உடலையும் உள்ளத்தையும், நோயின்றி வைத்துக் கொள்ளும் நோன்பு

உடலையும் உள்ளத்தையும் நோயின்றி வைத்துக்கொள்ளவும், ஆசைகளிலிருந்தும், இச்சைகளிலிருந்தும் விடுதலை பெறவும், அல்லாஹ் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பை கடமையாக்கியுள்ளான்.நோன்பு என்பது, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இறை குணங்களை உணருவதற்கும், மன இச்சைகளைக் கட்டுப்படுத்துவற்குமான ஒரு வழிமுறையாகும்.

ஒரு நாளில் பத்துத் தடவைகளுக்கு மேல் டீ , கோப்பி மற்றும் குளிர் பானங்கள் அருந்துபவர்கள் இருக்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்குள் பல முறை பீடி, சிகரெட் என்று புகைப்பவர்களும், சதா வெற்றிலை பாக்குடன் வாயில் போட்டுக் குதப்புபவர்களும், நேரம் காலம் இல்லாமல் வயிறு புடைக்க உணவை உண்பவர்களும் இருக்கின்றார்கள்.இவர்கள் ஒருமாத 
காலம் அல்லாஹ்வின் கட்டளைப்படி நோன்பு இருப்பதன் மூலம், தமது உடல் முறையற்ற பழக்கங்களுக்கு உட்படாமலும், நோயின்பால் ஈர்க்கப்படாமலும் நன்முறையில் புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றது.நோன்பு என்பது, பசியை உணருவதற்காக அல்ல.

அல்லது தண்ணீரையோ, பழங்களையோ சாப்பிட்டு விட்டு உணவு உண்ணாமல் இருப்பதல்ல. சுமார் 14 மணிநேரம் வரை தண்ணீரையோ, உணவையோ உட்கொள்ளாமல் எந்த ஜீரண உறுப்புக்களுக்கும் வேலை கொடுக்காமல் இருப்பது தான் சிறந்த நோன்பாகும். அப்போது தான், உடல் தன்னிடம் தேக்கிவைத்துள்ள சக்தியை (Stored Energy)

உடலின் இயக்கதிற்குத் தக்கவாறு செலவிடும். அதனால், தேவையற்ற கொழுப்புக்கள் கரைக்கப்படும்.

ஆஸ்துமா என்பது நுரையீரல் சம்மந்தப்பட்ட ஒரு நோய். அதிகாலையில் ஆஸ்துமா நோயாளிகள் கஷ்டப்படுவதைப் பார்க்கின்றோம்.
ஆஸ்துமா நோய், அந்த அதிகாலை வேளையில் ஏன் அவர்களை எழுப்பவேண்டும் ... ?

சீன அகுபங்சர் மருத்துவத்தின் தத்துவப்படி, நமது உடல் உள் உறுப்புக்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட இயக்க நேரம் உள்ளது. (Biological Clock). மனிதன் நாள் முமுவதும் சுவாசித்தாலும், அவனது நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரம் அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும். நமது நுரையீரல், நாள் முழுவதும் இயங்குவதற்கான எனர்ஜியை, அந்த நேரத்தில் தான் வெளிப்புற பிரபஞ்ச சக்தியிலிருந்து கிரகித்துக் கொள்கிறது.

நாம் தூங்கும்போது ஐம்புலன்களும் முழுமையாக இயங்காமல் இருக்கும். தூக்க நிலையில் நுரையீரல் இயங்குவதை விட, விழித்திருக்கும் போது இயங்கும் சுவாசமானது, நுரையீரலை நன்முறையில் புதிப்பிக்கின்றது.இஸ்லாமிய பெருமக்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி நோன்பு காலங்களில் நோன்பு நோற்கவும், ஏனைய நாட்களில் அதிகாலையில் தொழுகைக்கு ( தஹஜ்ஜுத், பஜ்ர் ) ஆயத்தமாவதும், தமது நுரையீரலை சிறந்த முறையில் இயங்க வைக்க வேண்டும் என்கின்ற, நல்ல தத்துவத்தின் அடிப்படையிலான செயற்பாடுகளாகும்.

