பொருத்தமற்ற ஆசிரியர் இடமாற்றங்களை இரத்துச்செய்யுங்கள்: உதுமாலெப்பை MPC

எம்.ஜே.எம்.சஜீத்-
பொருத்தமற்ற காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்களை இரத்துச்செய்யுங்கள்: கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை அவசரப் பிரேரணை

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் இவ்வாண்டின் நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களினாலும், ஏனைய ஆசிரியர் இடமாற்றங்களினாலும் சிறந்த முறையில் இயங்கி வந்த பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதிபர்களும், ஆசிரியர்களும், கல்வி அதிகாரிகளும், பாடசாலை சமூகங்களும் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறது. மேலும் இந்நடவடிக்கைகளினால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளும், நிருவாக செயற்பாடுகளும் சீர்குலைந்து காணப்படுவதாக கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 79வது அமர்வு தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் இன்று (20) நடைபெற்றது. இதன் போது கிழக்கு மாகாணத்தில் பெருத்தமற்ற நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆசிரியர் இடமாற்றங்களினால் மாலணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருவதாகவும், அவ்விடமாற்றங்களை உடனடியாக இரத்துச்செய்யுமாறும் கோரி அவசரப் பிரேரனை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்…

குறிப்பாக அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகளில் புதிய சுற்று நிருபத்தின் படி 300 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்ற நிலையில் அக்கரைப்பற்று வலயத்தை சேர்ந்த 40 ஆசிரியர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். இதனால் அக்கரைப்பற்று வலய பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை, கா.பொ.த சாதாரண, உயர்தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ள இக் காலப்பகுதியில் இவ் ஆசிரியர் இடமாற்றங்கள் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் இவ்விடமாற்றங்காளல் க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆயத்தங்கள், பயிற்சிகள், நடாத்துவதில் தாமதங்கள் ஏற்படும் இதனால் பெறுபேறுகள் வீழ்ச்சியடையும், தூரநோக்கில் சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத தாக்கம் ஏற்படும். அதே போன்று புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை ஆற்றுப்படுத:துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பாரிய குழப்பநிலை ஏற்படும் இதனால் பரீட்சை பெறுபேறுகளில் பாரிய தாக்கம் ஏற்படும். வலய, மாவட்ட, மாகாண மட்டப் போட்டி நிகழ்வுகளுக்காக மாணவர்களை ஆற்றுப்படுத்துவதற்கான செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைவதன் காரணமாக மாணவர்களின் திறன் வளர்ச்சி பன்முக ஆளுமைத்திறன் வளர்ச்சியில் குந்தக நிலை ஏற்படுவதற்கு நிறைவான வாய்ப்புக்கள் உள்ளன.

அதேபோன்று சில அதிகாரிகளின் இடமாற்றங்காளால் கடந்த வருடம் நடைபெற்ற பெரும்பாலான கட்டிட வேலைகள் இன்றுவரை பூர்த்தியடையவில்லை குறிப்பாக அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தில் பூர்த்தியடைந்த வேலைகளுக்கான நிதிகள் வழங்கப்படாமை இடைநடுவில் இடமாற்றம் வழங்கப்பட்டால் நிதிசார் செயற்பாடுகளை கையாள்வதில் பாரிய சிக்கல் தன்மை ஏற்பட்டுள்ளது. அதிபர்கள் ஆசிரியர்களின் செயற்பாடுகளில் இயங்குதிறன் தன்மை மேற்பார்வை இல்லாமை காரணமாக குறைவடைந்து குழப்ப நிலை ஏற்பட்டு மாணவர்களின் ஒழுக்கநிலைகளுக்கு கூட பாதிப்புக்கள் ஏற்பட்டு எதிர்காலத்தில் ஆரோக்கியமற்ற சமூகம் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே உள்ளது.

க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேற்றில் கிழக்கு மாகாணம் ஏற்கனவே எட்டாவது (08) நிலையில் உள்ளது. வினைத்திறனான செயற்பாடுகள் குறைவடைவதன் காரணமாக ஒன்பதாவது(09) நிலைக்குப் போட்டி போட வேண்டிய நிலை கூட ஏற்படும். கல்விச் சமூகத்திலும், நடுவிலையாகச் சிந்திக்கும் பொதுச் சமூக மட்டத்திலும் திட்டமிட்ட பழிவாங்கல்கள் நடைபெறுகின்றது எனும் வலுவான சிந்தனை ஏற்பட்டு சமூக ஒத்துழைப்பை பெறுவதில் கூட உவப்பான தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் பூச்சியாகவே உள்ளது. இது எதிர்காலச் சமூகத்திற்கு கல்விக் கருமத் தொடரை கையாள்வதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நியமிக்கப்படும் புதியவர்கள் உடனடியாக உள்வாங்கி நிருவாகக் கட்டமைப்பை தனக்கு ஏற்றாற் போல் மாற்றி அமைத்து விடமுடியாது. அவ்வாறு மாற்றியமைப்பதற்கு குறைந்தது ஆறு(06) மாதங்களுக்கு மேற்செல்லும். அதற்கிடையில் எதிர்வரும் ஆகஸ்ட், டிசம்பர் மாதங்களில் அரச பொதுப் பரீட்சைகள் வந்துவிடும். நிருவாகத்தை மாற்றிவிடுவோம் என்ற தெளிவான நோக்கில்லாது குறுகிய நோக்கில் சிந்தித்துச் செயற்பட்டால் பாதிக்கப்படப் போவது நாமல்ல. எதிர்காலச் சமூகமும் எதிர்காலவ இருப்பியலுமே ஆகும் என்பது யதார்த்தமான உண்மையாகும்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை பொருத்தமற்ற முறையில் இடமாற்றங்கள் வழங்கி அவர்களின் மனநிலையில் குழப்பங்களை ஏற்படுத்திய நிலையில் ஆசிரியர் சமூகத்திடம் நாம் எதிர்பார்க்கும் கல்விச் செயற்பாடுகளை பெறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கல்முனை வலயத்தைச் சார்ந்த ஆசிரியர் தமது முதலாவது நியமனக் காலத்தின் போது கல்முனை வலயத்திற்கு வெளியே கடமையாற்ற வேண்டிய வருடத்தை பூர்த்தி செய்யாது, அதற்கு முன்னர் கல்முனை வலயத்திற்கு இடமாற்றம் பெற்று வந்தவர்களை அந்த கால கட்டத்தை நிறைவு செய்யும் வகையில் மீண்டும் வெளி வலயத்திற்கு அனுப்பபட்டுள்ளமை கவலை தரும் விடயமாகும். இதிலும் குறிப்பாக இன்னொன்றை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. வெளிவலயத்தில் 60 மாதங்களை பூர்த்தி செய்ய வேண்டிய ஒரு ஆசிரியயை 57 மாதங்களை நிறைவு செய்த நிலையில் அவருக்கு மீண்டும் மூன்று மாதங்கள் வெளி வலயத்திற்கு இடமாற்றம் வழங்கியிருப்பது பெரும் அநீதியாகும்.

எனவே, வருட நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாசிரியர் இடமாற்றங்களை ரத்து செய்து கிழக்கு மாகாண சபையினால் மிக விரைவில் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனங்கள் ஊடாக கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வுகளைக் காண்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதுடன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரினால் கிழக்கு மாகாண அமைச்சரவைக்கு சமர்ப்பித்த கிழக்கு மாகாணத்திற்கான தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கையினை அமுல்படுத்தி எதிர்காலத்தில் கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு தேசிய இடமாற்றக் கொள்கையூடாக ஆசிரிய இடமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 37 பேரும் கடந்த 2010ம் ஆண்டு தென் மாகாண சபைக்கு சிநேக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அந்த மாகாண சபை அமர்வுகளிலும் கலந்து கொண்டு அமைச்சுக்களின் செயற்பாடுகளையும் நாம் அவதானித்தோம். அவ்வேளையில் இரு மாகாண சபைகளின் உறுப்பினர்களுக்குமிடையில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலில் தென் மாகாண சபையில் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் எவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றது என்பது தொடர்பில் தென்மாகாண கல்வி அமைச்சரிடம் நான் வினவினேன். அப்போது அவர் தெரிவிக்கையில் நாங்கள் அரசாங்கத்தினதும், கல்வி அமைச்சினதும் சுற்று நிருபங்களை ஒருபுறம் வைத்துவிட்டு ஆசிரியர்கள் பாதிக்கப்படாத வகையில் இடமாற்றங்களை செய்து வருகின்றோம். 

மேலும் 20கிலோ மீற்றர் தூரத்திற்குள்ளே ஆசிரியர் இடமாற்றங்களை செய்து வருகின்றோம். இதனூடாக எங்களுக்கு எவ்வாறான பிரச்சினைகளும் தென்மாகாண சபையில் எழுந்ததில்லை எனத் தெரிவித்தார். ஒரே நாட்டில் ஒரே மாகாண சபை முறைமையின் கீழ் அமைந்துள்ள தென் மாகாணத்தில் 20கிலோ மீற்றர் தூரத்தில் ஆசிரியர் இடமாற்றம் செய்கின்ற முறைமை பின்பற்றப்படுகின்ற போது கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 200கிலோ மீற்றருக்கு அப்பால் இடமாற்றம் செய்கின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுகிறது. இவ்வாறான நிலை உடனடியாக சீர்செய்யப்பட வேண்டும்.

அக்கரைப்பற்று வலயத்தில் தற்போது 300 ஆசிரியர்கள் வெற்றிடம் நிலவும் இவ்வேளையில் பொத்துவில் மக்கள் பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் கோருவதற்கான பிரதான காரணம் அவர்களின் ஆசிரியர் பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, கல்வித் தேவைகள் தொடர்பான குறைபாடுகளாகும். அவர்களின் கோரிக்கை நியாயமானதாகும். இவ்வாறான வேளையில்தான் அக்கரைப்பற்று வலயத்தில் 40 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இச் செயற்பாடானது அவ்வலயப்பாடசாலை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -