ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
மத்திய அரசாங்கத்தின் விவசாயம் தொடர்பான எல்லாத் திட்டங்களும் மாகாண அமைச்சினூடாக, மாகாண திணைக்களங்களினூடாக அமுல்படுத்தப்படுவது விவசாயிகளுக்கு மிகுந்த நன்மையளிக்கும் என கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.எம். ஹுஸைன் தெரிவித்தார்.
ஆற்றுப்படுக்கைகளை அண்டிய மானாவாரி நெற்காணிகளில் விதை உற்பத்தி மற்றும் வர்த்தக ரீதியிலான நிலக்கடலை உற்பத்தி அறுவடை விழா மாவடியோடையில் வெள்ளிக்கிழமை மாலை 09.06.2017 இடம்பெற்றது.
கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது;
விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி றொஹான் விஜேகோன், அவர்கள் அடிமட்ட விவசாயிகளை ஊக்கபப்டுத்துவதில் அயராத அக்கறையோடு செயற்படுகின்றார். அதனடிப்படையில் அவரின் சிபாரிசின் பேரில் கடந்த வருடம் 50 மில்லியன் ரூபாவை கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களம் பெற்றுக் கொண்டுள்ளது. அதன் மூலம் பல்வேறு அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளன.
புதிய பணிப்பாளர் அவர்கள் விவசாயிகளுக்கு உள்ளீடுகள் தந்து ஊக்கப்படுத்தி இருக்கின்றார்கள், விவசாயப் போதனாசிரியர்களுக்கு புலமைப் பரிசில் தந்து சீனாவுக்குச் சென்று அவர்கள் கற்றுவர ஊக்கிவித்திருக்கின்றார்கள்.
விவசாயிகளின் நன்மை கருதி இயந்திரங்களை வழங்கவும் ஆயத்தமாக உள்ளார்கள். மாகாணங்களுக்கு உதவியை அளிப்பதன் மூலமே விவசாயத்தை பிராந்திய ரீதியில் மேம்படுத்தலாம் என்பதில் விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் உறுதியாக இருக்கின்றார். அரசாங்கத்தின் விவசாயக் கொள்கையினடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் விவசாயிகள் வழிவழி வந்த நெற்பயிர்ச் செய்கையைக் குறைத்து மரபு வழி உப உணவுப் பயிர்ச் செய்கையிலே அக்கறை காட்ட வேண்டும்.
நிலக்கடலை, கௌபி, பாசிப்பயறு, சோயா போன்றவற்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் விரிவாக்கம் செய்யவேண்டியுள்ளது.' என்றார். கரடியனாறு விவசாயத் திணைக்களப் பிரிவில் மாவடியோடை பிரதேசத்தில் மேற்படி நிலக்கடலை செய்கை கடந்த 2008, 2009ஆம் ஆண்டுகளில் 8 ஏக்கர் செய்கை பண்ணப்பட்டுவந்த நிலையில் அந்நடவடிக்கை விவசாயத் திணைக்களத்தின் வழிகாட்டலுடன் 2015இல் 300 ஏக்கரும், 2016இல் 500 ஏக்கரும் 2017இல் 700 ஏக்கருமாக படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டு சிறந்த முறையில் செய்கை பண்ணப்பட்டு வருகின்றது.
ஆற்று நீர் பாசனத்தை மேற்கொண்டு நிலக்கடலையுடன் வத்தகைப் பழம், எள் போன்ற பயிர் வகைகளையும் உற்பத்தி செய்து தாங்கள் அதிக இலாபமடைந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.