மஹிந்த தரப்பை கூண்டில் ஏற்றுவேன் - ஆத்திரமடைந்த ஜனாதிபதி

சட்டமா அதிபர் திணைக்களத்தையும் பொலிஸ் திணைக்களத்தையும் மூன்று மாதத்திற்கு என்னிடம் தாருங்கள், தந்தால் மஹிந்த தரப்பு உட்பட சகல குற்றவாளிகளையும் கூண்டில் ஏற்றிக்காட்டுவேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மஹிந்த தரப்பிற்கு ஆதரவு செலுத்துவதன் மூலம் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியினை உருவாக்கலாம் என கனவு காண வேண்டாம். மஹிந்த தரப்பினரை விட்டுவிட்டு என்னுடன் செயற்படுபவர்கள் மீதே வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் எமது கட்சியை ஓரம்கட்ட பார்க்கின்றீர்கள் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

வழக்குகள் தாமதிக்கப்படுகின்றமை கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து அதிருப்தி தெரிவித்த ஜனாதிபதி இவ்விடயம் குறித்து கடும்தொனியில் கருத்து தெரிவித்துள்ளார்.

இங்கு ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

சட்டமா அதிபர் திணைக்களம், நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு, குற்றப்புலனாய்வுப்பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகளை அழைத்து நான் கலந்துரையாடியிருந்தேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்ப வழக்குகள் தாமதமாவதற்கு என்ன காரணம் என்று நான் அவர்களிடம் கேட்டிருந்தேன். இதற்குப் பதிலளித்த அவர்கள் மேலிடத்திலிருந்து அழுத்தங்கள் வருகின்றன என்று தெரிவித்தார்கள்.

இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்த போது யார் அந்த அழுத்தத்தைக் கொடுப்பது அவர்களது பெயர்களைக் கூறுங்கள் என்று அமைச்சர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் பெயர் எதனையும் குறிப்பிடாத ஜனாதிபதி மேலும் கூறுகையில்,

சட்டமா அதிபர் திணைக்களத்தையும் பொலிஸ் திணைக்களத்திலுள்ள நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவையும் மூன்று மாத காலத்திற்கு என்னிடம் ஒப்படையுங்கள். அவ்வாறு ஒப்படைத்தால் அந்தக் காலப்பகுதிக்குள் மஹிந்த தரப்பினர் உட்பட சகல குற்றவாளிகளையும் நான் கூண்டில் நிறுத்திக்காட்டுவேன்.

தற்போது அவர்களை கைதுசெய்வதற்கான அதிகாரம் என்னிடத்தில் இல்லை. நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரமும் என்னிடத்தில் இல்லை. அரசியல் யாப்பு சபையே அதனைத் தீர்மானிக்கின்றது.

ஊழல் விசாரணை செயலகம் பிரதமரின் கீழேயே உள்ளது. இந்த செயலகமானது வழக்குகளை அரசுக்குப் பாதகமாகவும், எதிரணிக்கு சாதகமாகவும் தயாரித்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்புகின்றது.

இந்த திணைக்களத்தில் நான்கு ஆலோசகர்கள், மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் பலர் உள்ளனர். இவர்களுக்கு பெருமளவு சம்பளம் வழங்கப்படுவதுடன் வாகன வசதி உட்பட சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் எதுவிதப் பிரயோசனமும் இல்லாத நிலை காணப்படுகின்றது.

முக்கிய நபர்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்யாத இவர்கள் சிறுதரப்பினருக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்கின்றனர். எனது தரப்பிலுள்ள பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராகவே 76 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மஹிந்த தரப்பினருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக இல்லை. மீளவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் சரத் பொன்சோகாவுக்கு நடந்ததை விட எனக்குத்தான் அதிக தீங்கு இழைக்கப்படும்.

மஹிந்த தரப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியை கைப்பற்றலாம் என்று ஒருபோதும் கனவு காண வேண்டாம். அவர் ஆட்சிக்கு வந்தால் எனக்கும் எனது குடும்பத்தினருக்குமே ஆபத்துள்ளது.

நான் பெரிய கட்சியொன்றிலிருந்து துணிந்தே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியிருந்தேன். அன்று நான் தோற்றிருந்தால் எனது மகளையும் மருமகனையும் கைது செய்து எனக்கும் ஆபத்தை உருவாக்கியிருப்பர்.

உங்களிடத்தில் அவருக்கு கோபமில்லை என்று எண்ணிவிடவேண்டாம். மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆயுள்காலம் வரை நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.

இராணுவ அதிகாரிகளையே அவர் அமைச்சர்களாக நியமிப்பார். எனவே அவருக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வரமுடியும் என்று நீங்கள் எண்ணக்கூடாது.

எனவே சட்டமா அதிபர் திணைக்களத்தையும், பொலிஸ் திணைக்களத்தையும் என்னிடம் மூன்று மாதங்களுக்கு தாருங்கள் மஹிந்த தரப்பையும் ஏனைய குற்றவாளிகளையும் நான் கூண்டில் ஏற்றிக்காட்டுவேன் என்று ஜனாதிபதி கடும் தொனியில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்புசலிகளுக்கு பணம் கொடுத்து ஆட்சிக்கு வந்திருந்தார் என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதி இவ்வாறு கடும் அதிருப்தி தெரிவித்தமையானது அமைச்சர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அதிருப்தியின் பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தை அடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர் மலிக் சமரவிக்கமவும் ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளதாகவும் தெரியவருகிறது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -