ஏ.எஸ்.எம்.ஜாவித்-
வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென கொழும்பு மாவட்ட வர்த்தக சங்கத்தினரால் சேகரிக்கப்பட்ட ஒருதொகுதி உலர் உணவுப் பொருட்கள் அவர்களுக்கு வழங்கவென அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் வை.எம்.இப்ராஹிம், செயலாளர் தவஞானசூரியம் ஆகியோர் தலைமையில் இன்று (03) கொழும்பு பழைய சோனகத்தொரு வர்த்தக சங்கத் தலைவரின் அலுவலகத்திற்கு அருகிலிருந்து இந்நிகழ்வு இடம் பெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க மற்றும் மனோ கணேஷன் ஆகியோரும் வருகை தந்து உதவிப் பொருட்களை அனுப்பி வைத்தனர். சுமார் பன்னிரண்டரை (12½) இலட்சம் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்களில் ஓவ்வொரு பொதிகளும் சுமர் 2500 ரூபா பெறுமதியான 500 பொதிகள் இரண்டு பாரவூர்திகளில் இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டத்தில் உள்ள மத்துகம பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதன்போது பெருமளவான வர்த்தக சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
கொழும்பு மாவட்ட வர்த்தக சங்கத்தினர் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது பாதிக்கப்படும் மக்களுக்கு தமது உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் வெல்லம்பிட்டிய பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தலா ஆறாயிரம் ரூபாய் பெறுமதியான கேஸ் குக்கர்களை அமம்மக்களுக்கு வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.