ஏ.எஸ்.எம்.ஜாவித்-
புனித துல்-ஹஜ்மாதத்திற்கான தலைப் பிறைபார்க்கும் மாநாடு இன்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்றது. மேற்படி பிறைபார்த்து தீர்மாணிக்கும் மாநாடு மஃரிபு தொழுகையைத் தொடர்ந்து பெரிய பள்ளிவாசலின் மௌலவி ஜே.அப்துல் ஹமீத் பஹ்ஜி தலைமையில் இடம் பெற்றது.
இன்று நாட்டின் எப்பாகத்திலும் துல்-ஹஜ் மாதத்திற்கான தலைப் பிறை தென்படாத காரணத்தினால் நாளை புதன் கிழமை துல்-கஹ்தா மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்து நாளை மறுதினம் வியாழக் கிழமை துல்-ஹஜ் மாதம் ஆரம்பமாவதுடன் புனித ஹஜ்ஜூப் பெருநாளை செப்டம்பர் 2ஆம் திகதி சனிக்கிழமை கொண்டாடுமாறு பிறைக்குழு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வகையில் இலங்கையில் அறபா தினம் முதலாம் திகதி வெள்ளிக்கிழமையாகும்.
மாநாட்டில் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் உறுப்பினர்கள், கொழும்பு பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள், ஷாவியாக்கள், தக்கியாக்கள் மற்றும் தரீக்காக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.