ஆயுதப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்தால் பேரினவாதிகள் தமிழினத்தை அழித்துவிடலாம்

ஏ.எச்.ஏ.ஹுஸைன் -
யுதப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்தால் பேரினவாதிகள் தமிழினத்தை முற்றுமுழுவதுமாக அழித்துவிடலாம் என தாம் அஞ்சுவதாக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். வீரமக்கள் தின நிகழ்வுகள் சனிக்கிழமை (15.07.2017) மட்டக்களப்பு பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். வியாழேந்திரன் தலைமையில், அங்கு ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றுகையில்;

மிகவும் பலம் பொருந்திய அமைப்பாக இருந்து கடைசி வரை போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளால் சாதிக்க முடியாத ஒரு விடயத்தை இனிமேலும் சாதிக்க முடியுமென்று நான் கருதவில்லை. ஆகவே மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு சந்தர்ப்பமில்லை என்பதையே நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. ஆகவே தமிழீழம் ஒரு தீர்வாக இருக்கமுடியாது.

அயல் வல்லரசு நாடான இந்தியாவுடையதும் சர்வதேச அணுகுமுறையும் அவர்களுக்கு என்ன இலாபம் என்பதை கணக்கிடுவார்களே தவிர தமிழர்களுக்காக எதையும் செய்ய மாட்டார்கள் என நாங்கள் கடந்த கால போக்குகளிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச போக்குகளை அரைகுறையாகப் புரிந்து கொள்ளும் எங்களுடைய போக்குகளும் தோல்விகளுக்கு ஒரு காரணம்.

நாம் தற்போது பொருளாதாரம், கல்வி போன்ற துறைகளில் ஒரு பலவீனமான சமூகமாக ஆக்கப்பட்டுள்ளோம். ஆகவே பிரிவினைப்பட்டு நிற்கும் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக தமிழ் மக்களுக்கான ஒரு நியாயமான ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்கப் பாடுபட வேண்டும். வேண்டும். அது சாத்வீக போராட்டங்களாகவோ பேச்சுவார்த்தைகளாகவோ இருக்கலாம். ஆயுதம் ஏந்துவது தற்கால சூழிலில் அறிவுடைமையாகாது.' என்றார்.

வீரமக்கள் தின நிகழ்வுகளுக்கான முழுமையான அனுசரணையினை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடா கிளை வழங்கியிருந்தது. மேலும் இந்நிகழ்வின்போது கழக அங்கத்தவர்கள் இருவரது குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியினை லண்டனில் வசிக்கும் கழகத்தின் செயற்குழு உறுப்பினர் தர்மலிங்கம் சிவபாலன் வழங்கியிருந்தார்.

இந்நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே. கருணாகரன், தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர். துரைரெட்ணம் உட்பட அக்கழகத்தின் பதவிநிலை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -