திருகோணமலை -நிலாவௌி பகுதியில் கைப்பற்றப்பட்ட 140 கிலோ கேரளா கஞ்சாவின் பிரதான சந்தேக நபரை இம்மாதம் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் திருமதி சமிலா ரத்னாயக்க நேற்று (21) உத்தரவிட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கல்முனை-கல்முனைக்குடியைச்சேர்ந்த சுபைர் என்றழைக்கப்படும்
சாவுல் ஹமீது ஆதம்பாவா (52வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கடந்த 2016-12-13ம் திகதி நிலாவௌி பிரதேசத்தில் வைத்து வேனொன்றுடன் மூன்று சந்தேக நபர்களை 140 கிலோ கேரளா கஞ்சாவுடன் கைது செய்தனர்.
இதே வேளை இச்சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்தையடுத்து புல்மோட்டை பகுதியிலிருந்து காரொன்றுடன் 500 கிரேம் கேரளா கஞ்சாவுடன் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டார்.
இந்ந நான்கு பேரும் வழங்கிய வாக்குமூலத்தையடுத்து பிரதான சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் திருகோணமலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திர குமாரவின் பணிப்புரையின் கீழ் பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஜனூசன் 53876 எம்.ஏ.சீ.தௌபீக் 68136 இந்திக 79129 வண்ணிநாயக்க 80836 ஜெயசிங்க ஆகியோரின் தேடுதலினால் பிரதான சந்தேக நபரை கல்முனைக்குடி வீடொன்றுக்குள் வைத்து கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் இச்சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்ற கட்டளையின் பேரில் நான்கு நாற்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட வேளை பிரதான சந்தேக நபர் இவர் என இணங்காணப்பட்டுள்ளதாகவும் பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
கேரளா கஞ்சாவை கொண்டு வரும் வேளை இவரின் தொலைபேசியிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்ட விபரங்கள் தொடர்பாக நீதிமன்றில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.