கபடத்தனத்திற்கும் எல்லை இருக்கின்றது - நல்லாட்சியின் அமைச்சரை நோக்கி வை.எல்.எஸ்

ரமளானில் முடிந்த அளவு அரசியல் பதிவுகளைத் தவிர்க்க முயற்சித்தாலும் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக வெளியில் இருந்தும் உள்ளே இருந்தும் பின்னப்படுகின்ற கபட வலைகள் உள்ளத்தில் ஏற்படுத்துகின்ற தாக்கம் அந்த கட்டுப்பாட்டையும் மீற வைக்கின்றது. முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றி ஒவ்வொரு நாளும் சிந்திப்பதற்கு ஒரு முஸ்லிம் கடமைப்பட்டவன்; என்ற அடிப்படையில் அந்த சமூக உணர்விற்கு அல்லாஹ்விடத்தில் நற்கூலி கிடைக்கும்; என்ற நம்பிக்கையில் இப்பதிவு இடப்படுகிறது.

இன்று முஸ்லிம் அமைச்சரொருவர் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது நேற்று ஞானசார தேரர் விடுவிக்கப்பட்டது தொடர்பாக கடுமையாக அரசைச் சாடுகிறார். ( இந்த அரசில் தொடர்ந்தும் அவர் பங்காளியாக இருக்கின்றார்; என்பது அவருக்கு நினைவுக்கு வரவில்லை; போலும், பொதுமக்களும் அரசுக்குத்தான் ஏசுகின்றார்கள். இவர்களும் பொதுமக்களிடம் வந்து அரசுக்கு ஏசுவதானால் இவர்களை எதற்க்கு பொதுமக்கள் தெரிவு செய்தார்கள் ?)

அதன்பின் 22 லட்சம் முஸ்லிம்களும் யானை, பூனை என்று பிரிந்துவிடாமல் ஒரு தலைமைத்துவத்தின், ஒரு கட்சியின் கீழ் ஒன்றுபட அழைப்பு விடுக்கின்றார். பிரித்தானியாவில் வெறும் பத்து ஆசனங்களைக்கொண்ட சிறிய கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து ஆளும்கட்சி ஆட்சியமைத்திருக்கும் நிலையை சுட்டிக்காட்டி இலங்கையிலும் முஸ்லிம் சமூகம் ஒரு கட்சியின் கீழ் ஒன்றுபட்டால் முஸ்லிம்களைப் பாதுகாக்கலாம் ; என்று மீண்டும் தன் நிலையை வலியுறுத்துகிறார்.

ஏதோ, இப்பொழுது இவர் அரசாங்கத்தில் இல்லை. இவரது முட்டில் அரசாங்கம் தங்கியிருக்க வில்லை. அடுத்த தேர்தலில் ( அதுவரை இன்ஷா அல்லாஹ் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருந்தால்) அவருக்கு மொத்த முஸ்லீம்களும் வாக்களித்து அவர் அடுத்து வரப்போகும் அரசுக்கு முட்டுக் கொடுத்து முஸ்லீம்களின் பிரச்சினைகளைத் தீர்த்துத் தருவார். அதுவரை எல்லோரும் ஞானசாரவிடம்போய் சரணடைய வேண்டியதுதான்.

இன்று பெரும்பான்மையில்லாமல் முஸ்லிம்களின் முட்டில் தங்கியிருக்கின்ற அரசு இவர்களைக் கால் தூசுக்கும் கணக்கெடுக்கத் தயாராக இல்லை. அவ்வாறு கணக்கெடுத்திருந்தால் ஞானசார நேற்று விடுதலையாகி இருக்க முடியுமா? ஆனால் இவர்கள் சூடு, சுரணையில்லாமல் அரசில் ஒட்டிக்கொண்டுதான் இருப்பார்களாம். அடுத்த தேர்தலிலும் ஒட்டுப் போடட்டாம். பிரித்தானியாவில் சிறிய கட்சி அரசுக்கு முட்டுக் கொடுப்பதுபோல் இவர்களும் முட்டுக்கொடுத்து பிரச்சினைகளை வென்று தருவார்களாம். இன்றைய பலவீனமான அரசிலேயே முட்டுக்கொடுத்து, ஏற்கனவே பறிகொடுத்த பன்னிரண்டாயிரம் ஏக்கர் போதாதென்று ஒரு லட்சம் ஏக்கர் காணிகளைப் பறிகொடுத்தவர்கள், நாட்டின் மொத்த முஸ்லிம் சமுதாயமே அழுதுகொண்டிருக்கும்போது ஒரு ஆணியைக் கூட பிடுங்க முடியாதவர்களுக்கு அடுத்த தேர்தலிலும் வாக்களிக்கட்டாம், பிரச்சினைகளை வென்று தருவதற்கு.

இவர்கள் தனது கையாலாகத்தனத்தை மறைத்து கொஞ்சம்கூட மனச்சாட்சி குத்தாமல் இப்படியெல்லாம் பேசுகின்றார்கள்; என்றால் முஸ்லிம்களை எவ்வளவு ஏமாந்த சமூகமாக கணக்குப் போட்டிருக்க வேண்டும். அவர்களின் கணக்கிலும் தப்பில்லையே! ஏனெனில் ' தம்பி மாடுமாதிரி நல்ல பிள்ளை' என்று யாராவது சொன்னால், நம்மை ' மாடு' என்று சொல்கிறானே!, என்பதைப் புரிந்துகொள்ளாமல் ' நல்ல பிள்ளை' என்று சொல்லுவிட்டாரே, என்று சந்தோசப் படுகின்ற சமூகம்தானே, நாம். அவர்கள் சரியாகத்தான் கணக்குப் போட்டிருக்கின்றார்கள்.

இல்லை என்றால், பாராளுமன்றத்தில் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் பேசியவர்களைப் பேசவே இல்லை என்றும் தமிழில் பேசியவர்களைத்தான் பேசினார்கள் என்றும் மகிழ்ச்சி அடைவோமா? பாராளுமன்றத்தில் மூன்று பாசையிலும் பேசலாம். ஆனால் எந்தப் பாசையில் பேசினால் நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் அதிகமாக போய்ச்சேரும். எந்தப் பாசையில் பேசினால் நம்மை அதிகமாக வந்து சேரும்; என்ற வித்தியாசமே புரியாமல், தமிழில் பேசியது எனக்கு புரிந்து விட்டது. எனவே முழு நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் புரிந்திருக்கும்; என்று சந்தோசப்படுகின்றன சமூகம்தானே நாம். தமிழ் நாட்டில் இரண்டு வெள்ளைக்காரர்கள் பேசிக்கொண்டிருந்தார்களாம். அருகே நின்ற ஒருவர் அவர்கள் பேசியதைப் புரிந்துகொள்ள எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லையாம். அப்பொழுது அவர்கள் சிரித்தார்களாம். அது மட்டும் அவருக்குப் புரிந்து விட்டதாம். வந்து நண்பர்களிடம் சொன்னாராம், அவர்கள் ஏதோவொரு பாசையில் பேசினார்கள்; ஒன்றும் புரியவில்லை. ஆனால் தமிழில்தான் சிரித்தார்கள்; என்று. அந்த நிலையில்தானே நாமும் இருக்கின்றோம். ( பல வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டு சஞ்சிகை ஒன்றில் வாசித்தது)

அதுமட்டுமா? தமிழில் பேசுகின்றபோதாவது, இந்த இனவாதப் பிரச்சினைக்கு அரசு தீர்வு தராவிட்டால் பதவிகளைத் தூக்கிவீசுவோம்; என்று பாராளுமன்றத்தில் சொல்வதற்கு இவர்களுக்கு மனசு வரவில்லையே! அரசு எப்படி இவர்களைக் கணக்கெடுக்கும். மாறாக, என்ன சொன்னார்கள் தெரியுமா? ' இளைஞர்கள் ஆயுதமேந்துவார்களாம்.' என்று சொன்னார்கள். அதாவது, அவர்கள் அமைச்சுப் பதவிகளில் சொகுசாக இருந்து அனுபவிப்பார்களாம்; ஆனால் வாலிபர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவார்களாம். இஸ்லாமிய இளைஞனே! அறிவின் சிகரம் வீரர் அலியின் ( ரலி) வழியில் வந்தவனே! தன்பதவியைப் பாதுகாத்துக்கொண்டு உன்னைக் காட்டிக்கொடுத்ததைக் கூட நீ புரிந்துகொள்ளாமல் சிரித்தாயே! உன்னை வீரன் என்று சொன்னதாக சந்தோசப்படத் தெரிந்த உனக்கு உன் அறிவைக் கூர்மைப்படுத்தி உன்னை ஏன் வீரனென்றார்; தன் பதவி பறிபோய்விடக் கூடாது; என்பதற்காகத்தானே! என்பதை ஏன் உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

உனக்கு ஒரு கதை சொல்கிறேன், கேள்: ஒரு நாள் ஒரு விமானம் மேலே கிளம்பியதும்தான் விமானிக்குப் புரிந்ததாம், விமானம் அதிக பாரத்தை ஏற்றிக்கொண்டதை. ( overloaded) . உடனே விமானி அறிவித்தாராம்; ' யாராவது மூன்று பேர் கீழே குதித்தால் ஏனையவர்களின் உயிர்களைக் காப்பாற்றலாம். இல்லையெனில் எல்லோரும் சாகவேண்டிவரும்' என்று.

சற்று அமைதிக்குப் பின் ஒருவர் எழுந்து; அவரது சாமியை வணங்கிவிட்டு தனது நாடு வாழ்க, என்ற கோசத்தை எழுப்பிவிட்டு கீழே பாய்ந்தாராம். சற்று நேரத்தில் இன்னொருவரும் அவ்வாறே பாய்ந்தாராம். இப்பொழுது நிசப்தம் நிலவியதாம். இருவர் பாய்ந்தும் பிரயோசனம் இல்லை, மூன்றாமவர் பாயாவிட்டால். மூன்றாமவர் யார்? என எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க, ஒருவர் எழும்பினாராம். இப்பொழு எல்லோரும் அவரைக் கையெடுத்துக் கும்பிட்டார்களாம். ஏனெனில் இவரும் பாய்ந்துவிட்டால் ஆபத்து நீங்கிவிடும் என்பதனால். அந்த நபரும் தான் வணங்கவேண்டியதை வணங்கிவிட்டு, தனது நாடு வாழ்க! என்று கோசமும் எழுப்பிவிட்டு , இவர் பாயப்போவதை எல்லோரும் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருக்க , ' அருகே இருந்த ஒருவரை கீழே தள்ளிவிட்டு ஆசனத்தில் அமர்ந்து கொண்டாராம்.


பார்த்தாயா, உனைக்கீழே தள்ளிவிட்டதைக்கூட உணர்ந்துகொள்ள முடியதவனாய் இருக்கின்றாயே!
நீ எதற்காக ஆயுதம் தூக்க வேண்டும். நீ போட்ட ஓட்டு ஆட்சிக்கு முட்டுக்கொடுக்கொடுக்க, முட்டுகள் சௌகரியமாய் அனுபவிக்க வேண்டியவற்றை அனுபவிக்க நீ ஆயுதம் தூக்கவேண்டுமாம். உன் சொந்த பந்தங்கள் அழிய வேண்டுமாம். இதில் ஆகப் பெரிய கபடத்தனம் என்ன தெரியுமா? பாராளுமன்றத்தில் உன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டு சாய்ந்தமருதுக்கு வந்து, முஸ்லிம்களுக்கு பாதிப்பு வந்தால் தன் அமைச்சுப் பதவியைத் தூக்கி வீசுவார்களாம். ( எத்தனையாவது தடவை என்று கேட்காதே!) ஏன்? இன்னும் முஸ்லிம்களுக்கு பிரச்சினை வரவில்லையா? அல்லது இதை ஏன் பாராளுமன்றத்தில் சொல்லவில்லை.
'தம்பி மாடுபோல நல்ல பிள்ளைகளான நமக்கு இது எதுவும் புரிவதில்லையே!


ஐ தே கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் உம்றாவில் இருந்து திரும்பியதும் முதலாவது சொன்னது, இதை இனியும் பொறுக்க முடியாது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஒரு முடிவு எடுக்கவேண்டும், என்று. அந்த மரிக்காருக்கு இருக்கின்ற உணர்வுகூட, நமது தேசிய, சர்வதேச, பிரபஞ்சத் தலைவர்களுக்கு இல்லையே!

இந்த லட்சணத்தில 22 லட்சம் முஸ்லிம்களும் அடுத்த தேர்தலில் ஓட்டுப் போடட்டாம். பிரித்தானிய சிறிய கட்சி போன்று இவர்களும் முட்டுக்கொடுத்து பிரச்சினைகளைத் தீர்த்துத் தருவார்களாம்.

ஒரு முஸ்லிம் ஒரு பொந்தில் இருதடவை கையை விடமாட்டான். ( ஹதீஸ்). எனவே, இனியும் சிந்திக்க மாட்டாயா? ரமளான் இன்னும் முடியவில்லை. இனியாவது உனக்கு நல்ல புத்திவர பிரார்த்தனை செய்.

வஸ்ஸலாமு அலைக்கும்.
வை எல் எஸ் ஹமீட்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -