சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையும் கல்முனை மாநகரின் எதிர்காலமும்- பாகம் 2

சாய்ந்தமருது பிரிப்பால் கல்முனை பறிபோகும் அபாயம் உள்ளதா?
---------------------------------------------
சாய்ந்தமருதைப் பிரித்து இன்று இருக்கின்ற விகிதாசார முறையில் தேர்தல் நடைபெற்றால் பெரும்பாலும் கல்முனை பறிபோய்விடும். தேவைப்பட்டால் இதனைப் புள்ளிவிபரங்களுடன் நிறுவலாம். தற்போது அறிமுகப்படுத்தப்பட உத்தேசிக்கப்பட்ட வட்டாரமுறையில் கல்முனை பாதுகாக்கப்பட ஓரளவு வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் அம்முறையும் தற்போது மாற்றப்பட போகின்றது. புதிய முறை எவ்வாறு அமையும் என்பதில் இன்னும் தெளிவில்லை.

பிந்திக்கிடைக்கின்ற தகவல்களின்படி பொதுத்தேர்தலுக்கு பரிசீலிக்கப்படுகின்ற ஜேர்மன் முறையே உள்ளூராட்சித் தேர்தலுக்கும் பரிசீலிக்கப்படுவதாகத் தெரிகிறது. அதாவது வட்டாரம் 60 விகிதமும் விகிதாசாரம் 40 விகிதமும் என்பதில் உடன்பாடு காணப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இந்த 60:40 என்பது விகிதாசாரமும் வட்டாரமுமா? அல்லது விகிதாசாரத்தினுள் வட்டாரமா? ( ஜேர்மன் முறை) என்பதில் பிந்தியதுதான் பரிசீலிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜேர்மன் முறை பொதுவாக சிறுபான்மைகளுக்கு சாதகமானது. அது விகிதாசாரத்தினுள் தொகுதி அல்லது வட்டாரம் என்பதாகும். இது அடிப்படையில் தற்போதைய விகிதாசார முறைக்கு நெருங்கியதாகும்.

அதாவது, விகிதாசாரமுறை வேறு, தொகுதிமுறை வேறு என்பது நமக்குத் தெரியும். அதேபோல்தான் விகிதாசாரமும் தொகுதியும் என்பது இவை இரண்டும் இணைந்த அதேநேரம் அவற்றில் இருந்து வேறுபட்ட ஒன்றாகும். இதைத்தான் கடந்த உத்தேச 20 வது திருத்தத்தில் ஆரம்பத்தில் பொதுத்தேர்தலுக்கு பிரேரித்தார்கள்.

இவை எல்லாவற்றிலும் இருந்து வேறுபட்டதும் அதேநேரம் அடிப்படையில் விகிசாரத்துடன் நெருங்கியதும்தான் இந்த ' விகிதாசாரத்தினுள் தொகுதி அல்லது வட்டாரம்' என்பதாகும். எவ்வாறு முஸ்லிம்களுக்கு பொதுவாக சாதகமான விகிதாசார முறை சாய்ந்தமருது பிரிக்கப்படுகின்றபோது கல்முனையை பறிகொடுக்கவைப்பதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கின்றதோ அதேபோன்றுதான் இந்த ஜேர்மன் முறையான ' விகிதாசாரத்தினுள் வட்டாரமும்' சாய்ந்தமருது பிரிக்கப்படும்போது கல்முனையை இழக்கச் செய்வதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கின்றது.

இன்ஷாஅல்லாஹ், எனது ' அரசியலமைப்புச்சட்ட மாற்றம்' தொடர்பான தொடர்கட்டுரையில் இந்த ஜேர்மன் முறை தொடர்பாக விரிவாக எழுத இருக்கின்றேன்.

எது எவ்வாறிருந்தபோதிலும் உள்ளூராட்சி சட்டம் திருத்தப்பட்ட பின்புதான் கல்முனையின் எதிர்காலம் பற்றி உறுதியாக கூறமுடியும். ஆனால் புதிய உள்ளூராட்சி தேர்தல் சட்டம் அமுலுக்கு வரமுதல் சாய்ந்தமருது பிரிக்கப்பட்டால் அது முஸ்லிம்களின் முதுசமான கல்முனை மாநகரின் எதிர்காலத்தை ஒரு நிச்சயமற்ற தன்மைக்குள் தள்ளப்போகின்றது; என்பதுதான் அதன் பொருளாகும். அந்நிலையில் கல்முனையை நான்காகப் பிரித்து சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சிசபை வழங்குவது கல்முனையின் எதிர்காலத்திற்கு ஒரு உத்தரவாதத்தை கொடுக்கும்.


இதில் கவலையான விடயம் என்னவென்றால் இந்த உள்ளூராட்சிசபைக் கோரிக்கையை முன்வைக்கின்றவர்கள் துளிஅளவாவது ' கல்முனையின் எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படுவதைக் காணவில்லை. அதாவது கல்முனை பறிபோனாலும் பறவாயில்லை, எங்களுக்கு தனியான உள்ளூராட்சி சபை தந்தால் போதும்; என்கின்ற மனோ நிலையும் யாராவது கல்முனையின் எதர்காலத்தைப்பற்றிய கவலையை வெளியிட்டால் அவர்கள் சாய்ந்தமருதுக்கான சபையை தடுக்க முற்படுகின்றவர்களாகவும் சித்தரிக்கப் படுகின்றார்கள்.

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை விரைவில் பிரகடனப்படுத்தப்பட இருக்கின்றது; என்று ஒரு செய்தி வெளியானதும் சமூக வலைத்தளங்களில் இடப்படுகின்ற சில பதிவுகளைப் பார்த்தால் ' இஸ்ரவேலில் இருந்து பலஸ்தீனத்திற்கு விடுதலை கிடைக்கப்போவது போலவும் அல்லது இந்தியாவிடமிருந்து காஷ்மீருக்கு விடுதலைக்கு கிடைப்போவது போலவும் அப்பதிவுகள் இருக்கின்றன. அதேநேரம் கல்முனையின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுபவர்களுக்கெதிராக மிகவும் வக்கிரமான, விகாரமான, அநாகரீகமான பதிவுகள் இடப்படுகின்றன.

அவ்வாறாக இருந்தால் இந்த இரண்டு ஊர்களும் இஸ்ரவேலும் பலஸ்தீனமுமா? அல்லது பாகிஸ்தானும் இந்தியாவுமா? அல்லது ஈரானும் சவூதியுமா? எவ்வாறான மனோநிலையில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இந்த மனோநிலை எங்களின் எதிர்காலத்தை எங்கே கொண்டுபோய்விடும். ஆகக்குறைந்தது எங்களுக்கு உள்ளூராட்சிசபை தாருங்கள், அதேநேரம் கலமுனையையும் பாதுகாப்பதற்குரிய ஏற்பாட்டையும் செய்யுங்கள்; என்றாவது இவர்கள் கூறுவார்களானால் மனதுக்கு சற்று ஆறுதலாகவாவது இருக்கும். ஆனால் அதுவுமில்லை.

பலஸ்தீனத்தில் அடித்தால் எங்கள் ஈமானிய மனசு துடிக்கிறது. ஈராக்கை ஜோர்ஜ் புஷ் கைப்பற்றினால் நம் கலிமா அவர்களுக்காக அல்லாஹ்வைப் பிரார்த்திக்க வைக்கின்றது. எத்தனையோ இழப்புகளுக்கு மத்தியில் நமது முன்னோர்களால் பாதுகாக்கப்பட்ட நமது முதுசம் அந்நியவர்களிடத்தில் பறிபோய்விடுமோ என்ற நமது கலிமாச் சொன்ன சகோதரர்களின் கவலை சக கலிமாச்சொன்ன சகோதரர்களுக்கு வேப்பாங்காயக கசக்குகின்றது. எங்களது மனங்கள் எவ்வளவு இறுகியிருக்கின்றன. ஒரே கலிமாச்சொன்ன சமூகம் எவனோ நிர்வாக வசதிக்காக ஒரு எல்லையைப் போட்டு இரண்டு பெயர்களை வைத்துவிட்டுப் போனான் என்பதற்காக எதிரும் புதிருமாக இருக்கின்றதே!

சம்மாந்துறை நம்மைவிடப் பெரிய ஊர், அன்று அதையும் இரண்டாகப் பிரித்து இரண்டு பெயர்களை வைத்திருந்தால் இதே நிலைதான் அங்கும் இருந்திருக்கலாம். ஆனால் ஒரே பெயர் வைத்ததனால் எவ்வளவு ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றார்கள். அன்று நிர்வாக வசதிக்காக இரண்டுபெயர்களை வைக்காமல் ஒரே பெயரை வைத்திருந்தால் இன்று நமக்கு இந்த நிலைமை வந்திருக்குமா? யாரோ வைத்துவிட்டுப்போன வெவ்வேறுபெயர்களுக்காக எங்களை நாங்களே வெவ்வேறாக அடையாளப்படுத்தி கலிமாச்சொன்ன சமூகம் நமது முன்னோர்களால் இழப்புகளுக்கு மத்தியில் பாதுகாக்கப்பட்ட முதுசத்தை பறிகொடுப்பதற்கும் தயாராகிவிட்டோமே? கலிமாச்சொன்ன நம்மனசு பதறவில்லையா?

அதேநேரம் மொத்த சாய்ந்தமருது மக்களும் இந்தப் பிரிப்பில் உடன்படவில்லை. எத்தனையோ பேர் தனிப்பட்ட முறையில் அதனைக் கூறுகின்றார்கள், ஆனாலும் வெளியில் சொன்னால் ஊர்விரோதி என்று முத்திரை குத்திவிடுவார்கள்; என்று அஞ்சுகிறார்கள். இன்னும் சிலர் அதையும்தாண்டி தம் எதிர்ப்புகளை தைரியமாக சமூக வலைத்தளங்களில் குறிப்பிடுகின்றார்கள். எந்த ஊரிலும் அடிப்படையில் மக்கள் பிரதேசவாதிகளாகவோ குறுகிய மனம்படைத்தவர்களாகவோ இல்லை. ஆனாலும் சிலரின் செயற்பாடு மொத்த சமுதாயத்திற்குமே பாதிப்பைக் கொண்டுவருகின்றது.

கல்முனையைப் பாதுகாப்பதற்காக நாம் இழந்தவை எவை?
-------------------------------------------------
1950 களின் ஆரம்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அம்பாறை மாவட்டம் பிரிந்தபோது அது அம்பாறை மாவட்டமாக பிரிய இருக்கவில்லை; மாறாக கல்முனை மாவட்டமாகத்தான் பிரிய இருந்தது. கல்முனைதான் அதன் தலைநகரமாக வர இருந்தது. ஆனால் அன்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கேட் முதலியார் MS காரியப்பர்தான் அதனை அம்பாறைக்கு அனுப்பினார். ஏன் தெரியுமா? இரண்டு காரணங்கள்
ஒன்று: அன்று பெரிதாக முஸ்லிம்களுக்கு மத்தியில் கல்விகற்ற அரச உத்தியோகத்தர்கள் இருக்கவில்லை. எனவே கல்முனையில் கச்சேரி அமைந்தால் அந்நிய சமூகத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர்களின் ஆளுகையின் கீழ் கல்முனை வந்துவிடும். அவ்வாறு வந்தால் காலப்போக்கில் கல்முனையை முஸ்லிம்கள் இழக்க வேண்டிவரலாம். அதை அனுமதிக்க முடியாது என்பதாகும்.

நமக்குத் தெரியும், இலங்கையில் எல்லா நகரங்களிலும் முஸ்லிம்கள் வாழுகின்றார்கள், ஆனால் முஸ்லிம்களின் ஆளுகையின் கீழுள்ள முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரேயொரு தொன்மை வாய்ந்த நகரம் கல்முனையாகும். ஒரு காலத்தில் வடகிழக்கில் ஆகக்கூடிய வருமானமீட்டிய ஒரு உள்ளூராட்சி சபையும் கல்முனைதான். ( தற்போதைய தரவு தெரியவில்லை. சிலவேளை தற்போதும் அவ்வாறே இருக்கலாம்)

எனவே இந்த ' கல்முனையைப் பாதுகாப்பதற்காக ஒரு மாவட்டத்தையே இழந்தவர்கள் நாம். இன்று கரையோர மாவட்டம் கேட்டு கெஞ்சுகின்றோம். அத்தனை அரச அலுவலகங்களையும் இழந்துகொண்டிருக்கின்றோம். கல்முனை, இந்த மாவட்டத்தின் தலைநகராக இருந்திருந்தால் இந்த அரச அலுவலகங்களை இழந்திருப்போமா? அவ்வாறு கல்முனையைப் பாதுகாப்பதற்காக அனைத்தையும் இழந்த ஒரு மாவட்டம் நாம். இன்று ஒரு உள்ளூராட்சி சபைக்காக அதனை இழக்கலாமா?

இரண்டாவது காரணம்: அம்பாறைப் பிரதேசத்தில் முஸ்லிம்களைக் குடியேற்றுவது. ஐம்பதுகளில் அம்பாறைத்தொகுதியில் சுமார் 2700 சிங்களக் குடும்பங்களே இருந்தன. அவர்களும் உகன போன்ற இடங்களை அண்மியதாகவே வாழ்ந்தார்கள். 1989 ம் ஆண்டு அம்பாறையில் ஐ தே கட்சியில் தெரிவுசெய்யப்பட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் - தயாரட்ன, கலப்பதி, பக்மீவெவ ஆகிய மூவருமே வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். ஶ்ரீ சு கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட காலம் சென்ற வீரசிங்க அவர்கள் மாத்திரமே அம்பாறையைச் சேர்ந்தவர் ( உகன).

அதுமட்டுமல்ல, அன்று அம்பாறைப் பிரதேசத்தில் நம்மவர்கள் காடு வெட்டி காணிகளை உருவாக்கி இருக்கின்றார்கள். எனவே அம்பாறையில் முஸ்லிம்களைக் குடியேற்றி முழு மாவட்டத்தையும் முஸ்லிம்களுக்குரிய மாவட்டமாக ஆக்கவேண்டும், என்று அவர் கனவு கண்டார். கல்முனைக்கு வந்த கச்சேரியை அம்பாறைக்கு அனுப்புவதற்கு அது இரண்டாவது காரணம்.

நமது மக்களின் வரலாற்றுத் தவறு
-------------------------------
சுதந்திர இலங்கையில் முதலாவது நிறைவேற்றப்பட்ட பாரிய நீர்த்தேக்கத் திட்டம் இங்கினியாகல நீர்த்தேக்கத் திட்டமாகும். அது அன்று ' கல்ஓய' நீர்த்தேக்கத் திட்டம் எனத்தான் அழைக்கப்பட்டது. நீர்த்தேக்கத்திட்டம் நிறைவேறும் தறுவாயில் அன்றைய பிரதமர் D S சேனாநாயக்கா அவர்கள் அங்கு விஜயம் செய்தார். M S காரியப்பரும் உடன் இருந்தார். அவர், D S சேனாநாயக்காவின் பெயரை அந்நீர்த்தேக்கத்திற்கு சூட்டி அதை அந்த மலையில் செதுக்குகின்ற ஆலோசனையை முன்வைத்தார். இதனைக் கேட்டதும் பிரதமருக்கு பெருமகிழ்ச்சி, ஏனெனில் அவர்கூட இதனை யோசித்திருக்கவில்லை. எனவே அவ்வாறே செய்வோம் என்றார்.

இவ்வாறு பிரதமர் மகிழ்ச்சியாக இருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிரதமரிடம் M S காரியப்பர் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார், அதுதான் இந்தப் பிரதேசத்தில் ( இங்கினியாகலை வரை) எனது மக்களைக் குடியேற்ற நீங்கள் அனுமதி தரவேண்டும்; என்பதாகும். மகிழ்ச்சியில் இருந்த பிரதமர் அதற்கு உடனடியாக சம்மதித்தார்.

தேர்தலும் வந்துவிட்டது, ' நான் சோற்றை ஆக்கிவைத்துவிட்டு வந்திருக்கின்றேன்; அகப்பையை என் கையில் தாருங்கள், உங்களுக்கு பங்கீடு செய்வதற்கு' என்று M S காரியப்பர் மக்களிடம் கேட்டார். ஆனால் அத்தேர்தலில் நமது மக்கள் அவரைத்தோற்கடித்தார்கள். நமது வரலாறும் மாறியது. தென்பகுதியில் இருந்து பெரும்பான்மை சமூகத்தவர்கள் கொண்டுவரப்பட்டு வகை தொகையின்றி குடியேற்றப்பட்டார்கள். லஹுகல, தெஹியத்தக்கண்டிய போன்ற பல பிரதேசங்கள் இணைக்கப்பட்டன, என்பதெல்லாம் புதிய வரலாறு.

எனவே, கல்முனையைப் பாதுகாப்பதற்காக ஒருமாவட்டத்தையே இழந்தவர்கள் நாம். ஒரு உள்ளூராட்சி சபைக்காக அந்தக் கல்முனையை இழக்கப்போகின்றோமா? தயவு செய்து சிந்தியுங்கள்.

சாய்ந்தமருது மக்களுக்கு கல்முனை மாநகரசபை தொடர்பாக சில நியாயமான மனக்குறைகள் இருக்கின்றன, என்பதை மறுக்க முடியாது. அவையும் கட்டாயம் எழுதப்பட வேண்டும். ஒருதலைப்பட்சமாக எழுத முடியாது. அதில் நேர்மையும் இருக்காது. Objectivity யும் இருக்காது. மாறாக subjectivity தான் இருக்கும். அவ்வாறு செய்ய முடியாது. எனவே அடுத்தடுத்த பதிவுகளில் அவை தொடர்பாகவும் எழுதப்படும். ஆனால் அந்த மனக்குறைகளுக்குக் காரணம் கல்முனையா அல்லது நாங்கள் சார்ந்துள்ள கட்சிகளும் அரசியல் வாதிகளுமா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

அம்மனக்குறைகளுக்கு காரணமான அரசியல்வாதிகளுக்கு மாலை இட்டுவிட்டு கல்முனையைக் கூறுபோடுவது நியாயமா? இவற்றைப்பற்றியும் நமது ஊர்வேறுபாடுகளைக் களைந்து சகோதர வாசஞ்சையுடன் நாம் சிந்திக்க வேண்டும்.

( தொடரும்)

அடுத்த பதிவில் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை தொடர்பாக மறைந்த தலைவரின் நிலைப்பாடு இடம்பெறும்.

வை எல் எஸ் ஹமீட்-

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -