பாதாளத்துக்குள் சென்று கொண்டிருக்கும் முஸ்லிம் மகளிர் கல்லூரி..!

எம்.ஏ.காதர்-
ம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் கல்விச் செயற்பாடுகள் அதல பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கின்றன. கல்லூரியின் வளர்ச்சியில் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் சுமார் ஏழு வருட காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்றுச் சென்ற கலாநிதி. ஹஜர்ஜான் மன்சூருக்குப் பின்னர் தற்காலிக அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்ற திருமதி. ரஸ்மியா அபூபக்கர், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளில் எந்தவிதமான அக்கறையும் காட்டாமல் நிர்வாக நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தாது அலட்சியப் போக்குடன் நடந்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதனால் பெற்றோர்களும், மாணவர்களும், பழைய மாணவர்களும், நலன் விரும்பிகளும், சமூக ஆர்வலர்களும் கல்லூரியின் எதிர்காலம் குறித்து கவலை கொண்டுள்ளனர்.

பதவியில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்ற அதிபர் ஒரு கலாநிதி. அது மட்டுமன்றி முஸ்லிம் பெண்களில் அவரே ஒரோயொரு கலாநிதி பட்டம் பெற்ற சிறப்பைக் கொண்டவர். அத்துடன் பல்வேறு பட்டங்களை பெற்றிருந்த அவர் சார்க் நாடுகளின் சார்பாக பாகிஸ்தானில் கல்வி நடவடிக்கைகளில் உயர் பதவியை வகித்த அனுபவம் கொண்டவர். கல்வித் திணைக்களத்தின் முஸ்லிம் கல்விப் பிரிவில் பணிப்பாளராக கடமையாற்றி முஸ்லிம் கல்வி வளர்ச்சிக்காக சமூக நல இயக்கங்களுடன் இணைந்து பாரிய பங்களிப்பைச் செய்தவர். அவர் மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து கல்வியில் கண்டிப்பாக இருந்தவர். தனது பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் மனம் போன போக்குக்கெல்லாம் இடமளியாது கற்பித்தலை புனித கடமையாக மெற்கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்புடன் இருந்து கல்வித் தரத்தை மேம்படுத்த பாடுபட்டார். மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தார். உத்வேகம் கொடுத்தார். பெற்றோர்களினதும் பழைய மாணவர்களினதும் அநாவசிய தலையீடுகளுக்கு அவர் என்றுமே இடமளித்ததில்லை.

கடந்த காலங்களில் இவர் அதிபர் பதவியை ஏற்கும் முன்னர் பாடசாலை நிர்வாகம் ஊழலும் முறைகேடுகளும் மாணவர் அனுமதியில் நிலவிய சீர்கேடுகளும் ஹஜர்ஜான் பாடசாலையை பெறுப்பேற்ற பின்னர் படிப்படியாக மறைந்து கல்லூரியின் நிர்வாகம் சீராக நடந்தது. ஆசிரியர்கள் கற்பித்தலில் அக்கறை காட்டியதோடு பெற்றோர்களும் பாடசாலைக் கல்வி முன்னேற்றத்துக்காக பல்வேறு வழிகளில் உதவினர். க.பொ.த சாஃத, உஃதரப் பரீட்சைகளில் மாணவிகள் நல்ல பெறுபேறுகளைப் பெற்றனர். உதாரணமாக 2016ஃ2017 ஆம் ஆண்டு க.பொ.த சாஃதரப் பரீட்சையில் 15 மாணவிகள் 9யு சித்தியையும் 12 மாணவிகள் 8யுஇ 1டீ யையும் 10 மாணவிகள் 7யுஇ 2டீ யையும் பெற்றிருப்பதை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தம். அதே போன்று 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளில் கடந்த காலங்களில் பின்னடைவு அடைந்திருந்த இந்த பாடசாலையின் நிலை, அனுமதிக்கான வெட்டுப்புள்ளி 175 ஆக உயரும் அளவுக்கு வந்தது. முன்னாள் அதிபரினதும் ஆசிரியர்களினதும் தியாக உழைப்பும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் கரிசனையும் ஒத்துழைப்புமே இந்த முன்னேற்றத்துக்கு காரணமாய் அமைந்தது என்பதில் இரண்டுபட்ட கருத்துக்களுக்கு இடமில்லை.

முன்னாள் அதிபர் கலாநிதி ஹஜர்ஜான், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம், நலன் விரும்பிகள் ஆகியோரின் அதீத முயற்சியினாலும் கொடை வள்ளல்களினதும் பரோபகாரிகளினதும் நிதியுதவியினாலும் இப் பாடசாலைக்கென கென்சிங்டன் வீதியில் கட்டப்பட்டுள்ள, தலை நிமிர்ந்து நிற்கும் 8 மாடிக் கட்டடம் கடந்த கால அர்ப்பணிப்புக்களின் பிரதிபலிப்பாக சான்று பகர்கின்றது.

கலாநிதி ஹஜர்ஜான் ஓய்வு பெற்றுச் சென்ற பின்னர் கல்லூரியின் அதிபர் பதவி இதே பாடசாலையில் நீண்ட காலம் ஆசிரியராக இருந்த திருமதி. அபூபக்கரின் கைகளுக்கு நினையாப்பிரகாரமாக மாறியது. இந்தப் பதவி அவருக்கு கிடைத்த பேரதிர்ஷ்டமாக அப்போது பலராலும் சிலாகிக்கப்பட்டது. பெற்றோர்களும் மூக்கின் மேல் கைவைத்தனர். கல்லூரியில் சும்மாயிருந்து காலத்தை கடத்த நினைத்து அதிபர் ஹஜர்ஜானின் பதவிக் காலத்தில் கவலையுடன் கற்பித்த ஆசிரியர்களும் குதூகலித்தனர்.

கல்வி அமைச்சின் திட்டமிடல் பிரிவின் சட்டதிட்டங்களின் படி ஓர் அதிபருக்கான தகைமைகளாக கல்வி நிர்வாக சேவையில் தரம் 1 அல்லது 11 ஐ குறித்த அதிபர் கொண்டிருக்க வேண்டும். ஆனால் தற்போதைய அதிபருக்கு மேற்கூறிய ததைமைகள் எதுவும் இல்லை. அவ்வாறில்லாவிட்டாலும் கூட, அடுத்த கட்டமாக அதிபர் சேவையில் தரம் 1 ஐக் கூடவேனும் இவர் கொண்டிருக்கவில்லை. ஆக அதிபர் சேவையில் தரம் 11 ஐ மாத்திரம் வைத்துக் கொண்டு முஸ்லிம் கல்லூரி எனும் கலாசாலை வண்டியை இவர் ஒன்றரை வருட காலம் ஓட்டி வருவதென்பது புதுமையானதுதான். ஆனால் அது மாணவர்களின் எதிர்காலத்தில் பாரிய ஒரு வீழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பது வேதனையானது. இந்த நிலை தொடர்ந்தால் மர்ஹ_ர் சேர் ராசிக் பரீத் முஸ்லிம் மகளிர் கல்வி வளர்ச்சிக்கென வழங்கிய இந்த சொத்து பாழாகும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

அது மட்டுமன்றி மும்மொழிகளிலும் கல்வியைப் போதிக்கும் இந்த பாடசாலையில் கற்கும் சுமார் ஏறத்தாழ 4,000 மாணவர்களின் எதிர்காலம் பாழாகக் கூடிய துர்ப்பாக்கியம் தற்போது ஏற்பட்டுள்ளது. மும்மொழிப் பாடசாலை ஒன்றின் அதிபருக்கு ஆங்கிலமோ சிங்களமோ தெரியாத கேவலமான நிலை இந்த பாடசாலைக்கு ஏற்பட்டுள்ளது. இந்த அதிபருக்கு பிற மொழிகளில் பரிச்சயம் இல்லாததால் நிர்வாக நடவடிக்கைகளில் இவர் கோட்டை விடுகின்றார். அது மட்டுமன்றி இந்த பாடசாலையில் கற்பிக்கும் மொழிவளமுள்ள ஆசிரியர்கள் இந்த அதிபரின் பலவீனத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, அவருக்கு மதிப்பளிப்பதாகவோ கட்டுப்படுவதாகவோ தெரியவில்லை. ஆசிரியர்கள் நேரத்துக்கு பாடசாலைக்கு வருவதில்லை. பாடசாலைக்கு வந்தாலும் வகுப்பறைக்கு முறையாகச் செல்வதுமில்லை. ஆசிரியர்கள் இளைப்பாறும் அறையில் கூட்டமாக அமர்ந்து கொண்டு வெட்டிப் பேச்சுக்களில் ஈடுபடுவதை வழக்கமாக்கி விட்டனர். அனேகமான ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வியில் எந்த அக்கறையும் காட்டுவதாகத் தெரியவில்லை. ஆசிரியர்கள் மீது அதிபர் கண்டிப்பில்லாததால், பல ஆசிரியர்கள் மாணவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற மனப்பாங்கில் பாடசாலைக்கு வருகின்றனர்.

மாணவர்களின் புறக்கிருத்திய செயற்பாடுகளுக்கு (வலய மட்ட, மாகாண மட்ட, தேசிய ரீதியில் நடாத்தப்படும் போட்டிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள்) எந்த விதமான ஊக்கமும் பாடசாலை நிர்வாகம் வழங்குவதில்லை. அது தொடர்பாக கல்வி அமைச்சு அனுப்பும் எந்தச்சுற்று நிருபத்தையும் அதிபர் கணக்கிலெடுப்பதில்லை. இதனால் பல சந்தர்ப்பங்களில் திறமையான மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பொதுப்பரீட்சைகளிலும் புலமைப்பரிசில் பரீட்சையிலும் திறமையாகச் சித்தி பெறும் மாணவர்களை இதுவரை காலமும் பாராட்டி கௌரவித்து வந்த நடைமுறை இப்போது இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏனைய மாணவர்களை ஊக்குவிக்கும் செயற்பாடு மழுங்கடிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி தனது நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை இவ்வாறான விழாவின் மூலம் ஒப்பிட்டு விடுவார்களோ என்ற அச்சமே அதிபரின் மனதில் குடிகொண்டிருப்பதாக நேர்மையுள்ள ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

எந்தவொரு விடயத்துக்கும் நிழக்ச்சிகளுக்கும் மாணவர்களிடமிருந்து பணம் சேகரிப்பதில்லை என அதிபர் ஹஜர்ஜானின் காலத்தில் பாடசாலை அபிவிருத்தி அபிவிருத்தி சங்கத்துடன் இணைந்து மேற்கொண்ட முடிவும் தடையும் தற்போது நீக்கப்பட்டுள்ளது. தற்போது “பழைய குருடி கதவைத் திறவடி” யாக அது மாறி மீண்டும் மாணவர்களிடமிருந்து மனம் போன போக்கில் பணம் வசூலிக்கும் ஒரு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில் இந்தப் பாடசாலை கல்விச் செயற்பாடுகளிலும் புறக்கிருத்திய செயற்பாடுகளிலும் படுகுழிக்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருப்பது பெற்றோர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தியிருக்கின்றது.

பெரும்பான்மை இனப் பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவோடிரவாக தகுதியானவர்களைக் கொண்டு அந்த வெற்றிடங்களை நிரப்பி வரும் கல்வி அமைச்சு முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதில் ஏன் இத்தனை தூரம் இழுத்தடிப்புக்களையும் பாராமுகத்தையும் காட்டுகின்றதோ தெரியவில்லை?

பெற்றோர்கள் இந்த விடயத்தில் ஒருமித்து செயற்பட்டு கல்லூரிக்கு புத்துணர்ச்சி கொடுக்க முன்வர வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -