மாத்தளை நிக்கலோயா மண்சரிவில் பாதிக்கப்பட்டோருக்க நிவாரணம் வழங்கப்படவில்லை - திலகர் எம்.பி

மீரியபெத்தை மண்சரிவு மலையகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எனினும் அதற்கு முன்பதாக 2012 ஆம் ஆண்டு மாத்தளை, நிக்க்லோயா பகுதியில் ஏற்பட்ட மண்சரிவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மீரியபெத்தை தொடர்பாக பரவலாக பேசப்பட்டு நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்பட்டபோதும் நிக்கலோயாவில் பாதிப்புற்ற மக்களுக்கு முறையான நிவாரண நடடிவக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அமைச்சர் திகாம்பரத்தின் முன்னெடுப்பில் இப்போது பகுதி பகுதியாக பாதிப்புற்ற தொழிலாளர் குடும்பங்களுக்கு இப்போது தனிவீடுகள் அமைத்துக்கொடுக்கப்படுகின்றன என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்டம் ரத்தொட்டை பிரதேச சபைக்கு உட்பட்ட நிக்கலோயா தோட்டத்தில் மண்சரிவினால் பாதிப்புற்ற மக்களுக்கு விஹாரகம பகுதியில் அமைக்கப்பட்ட தனிவீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு 23/6/2017 அன்று நடைபெற்றது. மாத்தளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் அலுவிஹாரே, திருமதி ரோஹினி கவிரத்ன ஆகியயோருடன் அமைச்சர் திகாம்பரத்தின் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்க வீடுகளைக் கையளித்தனர். 

இந்த நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மாத்தளை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களில் அமைச்சர் திகாம்பரத்தின் சார்பாக கலந்து கொள்ளும் நான்காவது சந்தர்ப்பமாக இது அமைகிறது. கணிசமான அளவு தமிழ் மக்கள் வாழ்ந்தும் உரிய தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்காத மாவட்டங்களுக்கு சேவையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எனது எண்ணம் இவ்வாறான பயணங்களுக்கும் திட்ட முன்னெடுப்புகளுக்கும் வழிசமைக்கின்றது. தமிழ், சிங்களம், முஸ்லிம் என்று பாராமல் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தேசிய நிகழ்ச்சி நிரலாக இருக்க வேண்டும். 

துரதிஸ்டவசமாக பெருந்தோட்ட மக்கள் தேசிய அரச நிர்வாக இயந்திரத்தில் இருந்து துண்டிக்கப்பட்டவர்களாக உள்ளனர். இதனை சரி செய்யும் முயற்சியினையே தமிழ் முற்போக்கு கூட்டணி அதிக கவனம் செலுத்தி வருகின்றது. பிரதேச சபைகள் சட்டத்தை திருத்தக் கோரும் எமது பிரேரணை அவற்றுள் முதன்மையானது. விரைவில் அந்தச் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்படவுள்ளது. 

மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு பெருந்தொட்டப்பகுதிகளில் புதிய கிராமங்களையும் தனிவீடுகளையும் உருவாக்குகின்ற பொறுப்பினை ஏற்று நடாத்துவதற்கு காரணமே வீடமைப்பு முதல் அடிப்படை உட்கட்டுமான வசதி வாய்ப்புகளை பெறுக்கொடுக்க பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள் ஊடான நிர்வாக முறைமை அங்கு முறையாக சென்று சேராமையே. இதனை நாங்கள் விரும்பவில்லை. நாட்டு மக்கள் அனைவருக்கும் இனபேதம் பாராது, பிரதேசம் பாராது அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

நிக்கலோயா தோட்டத்தில் மண்சரிவினால் பாதிப்புற்ற சுமார் எண்பது குடும்பங்களில் முற்றாக உடமைகளை இழந்த 14 குடும்பங்களுக்கு விஹாரகம பகுதியில் பிரதேச செயலகத்தினால் காணிகள் வழங்கப்பட்டபோதும் அவர்களுக்கு வீடு கட்டுவதற்கான கடனோ உதவிகளோ வழங்கப்படவில்லை. அதேநேரம் அந்தப்பகுதியில் காணிகளைக் கொண்டிருந்த சிங்கள மக்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விடயம் அமைச்சர் திகாம்பரத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அந்த 14 குடும்பங்களுக்கும் நன்கொடை அடிப்படையில் இன்று தனிவீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது ஏற்கனவே கடனுதவி பெற்ற சிங்கள மக்களின் வீடுகள் கட்டி முடிக்கப்படாத நிலையில் தோட்ட மக்களான 14 குடும்பங்களின் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டமையை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. 

பெருந்தோட்ட மக்கள் தொடர்பாக நடைமுறையில் இருக்கக்கூடிய சிக்கலான நடைமுறைகள் காரணமாகவே குறித்த அமைச்சு அவர்களை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றது. வீடமைப்பு மாத்திரமல்ல கல்வி, சுகாதாரம் என அனைத்துத் துறைகளிலும் பாரபட்சம் காட்டப்பட்டு வருகின்றமை காரணமாகவே நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொணடு பெருந்தோட்ட மாவட்டங்கள் தோறும் பயணித்து பணியாற்ற வேண்டியிருக்கிறது.

மீரியபெத்தை மண்சரிவு மலையகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எனினும் அதற்கு முன்பதாக 2012 ஆம் ஆண்டு மாத்தளை, நிக்கலோயா பகுதியில் ஏற்பட்ட மண்சரிவும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. மீரியபெத்தை தொடர்பாக பரவலாக பேசப்பட்டு நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்பட்டபோதும் நிக்கலோயாவில் பாதிப்புற்ற மக்களுக்கு முறையான நிவாரண நடடிவக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அமைச்சர் திகாம்பரத்தின் முன்னெடுப்பில் இப்போது பகுதி பாதிப்புற்ற தொழிலாளர் குடும்பங்களுக்கு பகுதியாக இப்போது தனிவீடுகள் அமைத்துக்கொடுக்கப்படுகின்றன. எஞ்சியுள்ள 57 குடும்பங்களுக்கும் எதிர்வரும் காலங்களில் அமைச்சர் திகாம்பரத்தின் ஏற்பாட்டில் தனிவீடுகளைக் கட்டி புதிய கிராமம் அமைத்துக்கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -