மக்களை நாடிச்சென்று சேவை செய்திருந்தால் அதிக பிரச்சினைகள் தீர்ந்திருக்கும் -ஷிப்லி பாறுக்

எம்.ரீ.ஹைதர் அலி-
தேர்தல் அல்லாத காலங்களிலும் அரசியல் வாதிகள் மக்களை நாடிச் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து சேவையாற்றுகின்ற ஒரு நிலைமை உருவாக வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து மஞ்சந்தொடுவாய் பிரதேசத்திற்குட்பட்ட வரிய குடும்பத்தை சேர்ந்த நபர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சுய தொழிலுக்கான இடியப்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவற்றை வழங்கி வைத்து உரையாற்றும் போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

மக்களின் பிரதிநிதிகளுக்கு மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்துகொண்டு அவற்றை நிவர்த்தி செய்து வைக்க வேண்டிய ஒரு பாரிய பொறுப்பு காணப்படுகின்ற போதிலும் தற்போதைய சூழ்நிலையில் மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. அரசியல்வாதிகள் தங்களின் அலுவலகங்களில் இருந்துகொண்டு மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து செயலாற்றுவதற்கு மாறாக மக்களை நாடிச் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து செயற்படுவதன் மூலமாகவே மக்களின் பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக அறிந்து செயலாற்ற முடியும். 

ஆகவே தான் நாங்கள் வீதிக்கு ஒரு நாள் என்ற செயற்றிட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தோம். தற்போது அத்திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தி மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களை சந்தித்து மக்கள் குறைகளை கேட்டறியும் செயற்றிட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றோம். அவ்வாறு நாங்கள் பொது மக்களின் வீடுகளுக்கு செல்லுகின்ற போது மக்களின் சிறுசிறு பிரச்சினைகள்கூட மிக நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதை காணக்கூடியதாக இருந்தது. 

எமது அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் வாக்குகளை பெறுவதற்காக மக்களின் வீடுகளை தேடிச் செல்வதற்கு மாறாக தேர்தல் அல்லாத காலங்களிலும் மக்களை நாடிச் சென்று சேவை செய்திருந்தால் சமூகத்திலுள்ள அதிகளவான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கும் என நம்புகின்றோம். ஆகவே இனிவரும் காலங்களிலாவது தேர்தல்களை மையப்படுத்திய அரசியல் செயற்பாடுகள் இல்லாதொழிக்கப்பட்டு மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கக்கூடிய அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட வேண்டும் என தனது உரையில் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -