பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது அல்லது மறுசீரமைப்பு செய்வது தொடர்பில் இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீதி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்ற புரிந்துணர்வு சர்வதேச அமைப்புக்கள் மற்றும் இலங்கை அரசாங்கம் என்பவற்றுக்கிடையில் காணப்பட்டது. இதன் கருத்து அச்சட்டத்தை முழுமையாக நீக்கிவிடுவதன்று. ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கை நீதிமன்றம் தொடர்பில் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு அமைச்சர் மறுப்புத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையைக் கண்டபோது தனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார். நீண்ட காலத்துக்கு முன்னரேயே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.