பாவங்கள் மன்னிக்கப்பட்டு ஈடேற்றம் பெறக்கூடிய மாதத்தின் புனித நாள் நோன்புப் பெருநாள் தினமாகும்.

சத்தார் எம் ஜாவித்-

இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளுள் நான்காவது இடத்தை வகிக்கும் கடமையே நோன்பாகும். இது இறைவனுக்கும் அடியானுக்கும் இடையிலானதொரு நேரடி இணைப்பை ஏற்படுத்தும் ஒன்றாகும். இந்தக் கடமையின் தாற்பரியம் இறைவனுக்கும், அடியானுக்கும் இடையிலான விடயங்களில் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ளதால் இது மிக மிக முக்கியத்துவம் உடையதாகும்.

ஒருவன் அதிகாலையில் இருந்து மாலை வரை எந்தவித ஆகாரமும் இன்றி அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளதுடன், இது அல்லாஹ்வையும், நோன்பை நோற்பவனையும் தவிர வேறு எவராலும் இந்தக் கடமையின் தாற்பரியத்தை கண்டு கொள்ளவோ அல்லது அறிந்து கொள்ளவோ முடியாத வகையில் அமைந்தள்ள கடமையாகும்.

இவ்வாறு இறைவனுடன் எந்தவிதத் திரையுமின்றி மேற்கொள்ளப்படும் இக்கடமையின் அர்த்தங்களும், நன்மைகளும் மட்டிட முடியாதளவு பெறுமதி வாய்ந்ததாகும். அத்துடன் ஒரு மனிதன் உண்மையான இறை பக்தியுடன் இறைவனிடம் கேட்கும் சகல விடயங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால்தான் அருமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புனித ரமழான் வந்து விட்டால் தனது அமல்களை அதிகரித்துக் கொள்வதுடன் அதிகமான நேரங்களை பள்ளிவாயில்களில் செலவிடுவதுடன் மற்றயவர்களுக்கும் இந்த மாதத்தில் செய்யக்கூடிய சிறந்த முக்கிய விடயங்களைக்கூட சொல்லிக் கொடுத்திருப்பதுடன் அதனை நடைமுறையிலும் காட்டிச் சென்றுள்ளார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் மனித சமுகம் எவ்வாறு வாழ வேண்டும் என்ற விடயங்களை சிறப்பான வகையில் உணர்த்தியுள்ளது. குறிப்பாக உணவு அருந்தும் விடயங்கள், மற்றவர்களுக்கு வாரி வழங்குதல், உதவிகளைச் செய்தல் போன்ற விடயங்கள் உள்ளிட்ட இஸ்லாமிய விழுமியங்களை வெளிப்படுத்தும் ஒரு மாதத்தின் இறுதி நாளின் மகத்துவம் இஸ்லாமிய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகவே இருக்கின்றது.

இஸ்லாத்தின் மூலாதராங்களின் முதன்மை வகிக்கும் புனித அல்குர்ஆன் இறங்கப்பட்ட மகத்துவம் மிக்க மாதமும் இந்த புனித நோன்பு மாதமாக இருப்பதால் இது இஸ்லாமிய மக்கள் கண்ணியம் கொடுக்கக்கூடிய ஒரு மாதமாகவே அமைந்துள்ளது. ஒரு மனிதன் ஆயிரம் மாதங்கள் செய்யும் நன்மைகளை விட இந்த மாதத்தில் வரும் ஒரு இரவான புனித லைலதுல் கத்ர் இரவானது அல்லாஹ்விடத்தில் ஏனைய மாதங்களையும், நாற்களையும் விடவும் பல மடங்க பெறுமதி வாய்ந்ததாகும்.

இவ்வாறானதொரு மகத்தான மாதத்தினை நிறைவு செய்யும் முகமாக தாம் பிடித்த நோன்பின் தாற்பரியங்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவும் அதன் மூலம் இம்மையிலும், மறுமையிலும் பிரதிபளிப்புக்களை இறைவனிடம் பெற்றுக் கொள்ளும் ஒரு நாளாகவும் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும் முடியுமான வரை உதவிகளையும் செய்யும் ஒரு நாளாகவும் புனித நோன்புப் பெருநாள் தினம் திகழ்கின்றது.

இந்த நாளில் ஒவ்வொரு மனிதனும் மனமுருகி இறைவனிடம் கேட்கும் எந்த துஆவையும் இறைவன் ஏற்றுக் கொள்ளாமல் விடுவதில்லை. இதன் காரணமாகவே தாம் பிடித்த நோன்புக்கான பிரதிகூலமாக அந்த நேன்புகளில் ஏற்பட்டிருக்கும் சிறு சிறு தவறுகளும் அல்லாஹ்விடம் மன்னிக்கப்படும் வகையில் ஒவ்வொரு முஸ்லிமும் பித்ரா எனும் கடமையை புனித நோன்புப் பெருநாளின் தொழுகைக்கு முன்னர் நிறைவேற்றுகின்றனர். குறிப்பாக ஒருவருக்கு இரண்டரைக் கிலோ எடையுள்ள அரிசியை பித்ராவாக ஏழை மக்களுக்கு வழங்குவது வழமையாகும். இதன் மூலம் சமுகத்தில் குறித்த பெருநாள் தினங்களில் எவரும் பட்டினி கிடக்காதிருப்பதற்கும் ஏழைகளும் நோன்புப் பெருநாளை பட்டினியில்லாமல் கொண்டாடுவதற்கும் இந்த நன்னாள் வழி சமைத்துள்ளது.

அத்துடன் வசதி படைத்தவர்களை அன்றாடம் உண்ண உணவின்றி பட்டிணி கிடக்கும் ஏழைகளின் நிலைமைகளை உணர்வதற்கும் அதன் மூலம் ஏழைகளுக்க வாரி வழங்கவதற்குமான ஒரு பாலமாகக்கூட நோன்பு எனும் புனிதக் கடமை விளங்குகின்றது.

எனவே இந்த புனித நோன்புப் பெருநாள் தினத்தில் ஒவ்வொருவரும் தாம் செய்த பவாங்களுக்கு இறைவனிடத்தில் மனமுருகி மன்னிப்புக் கேட்டு தமது ஈடேற்றங்களுக்கும், மறுமையின் விமோசனத்திற்கும் வழி சமைத்துக் கொள்வதன் மூலம் இந்த நன்நாளின் பலன்களைப் பெற்றுக் கொள்ளலாம். (அல்லாஹ் நம் அனைவரினதும் சகல பாவங்களையும் மண்ணித்துக் கொள்வானாக-ஆமீன்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -