ஹஸ்பர் ஏ ஹலீம்-
நோன்பு என்பது அஸ்ஸவ்ம் என்று அழைக்கப்படுகிறது.உலக முஸ்லீம்கள் இதனை இம் மாதமான றமழானில் நோற்று வருகிறார்கள் ஆன்மீக ரீதியிலும் விஞ்ஞான ரீதியிலும் பல்வேறு நன்மைகளை தருகின்றது.
எனவே நோன்பு காலம் ஆரம்பித்துள்ள இக்காலப்பகுதியில் நோன்பு பற்றிய சில உண்மைகளை அறிந்து கொள்வது மிக பயனுடையதாக இருக்கும்.
ஒவ்வொரு முஸ்லிம்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.ஆண்கள் பெண்கள் பருவ வயதை அடைந்தோர் நிச்சயமாக நோன்பு நோற்க வேண்டும்.இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பு பற்றி புனித அல் குரான் இப்படி சொல்கிறது.ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள்மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள்மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)
ஒவ்வொரு வருடமும் 29 ,30 நாட்கள் விதிக்கப்பட்டுள்ள இந்த நோன்பினை நோற்பது கட்டாயம் ஆயினும் ஒருவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் அவர் குறிப்பிட்ட நோன்பினை பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்.எனினும் கடுமையான நோய் முதுமையினால் நோன்பு நோட்பதை கடினமாக கருதுபவர்கள் அதற்கு பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
புனிதமான ரமலான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் பருகாமல் இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருப்பினும் சில நிபந்தனைகளையும் இஸ்லாம் அளித்துள்ளது.புத்தி சுவாதியினமுற்றவர்,கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய் போன்றோருக்கு நோன்பை தவிர்க்க இஸ்லாம் அனுமதியளித்துள்ளது.
நோன்பு கற்று தரும் பாடங்கள் :-
தன்னடக்கம்
உடல் இச்சைகள், பாலியல் உணர்வுகள் மனிதர்களுக்கு இயற்கையாகக் கொடுக்கப்பட்டது. ஆனால், அது முறையற்று பயன்படுத்தப்படுமானால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இந்த உணர்வுகளை நோன்பு கட்டுப்படுத்தி நல்வழிப்படுத்துகிறது.
நாவடக்கம்
மனிதன் தன் பகுத்தறிவை மீறிப் பேசினால், மனித நிலையிலிருந்து பேசும் மிருகம் என்றாகி பெரும் விபரீதங்களை விளைவித்து விடுகின்றான். நோன்பு இதைக் கட்டுபடுத்துகிறது. நாவடக்கத்தைக் கற்றுத்தந்து நன்மையைத் தருகிறது
உணவுக் கட்டுப்பாடு, சமூக நலம் பேணுதல்
தவறான உணவுமுறையால் கொழுப்புகூடம் அபாயம் உள்ளது. அதைக் குறைக்கவும், அது சம்பந்தமான நோய்களிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கவும் நோன்பு பாரிய உதவி செய்கிறது. நுரையீரல் சிறப்பாக இயங்கக்கூடிய நேரமென மருத்துவ உலகம் சொல்லும் அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை 'ஸஹர்' செய்வதால் நுரையீரல் புத்துணர்ச்சி அடைகிறது. இதனால் மற்ற உறுப்புகளும் நன்கு இயங்க ஆரம்பிக்கின்றன. நோன்பின் மூலம் பசித்திருப்பதால் ஏழ்மையின் வலி உணரப்பட்டு ஏழைகளுக்கும், வறியவர், அநாதை, என்று தேவையுள்ளவர்களைத் தேடிச் சென்று உதவிக்கரம் நீட்டுவதை நோன்பு கற்றுக் கொடுக்கிறது. இவ்வாறான பல்வேறு நல்லொழுக்கத்தை வளர்க்க நோன்பு இன்றியமையாதது.
நோன்பின் மூலம் கிடைக்க பெரும் உடல் ரீதியான நன்மைகள்
நோன்பு இருப்பதன் மூலம் உடலில் பல்வேறு சாதக மாற்றம் உருவாகிறதெனவைத்தியர்கள் நிரூபித்துள்ளனர். நோன்பு இருப்பதன் மூலம் உடலின்அனைத்து பாகங்களும் ஓய்வெடுக்கின்றன. குறிப்பாக குடல் எனப்படும் வயிற்றின் முக்கிய உறுப்புக்கள், ஒரு மாதம் ஓய்வு பெறுவதன் மூலம் பலவிதமான நோய்களில் இருந்து மனிதன் காக்கப்படுகின்றான். நோன்பு வைப்பவர்கள் அதிகாலை வேலையில் நோன்பிற்கான உணவை (சஹர்) சாப்பிடுவார்கள். அதன் மூலம் நாம் வழக்கமாக உண்ணும் உணவின் நேரம் திசை திருப்பிவிடப்படுகிறது. இதனால் அனைத்து நோய்களுக்கும் காரணமான வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்ற நமது ஜீரண உறுப்புக்களில் அமில சுரப்புகள் குறைந்து அவ்வுறுப்புக்கள் வலுப்பெற்று வயிற்று உப்புசம், தலைவலி, புளித்த ஏப்பம், மயக்கம், வயிற்று எரிச்சல், அடிக்கடி பசித்தல், மலசிக்கல் போன்ற பலவிதமான நோய் உபாதைகளிலிருந்து விடுதலை பெற முடியும். நீண்டகால நோய்களுக்கு காரணமான தேங்கியுள்ள உடற் கழிவுகள் நீக்கப்படுகின்றன. நம் உடம்பில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன.
நோன்பு நோற்பவர்களின் இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகரிக்கும் என மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.இது பாக்டீரியா வைரசுகளை உடலில் சேராமல் பாதுகாக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இவ்வகையான அனைத்து நன்மைகளை பெற வேண்டுமாயின் இந்த நிபந்தனையை நாம் கடைபிடிக்க வேண்டும். ஆதமுடைய மகன் ஒரு கிண்ணம் நிறைந்த உணவை கொண்டு வயிற்றை நிரப்ப மாட்டான்.சிறிதளவு உணவு அவன் தேகத்துக்கு போதுமானது.தன வயிற்றின் மூன்றின் ஒரு பகுதியை உணவுக்கென்றும் மூன்றில் ஒரு பகுதியை நீருக்கென்றும் மிகுதியை காற்றுக்கென்றும் அவன் ஒதுக்கி கொள்வான் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தெரிவித்திருக்கிறார்கள்.
எனவே ஆன்மீக நோக்கத்தை அடிப்படையாக கொண்டு கடமையாக்கப்பட்டுள்ள நோன்பு மூலம் உடலையும் ஆன்மாவையும் ஒரு நிலைப்படுத்துவதோடு நல்லொழுக்கத்தையும் பழக்கப்படுத்தகி நோன்பின் அனைத்து நன்மைகளையும் பெற்று கொள்வோம்.