ஒற்றுமையுடன் மக்களுக்காக தமது வாழ்வை தியாகம் செய்த தமிழ் போராளிகளை மத்திய நல்லாட்சியின் தீய சக்திகள் பிரித்து தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய முற்படுகின்றன எனவே அதையும் தாண்டி மக்களின் நலனிற்காக புளொட் அமைப்பிற்கு மாகாண சபையின் மேலதிக ஆசனத்தின் இறுதி வருட ஆசனம் வழங்க வேண்டுமென வட மாகாண இளைஞர் விவகார இணைப்பாளரும், நிஸ்கோ பணிப்பாளரும், வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன முன்னாள் தலைவருமான திரு தே.அமுதராஜ் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவ் அறிக்கையில் எமது மக்களின் உரிமைக்காக தமிழ் ஈழ விடுதலை புலிகளால் இடம் பொருள் ஏவல் கருதி தமிழ் பேசும் மக்களுக்காக சுய நிர்ணய உரிமை தாயகம் என்ற கோட்பாட்டிற்கு அமைவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இக் கூட்டமைப்பில் ரெலோ, புளொட் , ஈபிஆர்எல்எப், தமிழர் விடுதலை கூட்டணி, தமிழரசு கட்சி என்பன அங்கம் பெற்று தற்போது தனது சுய அரசியல், விலை போகின்ற அரசியலுக்காக தமிழர் விடுதலை கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது.
தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக விடுதலை இயக்கங்கள் மூன்றும் முதலமைச்சரின் கொள்கையுடன் ஒண்றிணைந்து பயணித்த இத் தருணத்தில் தமிழரசு கட்சி ரணிலின் கைப்பொம்மையாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் எதிர் கட்சி தலைவர் சம்பந்தன் ஆகியோர் ரணிலிடமே விலைபோயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல வருடங்களாக இயங்காத நிலையில் இருந்த எமது மாகாண சபையில் தமிழர் அரசாக 2013 இல் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைத்தது. கடந்த சில மாதங்களாக பல துர்ப்பாக்கிய சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன அவை அனைத்தையும் அரசியல் தெளிவுடன் வட மாகாண மக்கள் அவதானித்து கொண்டிருப்பதோடு, அதிருப்தியையும் வெளியிடுகிறார்கள்.
2013 இல் எமது கூட்டமைப்பின் மேலதிக ஆசனங்களில் ஒன்று கட்சிகளுக்கிடையே பங்கிடப்பட்டது. அதில் இறுதி வருடம் புளொட் அமைப்பிற்கு வழங்கபட வேண்டியது இவ் ஆசனம் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ஆகியோரின் அற்ப சொற்ப சலுகைகளுக்காக தமது கட்சியான தமிழரசு கட்சிக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது.
எனவே முதுகெலும்புள்ள விலை போகாத உண்மைத் தன்மையுள்ள கூட்டமைப்பு அரசியலை முன்னெடுக்குமாறு வடக்கு இளைஞர்களின் சார்பாக கேட்டு கொள்வதுடன் மக்கள் பிரதிநிதிகளான தமிழரசு கட்சி தலைமையுடன் ஊடகங்கள் மூலமான நேரடி விவாதத்திற்கு அழைப்பு விடுகின்றேன் என அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.