத்தில் அமைந்துள்ள குளத்தை புனரமைப்பதற்கான மதிப்பீட்டை தந்துதவுமாறு நீர்ப்பாசன திணைக்கள உதவி ஆணையாளரிடம் கேட்டிருக்கின்றேன்.

இந்தக் கிராமத்தில் உற்பத்தியாகின்ற விளை பொருட்களை சந்தைப்படுத்துவதற்காகவும் வெளியில் கொண்டு சென்று விற்பனை செய்வதற்காகவும் ஒழுங்கான அமைப்பு இல்லாத குறை நிவர்த்தி செய்யப்படும். அது தொடர்பில் உங்கள் ஆலோசனைகளையும், திட்டங்களையும் எதிர்பார்க்கின்றோம். கிராம மக்களின் ஒத்துழைப்புடன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பழரச உற்பத்தி தொழிற்சாலை ஒன்று நிறுவுவதற்கு வகை செய்யப்படும்.

இளைஞர்களினதும், மாணவர்களினதும் உடற் பயிற்சி தேவைகளைக் கருத்திற் கொண்டு விளையாட்டு மைதானத்தை துப்பரவு செய்து அங்கே அரங்கு ஒன்று அமைத்து தர நடவடிக்கை எடுப்போம் . இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் வணக்கத்துக்குரிய ஆயர். கிங்ஸ்லி சுவாம்பிள்ளை உட்பட பலர் உறையாற்றினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -