மங்காத அறிவு ஒளி ஷேகுல் ஹதீஸ் மௌலானா யூனூஸ் ஸாஹிப் ஜோன் பூரி..!

எம்.ஜே.எம்.சஜீத்-
லங்கை இந்தியா இரண்டு தேசங்களின் இரு பெறும் அறிவுச் சிகரங்கள் இன்று எங்களையெல்லாம் விட்டு பிரிந்துவிட்டார்கள் என்கின்ற போது சூரியன், சந்திரன் இரண்டினதும் ஔிகள் நீங்கி இருள் சூழ்ந்து கொண்டதுவோ என்று எண்ணத் தோன்றுகிறது.  இருபெறும் அறிவு ஔிப் பிளம்புகளில் இந்திய தேசத்தின் இருபத்தோறாம் தலைமுறை ஷேகுல் ஹதீஸ் மௌலானா யூனுஸ் ஸாஹிப் அவர்களைப் பற்றிய சிறு வாழ்வியல் குறிப்புகள். 

முஹம்மது யூனுஸ் என்ற இயற்பெயரையுடைய ஷேக் அவர்கள். ஹிஜ்ரி 1355 ரஜப் மாதம் பிறை 22 (2/10/1937) அன்று பாரத தேசத்தின் உத்திர பிரதேசத்தில் அமைந்துள்ள ஜோன்பூரி என்ற கிராமத்தில் பிறந்தார்கள்.  பத்து வயதிலே தாயை இழந்த மௌலானா அவர்கள் தனது ஆரம்ப பள்ளிக்கூடப் படிப்பை ஊரின் மஹல்லாவில் அமைந்துள்ள ஜோன்பூரி மக்தபில் தொடர்ந்தார்கள். 

மதரஸாக் கல்வியைத் தொடர்வதற்காக பதின்மூன்றாம் வயதில் ஜோன்பூரில் அமைந்துள்ள லியாஉல் உலூம் மதரஸாவில் இணைந்து கொண்டதோடு நூருல் அன்வார் வரை அதே மதரஸாவில் தமது கல்வியைத்தொடர்ந்தார். தனது மதரஸாக் கல்வியைத் தொடர்ந்து கொண்டு செல்வதற்காக ஹிஜ்ரி 1377 ஷவ்வால் மாதம் ஜாமிஆ மழாஹிருல் உலூமில் இணைந்து கொண்டு அங்கேயே இல்மை தொடர்ந்து கற்றுக் கொண்டு ஓதி முடித்தவராக ஹிஜ்ரி 1381 ல் நிரந்தர (முதர்ரிஸாக) ஆசிரியராக நியமணம் பெற்றார்.

ஹிஜ்ரி 1385 ல் ஹஸரத் ஷேக் மௌலானா ஸகரிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் பைஅத் (சத்தியப்பிரமானம்) செய்தார்கள்.  மேலும் அப்போதைய ஜாமிஆ மழாஹிருல் உலூமின் அதிபர் ஷேக் மௌலானா ஷா அப்துல்லாஹ் ஸாப் அவர்களிடமும் பைஅத் (சத்தியப்பிரமானம்) எடுத்துக் கொண்டார்கள். 

ஷேக் ஸாப் என்று மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட மௌலானா யூனுஸ் அவர்கள் ஷேகுல் ஹதீஸ் ஹஸரத் ஷேக் மௌலானா சகரிய்யா ரஹிமஹுமுல்லாஹ் அவர்களின் மதீனா ஹிஜ்ரத்திலிருந்து இன்றுவரை சுமார் 48 வருடங்களுக்கு மேலாக புனித புஹாரி, முஸ்லிம் ஆகிய இரண்டு கிதாபுகளையும் பாடம் நடாத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். 

தனது வாழ்நாள் முழுதையும் ,திருமணம், குடும்பம் என்று எதுவுமில்லாமல். ஹதீஸிற்காகவே அர்பணித்தார். என்பதும் அவருடைய வாழ்க்கை குறிப்பின் ஒரு முக்கிய பகுதி. முன்னால் ஷேகுல் ஹதீஸ் ஹஸரத் ஷேக் மௌலானா ஸகரிய்யாவின் மிக முக்கியமான நெருங்கிய மாணவர்களுள் மௌலானா யூனுஸ் முதனமையானவர் என்பதும் போற்றத்தக்கது. 

அவரது வாழ்விலிருந்து சில சுவாரஷ்யமான நிகழ்வுகள். 

மழாஹிருல் உலூம் இன்னும் இப்படியான மதரஸாக்களில் இவ்வாறான ஒரு வழமை இருக்கிறது. அதாவது பொதுவாக உஸ்தாதாக கடமைப் புறிபவர்கள், பாடங்களை நடாத்தக்கூடியவர்கள் தமது இறுதிக் காலங்களை மதீனா சென்று அங்கு கழிப்பதும் அங்கேயே மரணத்தை அடைந்து அங்கேயே அடக்கம் செய்யப்படுவதையும் விரும்புவதுண்டு. ஹஸ்ரத் ஷேக் மௌலானா ஸகரிய்யா ரஹிமஹுமுல்லாஹ் அவர்கள் இப்படி தமது இறுதிக் காலத்தை மதீனா புனித பூமியில் கழித்துவிட வேண்டும் என்று விரும்பிய போது. தமது இரு முக்கிய மாணவர்களாகிய மௌலானா ஆகில் மௌலானா யூனுஸ் இருவரையும் வரவழைத்து தனது மகள், மற்றும் கிதாபு இரண்டினையும் தெரிவுக்கு விட்டார்கள். அதாவது விரும்பியவர் மகளை மணந்து கொள்ள முடியும் விரும்பியவர் கிதாபை பெற்றுக் கொள்ள முடியும். என்று சொன்னதும் மறுகனமே முந்தியடித்தவர்களாக கிதாபை வேண்டிப் பெற்றுக் கொண்டவர்கள் மௌலானா யூனுஸ் அவர்கள். 

கிதாபை பெறுபவர்களே புஹாரி, முஸ்லிம் இரண்டினதும் பாடங்களை நடாத்தும் வழமையும் இருக்கிறது. ஆகவே அன்றைய நாள் முதல் இன்று சுபஹ் வரை 48 வருடங்களுக்கு மேலாக ஜாமிஆ மழாஹிருல் உலூமின் ஷேகுல் ஹதீஸாக இருந்தவர் மௌலானா யூனுஸ் ஸாஹிப் ஜோன்பூரி என்பதும் சிறப்பிற்குரியது. 

மௌலானா யூனுஸ் அவர்கள் ஒவ்வொரு ஜூம்மா வெள்ளியன்றும் ஜூம்ஆ தொழுகைக்காக தமது அறையிலிருந்து பள்ளியை நோக்கி வெளியேறும் போது பாதை முழுவதும் இந்துக்கள் கூடி நின்று குவளைகளில் நீரை ஏந்தியவர்களாக மௌலானாவின் பரகத்தைப் பெற்றுக் கொள்வதற்காக நின்று கொண்டிருப்பது ஒவவொரு வெள்ளியன்றும் காணக்கூடிய எங்கும் காணமுடியாத அரிய நிகழ்வுகளில் ஒன்று  இன்னும் சொல்லப் போனால் அவரது கதமுல் புஹாரி எனப்படும் புஹாரி கிதாபின் வருடாந்த பாட நிறைவின் போது பல இனத்தைச் சேர்ந்த பல சமயங்களைச் சேர்ந்த மக்களும் அங்கே கூடியிருந்து ஷேகுல் ஹதீஸின் பரகத்தை பெற்றுக் கொள்ள முனைவது கண்கொள்ளாக் காட்சி என்பதை ஜாமிஆ மழாஹிருல் உலூமில் ஓதிய ஒவ்வொரு மாணவரும் கண்டிருப்பர். 

புஹாரியின் மீது அந்நியர்களுக்கே கண்ணியம் ஏற்படுமளவு அதன் சிறப்பை எடுத்தியம்பி நடந்தவர் என்பது அவரைக் கண்டு கொண்ட அனைவரும் அறிந்தவை.. இராத்திரியின் பொழுதுகள் முழுதும்,நடுநிசி வேளைகள் எல்லாம் கிதாபுகளை புரட்டியவராகவே காட்சி தரும் மௌலானா யூனுஸ் அவர்களின் உறக்கத்திற்கான நேரம் எதுவாக இருக்கும் என்பது எம்முள் தினமும் எழக்கூடிய கேள்விகளுள் ஒன்று.. தமது அறை முழுதும் ஹதீஸ் கிதாபுகள் சூழ்ந்திருக்கும் நிலையில் என்றும் எப்பொழுதும் ஹதீஸ் புத்தகங்களுடனேயே தமது வாழ்நாளை செலவிட்ட இன்றைய காலத்தின் மிகப் பெரும் ஹதீஸ் கலை வல்லுனர் ஷேகுல் ஹதீஸ் மௌலானா யூனுஸ் ஸாஹிப் என்றால் அது மிகையில்லை.

தான் எந்தவொரு மத்ஹபைச் சார்ந்தவராக இல்லாமல் இருந்தாலும் (தகைமையுடைய சட்ட வல்லுனர்)தமது பாடவேளைகளில் இமாம் ஷாபிஈயை அதிகமாகவே புகழ்ந்துரைக்கும் அவரது வழமை ஹனபிகளை கடும் கோபத்தை ஏற்படுத்தும் சுவாரஷ்யமான சம்பவங்களாகவே இருந்தது. உலகம் முழுதும் மௌலானா யூனுஸ் அவர்களுக்கு இருக்கின்ற கண்ணியம் சொற்களால் வர்ணிக்க முடியாதது. ஹஜ், உம்ரா பிரயாணங்களின் போது மக்கா, மதீனா புனிதப் பள்ளிகளில் மௌலானா யூனுஸ் அவர்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு அறபிகள் சூழ்ந்திருந்து ஹதீஸ் பாடம் நடாத்தச் சொல்லும் அழகு சொல்லிலடங்காத ஒரு நிகழ்வு.

மௌலானா யூனுஸ் அவர்கள் ஜாமிஆ மழாஹிருல் உலூமில் உஸ்தாதாக (முதர்ரிஸாக) இணைந்து கொண்டது முதல் இன்று வரை அங்கிருந்து ஒரு ரூபாயையேனும் ஊதியமாக பெற்றுக் கொண்டதில்லை என்பதும் ஒரு வேளை சாப்பாட்டையேனும் ஜாமிஆவில் உட்கொள்ளாது தமது சொந்த செலவிலே செலவிட்டவர் என்பதும் அவரின் தனித்துவமான பண்புகளில் ஒன்று. அதுமாத்திரமல்லாது உலகின் தலைசிறந்த அறிஞர்களாகிய ஷேக் பின் பாஸ், அப்துல் பத்தாஹ் அபு குத்தா, அப்துல்லாஹ் அன் நாகிபி, அஹ்மத் அலி அஸ் ஸூறதி, அப்துர்ரஹ்மான் அல் கத்தானி போன்றோரிடமிருந்து ஹிஜாசா (அனுமதி) பெற்றுக் கொண்டவர்.

அதுமாத்திரமல்லாது பல இலட்சனக்கணக்கான ஹதீஸ்களை மனனம் செய்திட்டதோடு பல நூட்களின் சொந்தக்காரர். ஷேக் அவர்கள் பல இலட்ச்சக்கணக்கான ஹதீஸின் ஒரு வார்த்தைக்காக பல்லாயிரக்கணக்கான, பல இலட்ச்சக் கணக்கான ரூபாய்களையும் செலவிடக்கூடிய ஒரு மாபெரும் செல்வந்தர். ஆனால் சாதரண மனிதர் ஒருவர் பத்து ரூபாய் காசைத்தான் அவருக்கு ஹதியாச் செய்தாலும், அதனை மனப்பூர்வமாக வாங்கிக் கொண்டு அவருக்காக துஆ செய்யக்கூடிய ஒரு அருள் நிறைந்த வள்ளல் இப்படியான ஒருவர் இன்றைய தினம் எங்களை விட்டும் மறைந்திருக்கிறார் என்கின்ற பொழுது உள்ளம் பதைபதைக்கிறது. 

உலகம் போற்றும் உத்தமர். இன்று உலகில் வாழ்கின்ற, வாழ்ந்து மறைந்த இல்மைச் சுமந்த பல்லாயிரக் கணக்கான ஆலிம்கள், உலமாக்களினது உஸ்தாத் ஷேகுல் ஹதீஸைக் காட்டிலும் வேறு யாருதான் இருந்திட முடியும்.

ஷேகுல் ஹதீஸ் மௌலானா யூனுஸ் ஸாஹிப் அவர்களே! 

உங்களின் இழப்பு இந்த உம்மத்தினது ஈடுகொடுக்க முடியாத ஓர் இழப்பு என்பதை வெகுவிரைவில் இந்த உம்மத்து கண்டு கொள்ளவிருக்கிறது. உங்களினது அறிவு ஔி உங்களின் மாணாக்கள் வாயிலாக பார் முழுதும் பரந்து பிராகாசித்துக் கொண்டிருக்கிறது.  ஷேகுல் ஹதீஸ் மௌலானா யூனுஸ் ஸாஹிப் ஜோன்பூரி அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! வல்ல அல்லாஹ்வே இவர்களது மக்பராவை பூத்துக் குலுங்கும் பூங்காவணமாக்கி அமைதியான உறக்கத்தை வழங்கிவிடுவாயாக! உயர்ந்த ஜன்னதுல் பிர்தௌஸை வழங்கி அன்னாரை கண்ணியவான்களில் நின்றும் ஆக்கிவிடுவாயாக! 

அறிவு ஔிப் பிளம்புகள் மங்குவதில்லை மறைகிறது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -