சுஐப் எம்.காசிம்-
யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும், மீள்குடியேறத் துடிக்கும் யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட்டுக்கொண்டிருப்பதை விடுத்து, முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சகல கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் முக்கியஸ்தர்களும் உதவ வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
யாழ் கச்சேரியில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகள் தொடர்பாக இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம் ஏ சுமந்திரன், அங்கஜன் இராமநாதன், மாகாண சபை உறுப்பினர்களான ஐயூப் அஸ்மின், இமானுவேல் ஆர்னோல்ட் மற்றும் வடக்கு மீள்குடியேற்ற செயலணியின் பணிப்பாளர் யாசீன் உட்பட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
அமைச்சர் கூறியதாவது,
முஸ்லிம்களை மீள்குடியேற்றுவது உங்கள் அனைவரின் தார்மீகப் பொறுப்பாகும். மனிதாபிமான ரீதியில் அணுகப்பட வேண்டிய இந்தப் பிரச்சினையை வெறுமனே சட்டத்திட்டங்களைப் பிரயோகித்தும் சுற்று நிருபங்களை கையில் எடுத்துக்கொண்டு செயற்படுவதன் மூலமும் தீர்க்க முடியுhது. ஏற்கனவே நொந்து போயிருக்கும் இந்த மக்களுக்கு தொடர்ந்தும் நோவினையை உருவாக்குவதாகவே அது முடியும்.
மனச்சாட்சியின் அடிப்படையில் அரச அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் பணியாற்றினால் இந்தப் பிரச்சினை எப்போதே முடிந்து இருக்கும். யாழ்ப்பாண மாவட்டச் சனத்தொகையுடன் ஒப்பிடும் போது மீளகுடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமானதே. எனவே அதிகாரிகள் சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டு இருக்காமல் சகோதர இனம் என்ற உண்மையான எண்ணத்தில் இந்தப் பிரச்சினையை அனுகினால் இது ஒரு பெரிய பிரச்சினையே அல்ல. இல்லாவிட்டால் குடியேற்றுவதா? இல்லையா? என்ற முடிவை மேற்கொண்டு பகிரங்கமாக அறிவியுங்கள்.
முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் யாழ் கச்சேரியில் நான் பங்கேற்ற பல கலந்துரையாடல்களிலும், கூட்டங்களிலும் எடுக்கப்பட்ட முடிவுகளும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளும் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதை மிகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றேன்.
மீள்குடியேற்றத்திற்கு யாழ் மாவட்டத்தில் காணிப் பற்றாக்குறை இருப்பதாக அதிகாரிகள் அப்போது சுட்டிக்காட்டிய போது, ஏதாவது ஒரு குறித்த இடத்தை இனங்கண்டு தந்தால் அரசாங்கத்தின் உதவியுடனோ அல்லது அரபு நாட்டு நிறுவனங்களின் உதவியுடனோ அல்லது பரோபகாரிகளின் கூறியபோதும் நாம் இற்றைவரை அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவுமில்லை. எந்த அறிக்கையும் தயாரிக்கப்படவுமில்லை.
நான் வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதத்துவப்படுத்துபவன். யாழ் மாவட்டத்தின் அரசியல் தலைமைகளும், அரச அதிகாரிகளும் திட்டமிட்டு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை முன்னெடுத்திருந்தால் இந்த மக்கள் எமது உதவியை நாடியிருக்கமாட்டார்கள்.
மீள்குடியேற்றச் செயலணியின் மூலம் வீடுகளை கட்டிக்கொடுக்க நாங்கள் பணம் ஒதுக்கிய போதும் அதற்கும் தடைபோடும் நிலையே இன்னும் இருக்கின்றது. அண்மையில் 200 வீடுகளை அமைத்துக் கொடுக்க நாங்கள் முன்வந்தபோது, 69 வீடுகளுக்கே அனுமதி தரப்படும் என கூறப்பட்டு ஈற்றில் 29வீடுகளே சிபாரிசு செய்யப்பட்டிருக்கின்றன. இது தான் இன்றைய முஸ்லிம்களின் நிலை. கூட்டிக்கழித்து பார்க்க போனால் ஆக சுமார் 700 குடும்பங்களே மீள்குடியேற தயாராகியுள்ள நிலையில் 500 குடும்பங்களுக்கே பிரச்சினை இருக்கின்றது. இந்தப் பிரச்சினையை தீர்த்து வைப்பதிலே இத்தனை இழுபறிகள். பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளை தேடிப் போகும் போது ஆயிரம் கேள்விகளை அவர்களிடம் கேட்டு அவர்களின் மனதை நோகடிக்கின்றீர்கள். புத்தளம், வெள்ளவத்தை, நீர்கொழும்பு, மன்னார் ஆகிய பகுதிகளில் இந்த மக்களுக்கு இன்னும் வேறு வீடுகள் இருக்கின்றதா? எனத் தேடி பார்க்கும் துர்ப்பாக்கியத்தை காண்கின்றோம்.
இந்த வருடம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறவுள்ள மீலாத் விழாவையொட்டி 500வீடுகளை அமைத்து தரலாம் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தப் பின்னணியில் இந்த மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு இதுவும் உதவும் என நம்புகின்றேன்.
இத்தனை வருட காலம் தென்னிலங்கையில் வாழ்ந்து, அந்த பிரதேசத்தில் கால் பதித்துவிட்ட மக்கள் இங்கு வந்து ஓரேடியாக வாழ்வதற்கோ பிள்ளைகளை கற்பிப்பதற்கோ பொருத்தமான வீடு இல்லாததாலேயே அங்கே ஒரு காலும், இங்கே ஒரு காலும் வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. எனவே கருத்தொருமிப்புடன் செயலாற்றி இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் என அமைச்சர் வேண்டினார்.
முஸ்லிம் மக்களின் எழுத்து மூலமான பல்வேறு கோரிக்கைகள் அங்கு பரீசிலிக்கப்பட்டு இதற்கான பொருத்தமான தீர்வுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.