நோன்பு வைப்பவர்கள், அதிகாலை வேளையில் நோன்பிற்கான உணவை (சஹர்) சாப்பிடுவார்கள். அதன் மூலம், நாம் வழக்கமாக உண்ணும் உணவின் நேரம் திசை திருப்பிவிடப்படுகிறது. இதனால் அனைத்து நோய்களுக்கும் காரணமான வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்ற நமது ஜீரண உறுப்புக்களில் அமில சுரப்பிகள் குறைந்து, அவ்வுறுப்புக்கள் வலுப்பெற்று வயிற்று உப்புசம், தலைவலி, புளித்த ஏப்பம், மயக்கம், வயிற்று எரிச்சல், அடிக்கடி பசித்தல், மலச்சிக்கல் போன்ற பலவிதமான நோய் உபாதைகளிலிருந்து விடுதலை பெறுகிறோம். மேலும், நீண்டகால நோய்களுக்குக் காரணமாகவுள்ள, உடலில் தேங்கியுள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றன. நம் உடம்பில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைக்கப்படுகின்றன. "சஹர்" எனும் அதிகாலை உணவை, யாருக்கெல்லாம் சாப்பிடமுடியாமல் மயக்கம் ஏற்படுவது போலவும், வாந்தி வருவது போலவும் தோன்றுகின்றதோ அவர்களுடைய ஜீரண உறுப்புக்கள் கெட்டுப்போய், பித்தம் அதிகமாக தேக்கம் கொண்டுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

காலையிலிருந்து, மாலை நோன்பை முடிக்கும் நேரம் வரை, அடக்கி வைத்திருக்கும் உணவின் ஆசையை நோன்பு முடித்து, உணவு உண்ணும் நேரத்தில் கட்டுக்கடங்காமல் விட்டுவிடுவது, நோன்பின் அடிப்படைக் காரணத்தையே இது தகர்த்துவிடும்.

நோன்பை முடிக்கும் தருவாயில் அதிகமாக பசியும், தாகமும் இருப்பது இயற்கை தான். அதைப் பின் வருமாறு கடைப்பிடிப்பது நமது உடலுக்கு நல்லது.
நோன்பு துறக்கும் போது பலவித அமிலங்கள் சுரந்து வயிற்றில் நிறைந்து இருக்கும். அந்த அமிலங்களையும், வயிறு மற்றும் குடல்களில் உள்ள கசடுகளையும் நீக்கும் சக்தி வாய்ந்த மருந்து, சுத்தமான தேன் ஆகும். இது வயிற்றில் எரிச்சல், வயிற்று உப்புசம், புளித்த ஏப்பம், உணவு ஜீரணிக்காமல் இருத்தல், விக்கல் போன்ற பலவிதமான உபாதைகளை நீக்குவதுடன், உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கக்கூடியது.

* பேரிச்சம் பழத்தை தேனுடன் நனைத்து நன்கு மென்று சாப்பிடுவது நல்லது.

* எலுமிச்சம் பழச் சாற்றில் ஐஸ், சர்க்கரை சேர்க்காமல் இனிப்புக்கு ஏற்றவாறு, தேன் கலந்து மெல்ல மெல்ல பருகுவது நல்லது.

* எலுமிச்சம் பழச் சாற்றை விரும்பாதவர்கள் சாத்துக்குடி, அன்னாசி பழச்சாறு போன்றவற்றை தேனில் கலந்து சாப்பிடலாம். * சூடான பானங்களில் நோன்பு திறக்க விரும்புபவர்கள், காய்கறி சூப், நாட்டுக் கோழி சூப், ஆட்டு சூப் போன்றவைகளை காரம் சேர்க்காமல் சிறிது மிளகு, சீரகம் சேர்த்து உபயோகிக்க வேண்டும்.

* நோன்புக் கஞ்சி கொண்டு நோன்பைத் திறப்பவர்கள், முதலில் பேரிச்சம் பழத்தை நன்றாக மென்று சாப்பிடவேண்டும். அதன் இனிப்புச் சுவை நமது வயிற்றின் இயக்கத்தைத் தூண்டி, ஜீரணத்தை நிலைபடுத்தக் கூடியது. எந்த உணவுக்கு முன்பும் சிறிது இயற்கையான இனிப்பு வகை சாப்பிடுவது, வயிற்றின் இயக்கத்திற்கு நல்லது. 

* கஞ்சியுடன் பேரிச்சம் பழம், சிறிது தண்ணீர் தவிர வேறெந்த உணவையும் சேர்க்காமல் சாப்பிட வேண்டும்.

* எண்ணெய்யில் பொறித்தவைகளை, அவசியம் இயன்றளவு நோன்பு திறக்கும் நேரத்தில் தவிர்ந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் ஒரு மணி நேரம் கழித்து சாப்பிடுவது நல்லது.

* தேனீர், கோப்பியைத் தவிர்க்க முடியாதவர்கள், சுமார் அரை மணி நேரம் கழித்து சாப்பிட வேண்டும். 

* எண்ணெய் பலகாரங்களைத் தவிர்ப்பது நல்லது. அவ்வாறு தவிர்க்க முடியாதவர்கள், எண்ணெய்யில் பொரித்த பஜ்ஜி, வடை, சமோசா போன்றவைகளை உணவு உண்ணும்போது சேர்த்துச் சாப்பிடவேண்டும்.

* ஐஸ் மற்றும் குளிர் பானங்கள், சோடா, கோலா மற்றும் சீனி கலந்த பானங்களை பருகவே கூடாது. 

மேலே சொல்லப்பட்ட பானங்களில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு பருகிவிட்டு, சுமார் 45 நிமிடம் வரை எந்த உணவும் உண்ணாமல் இருக்க வேண்டும்.

இவ்வாறு சிறிது இடைவெளிக்குப் பிறகு உண்ணுவதால், உணவு நன்கு ஜீரணிக்கப்பட்டு வயிற்று உபாதைகள் இல்லாமலும், இரவு நேர வணக்கத்தில் ( தஹஜ்ஜுத் ) மயக்கம், தளர்ச்சி, சோர்வு, இல்லாமலும் உடல் நல்ல முறையில் இயங்கும்.

* அதிகம் சாப்பிட நினைப்பவர்கள் உணவை இரண்டு வேளையாக பிரித்து 7 மணிக்கு ஒருவேளையும், 10 மணிக்கு இன்னொரு வேளையுமாகச் சாப்பிடுட வேண்டும். 

* வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு கஷ்டப்படுபவர்கள், சிறிது சிறிதாக கொஞ்சம் வெந்நீர் அருந்தினால், ஜீரணத்திற்கேற்பவாறு வயிறு பதப்பட்டுவிடும்.

* "வருடா வருடம் நோன்பு வைக்க நினைக்கிறேன். ஆனால், என்னால் முடியவில்லை. எனது உடம்பு ஏற்றுக் கொள்ளவில்லை" என நினைப்பவர்கள் 
NUX VOMICA - 30c என்கின்ற ஜெர்மன் ஹோமியோபதி மாத்திரை ஒன்றை 20 மில்லி தண்ணீரில் நன்கு கரைத்து, நோன்பின் முதல் நாள் அன்று இரவு தூங்கச் செல்லும்போது குடித்துவிட வேண்டும். தேவைப்பட்டால், வீட்டில் உள்ள அனைவர்களும் சாப்பிடலாம். 

ஒரே ஒரு வேளை சாப்பிட்டால் போதும். 
மேற்கூறியவைகளைக் கடைப்பிடிப்பதால், 
"வருடம் முழுவதும் நோன்புக் காலமாக இருக்கக் கூடாதா ... ?" 
என, நமது மனதில் ஒரு புதிய மாற்றத்தை உண்டாக்கும்.
இம்மாதம் நாம் வைக்கும் நோன்பிற்கும், இதற்கு முன்பு நாம் வைத்த நோன்பிற்கும் இடையில் நிறைய வித்தியாசங்களை எம்மால் நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமான உடலையும், தெளிவான உள்ளத்தையும் கொடுத்து, நோன்பின் நன்மைகள் அனைத்தையும் பெறுவதற்கு நல்லருள் புரிவானாக ... !
ஆமீன் ... !

மெளலவி ஐ. ஏ. காதிர் கான் ( தீனிய்யா )

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -