என்.எம்.அப்துல்லாஹ்-
அண்மையில் தேசிய ஊடகமொன்று; கடந்த சில நாட்களாக பொதுபலசேனாவின் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றனவே இது குறித்து நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்? என்று கேட்டதற்கு பதிலளிக்கையில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் அவர்கள் பின்வருமாறு கருத்து வெளியிட்டார்
மனித உரிமைகள் விடயத்திலும், நல்லாட்சி விடயங்களிலும் முற்போக்கான மாற்றங்களை எதிர்பார்த்திருக்கின்ற தேசமொன்றில் இத்தகைய இனத்துவரீதியான தீவிரவாத விடயங்கள் ஆரோக்கியமானவையாக அமையாது. பொதுபலசேனா அமைப்பின் அடிப்படை நோக்கத்தை முஸ்லிம் மக்கள் புரிந்துகொள்ளவில்லையென்றும், பொதுபலசேனாவுடைய விடயத்திலே முஸ்லிம் மக்கள் பொறுத்தமான நகர்வுகளை போதுமன அளவிற்கு இதுவரை மேற்கொள்ளவில்லையென்றே நான் கருதுகின்றேன். பொதுபலசேனா அமைப்பு தங்களுடைய அடாவடித்தனங்களை முஸ்லிம் மக்களின் மீது கட்டவிழ்த்துவிடுகின்றபோது முஸ்லிம் மக்கள் பொதுபலசேனாவிற்கு எதிராக செயற்படுவார்கள்; இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு முரண்பாடு தோற்றம்பெறும்; அதன்மூலம் அழிவுகள் ஏற்படும்; இதன் அடிப்படையில் முஸ்லிம்-சிங்கள முரண்பாடொன்றை உருவாக்க முடியும், என்ற நோக்குடனேயே செயற்படுகின்றார்கள். பொதுபலசேனாவின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் விதமான முஸ்லிம் மக்களின் செயற்பாடுகள் அமைந்துவிடக்கூடாது, என்பது என்னுடைய நிலைப்பாடாகும். மாற்றமாக முஸ்லிம் மக்கள் தங்களுடைய செயற்பாடுகளை பின்வரும் ஒழுங்கிலே அமைத்துக்கொள்ள முடியும்.
இந்த நாட்டிலே பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஒவ்வொரு முஸ்லிமும் “இலங்கையன்” என்றே நோக்கப்படுதல் வேண்டும்; இந்த நாட்டின் அரசியல் சாசனத்தையேற்று, இந்த நாட்டின் அரசியல் பொருளாதார சமூக விவகாரங்களிலே பங்கெடுக்கின்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கவேண்டிய அத்தனை உரித்துக்களும் இந்த நாட்டின் முஸ்லிம் மக்களுக்கும் உரித்தானதாகும். அந்தவகையில் இந்த நாட்டிலே சட்டவிரோதமாக இடம்பெறும் எந்தவொரு நடவடிக்கையினாலும் இந்த நாட்டின் எந்தவொரு குடிமகனும் பாதிக்கப்படமுடியாது, அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே கொண்டிருக்கின்றது. அந்தவகையில் பொதுபலசேனாவின் அனைத்து அச்சுறுத்தல்கள், அடாவடித்தங்களுக்கும் உரிய சட்ட நடவடிக்கையெடுக்கவேண்டியது இந்த நாட்டின் அரசாங்கத்தைச் சார்ந்திருக்கின்ற விடயமாகும். எனவே நாம் அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கவேண்டுமே தவிர பொதுபலசேனாவை நோக்கி எமது கவனங்களைச் செலுத்திவிடக்கூடாது. பொதுபலசேனாவினால் அல்லது வேறு காரணிகளால் எமக்கு ஏற்படுகின்ற இழப்புகளுக்கு அரசாங்கமே வகைசொல்லவேண்டும், அரசாங்கமே அதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
“பொதுபலசேனா போன்ற தீவிரவாத அமைப்புகள் அதிகாரத்தில் இருக்கின்றவர்களின் அனுசரணையோடும், வெளிநாட்டு சக்திகளின் அனுசரணயோடுமே இயங்குகின்றார்கள்.” என்ற பரவலான நம்பிக்கை மக்கள் மத்தியிலே இருக்கின்றது; இதனை உறுதி செய்யும்விதமாக அரசாங்கமும் அவர்களுடைய விடயத்திலே சட்டத்தை அமுலாக்குவதில் எவ்விதமான கரிசணையுமின்றி இருப்பின் அது அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கையினை குறைத்துவிடுவது மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலே இலங்கை தொடர்பான அபகீர்த்தியை ஏற்படுத்தும் விடயமாக மாறிவிடும்.
பொதுபலசேனா விடயத்தைக் கையாள்வதில் இன்றுவரை முஸ்லிம் மக்கள் ஒரு சீரான ஒழுங்குமுறையினை ஏற்படுத்தவில்லை. இது ஒரு அடிப்படையான பிரச்சினையாகும். குறிப்பாக முஸ்லிம் மக்கள்சார் ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் பொதுபலசேனாவை முதன்மைப்படுத்தும் போக்கும், குறிப்பாக ஞானசாரர் என்கின்ற குற்றவாளியை முதன்மைப்படுத்தும் போக்கே அதிகரித்துக் காணப்படுகின்றது. இது தவறானதாகும். எமது அழுத்தங்கள் அனைத்தும் இந்த நாட்டின் சட்டம் ஒழுங்குத் துறையினையும், இந்த நாட்டின் நீதித்துறையினையும், இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தையும், நோக்கியதாக குவிக்கப்படுதல் அவசியமாகும். அவர்களே இவ்விடயத்தில் அமைதியை ஏற்படுத்தக் கடமைப்பட்டிருக்கின்றார்கள். என்றும் குறிப்பிட்டார்.