சாய்ந்தமருது உள்ளூராட்சிசபையும் கல்முனை மாநகரின் எதிர்காலமும் - பாகம் 3

சாய்ந்தமருது பிரதேசசபைக் கோரிக்கையின் தோற்றுவாய்
--------------------------------------------
ஒரு காலத்தில் கிராமசபைகளாக இருந்த சாய்ந்தமருது, மருதமுனை போன்ற ஊர்கள் இணைந்து முழுக்கல்முனைத் தொகுதியும் ஒரு பிரதேச சபையாக உருவான வரலாறு எல்லோருக்கும் தெரியும். ( இது தொடர்பாக மீண்டும் வருகின்றேன்)

அடுத்த கட்டம், அது தொண்ணூறுகளின் ஆரம்பகாலப்பகுதி, முன்னாள் ஜனாதிபதி R. பிரேமதாச கிராம ராஜ்யத்திட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதனடிப்படையில் ஒவ்வொரு பிரதேசசபைக்கும் பத்துலட்சம் ரூபாய்களை அபிவிருத்தி நடவடிக்கைக்காக வழங்கினார். அந்தவருடம் மாகாணசபையும் பத்து லட்சம் ரூபாய்களை உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கியது.

இந்நிலையில் சாய்ந்தமருதில் பிரதேசசபைக் கோரிக்கை துளிர்விட்டது. சாய்ந்தமருது பள்ளிவாசல் கல்முனைத் தொகுதியில் உள்ள ஏனைய பள்ளிவாசல்களுடனும் கலந்துபேசி கல்முனையை நான்காகப் பிரிப்பதற்கான ஒரு பிரேரணையை முன்வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.

இதற்கு பிரதானமாக கூறப்பட்ட காரணம், இன்று ஒரு பிரதேசசபைக்கு கிடைக்கின்ற பணத்தை சகல ஊர்களுக்கும் பங்கிட வேண்டியிருக்கின்றது; நான்காகப் பிரித்தால் நான்கு மடங்கு பணம் கிடைக்கும் என்பதாகும். இவ்வாறு பிரதேசசபைக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது அடுத்த ஆண்டு பிரதேசசபைகளுக்கு வழங்கிய பணத்தை பிரதேச செயலகங்களுக்கு வழங்க திரு பிரேமதாச உத்தரவிட்டார். அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட ரூபா 25 லட்சமும் பிரதேச செயலகத்திற்கே வழங்கப்பட்டது. இந்தக்கட்டத்தில் சாய்ந்தமருது பிரதேசசபைக் கோரிக்கை பிரதேச செயலக கோரிக்கையாக மாற்றம் பெற ஆரம்பித்தது.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் சாய்ந்தமருதில் இருந்து ஒரு குழு முன்னாள் அமைச்சர் AR மன்சூர் அவர்களைச் சந்தித்துவிட்டு தலைவரையும் சந்தித்தார்கள். அச்சந்திப்பில் சிலர் சாய்ந்தமருதிற்கு பிரதேசசபை வேண்டும்; என்றும் இன்னும் சிலர் பிரதேச செயலகம் வேண்டுமென்றும் கேட்டார்கள். அப்போது , " உங்களுக்கு என்ன தேவை, என்பதில் ஒரு தெளிவை எடுத்துக்கொண்டு வாருங்கள்; என்று தலைவர் அவர்களை அனுப்பி வைத்தார்.


சாய்ந்தமருதுக்கு பிரதேசசபை தலைவரால் நிராகரிப்பு
------------------------------------------
அதன்பின் காலம்சென்ற முன்னாள் மாவட்ட நீதிபதி அல்ஹாஜ் ஹுசைன் அவர்களின் வீட்டிற்கு முன்னாலிருந்த வெட்டை வளவில் முஸ்லிம் காங்கிரசின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தலைவர் உரையாற்றும்போது , 'கல்முனையின் அரசியல் பலத்தின் முக்கியத்துவம் தொடர்பாக குறிப்பிட்டு, பிரதேசசபை என்பது ஒரு அரசியல் அலகாகும்; எனவே கல்முனையைக் கூறுபோட அனுமதிக்க முடியாது. "சாய்ந்தமருதுக்கு ஒருபோதும் பிரதேசசபை தரமாட்டேன்" என்று பிரகடனம் செய்தார். அதன்பின் பிரதேச செயலகம் ஒரு நிர்வாக அலகு மாத்திரமே, எனவே பிரதேச செயலகம் தருவதில் தனக்கு எதுவித ஆட்சேபனையும் இல்லை' என்றும் தெரிவித்தார். ( தலைவரின் பேச்சுக்கள் பலரிடத்தில் ஒலி, ஒளி வடிவத்தில் இருக்கின்றன, முடிந்தால் தேடியெடுத்துக் கேட்டுப்பார்க்கலாம்)

இவ்வாறு தலைவர் பிரகடனம் செய்ததற்கு காரணம் பிரதேசவாதமா? அல்லது சாய்ந்தமருதுமீது காழ்ப்புணர்ச்சியா? இந்த நாட்டில் பிரதேசவாதத்தை முஸ்லிம்களிடம் இருந்து ஒழிக்க வேண்டும்; கலிமாவின் அடிப்படையில் அவர்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும்; என்று போராடியவர். சமூகத்திற்காகவே உயிரையும் விட்டவர். ஏன் அவ்வாறு பிரகடனம் செய்தார்? கல்முனை மக்கள் ஊர்வேறுபாடுகளுக்கப்பால் ஒற்றுமையாக தம் அரசியல் பலத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்; என்பதற்காக அவ்வாறு செய்தார். கல்முனையும் சாய்ந்தமருதும் பெயரளவில் வெவ்வேறு ஊர்களாக இருந்தாலும் பல விடயங்களில் ஒன்றுபட்ட ஊர்களாகவே இருந்தன.

என்ன செய்வது இன்று மனங்கள் குறுகிவிட்டன. இன்று எழுதப்படுகின்ற எழுத்துக்களைப் பார்த்தால் தமிழர்கள் தனிநாடு கேட்டு இவ்வளவு தூரம் எழுதியிருப்பார்களா என்று தெரியவில்லை. கல்முனையைப்பறி கொடுங்கள் அல்லது வைத்துக் கொள்ளுங்கள். அல்லது பாதியைக் கொடுங்கள் அல்லது வைத்துக் கொள்ளுங்கள். அவை எதைப்பற்றியும் நாங்கள் கவலைப்படமாட்டோம். எங்களுக்கு தனியாக பிரித்துத்தாருங்கள். ஆனால் நாளை அளுத்கமயிலோ அராபியாவிலோ உள்ள முஸ்லிம்களுக்கு அடிவிழுந்தால் இங்கிருந்து குரல் கொடுப்போம். அருகே இருக்கின்ற கல்முனைக்குடி மக்கள் கல்முனை பறிபோய்விடக்கூடாது, என்று துடிக்கிறார்களே! அதை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம்; எனகின்ற ஒரு மனோநிலை சிலரிடத்தில் காணப்படுவது வேதனையாக இருக்கின்றது.

பிரதேசபைக் கோரிக்கைக்குப் பதிலாக பிரதேச செயலக கோரிக்கை
------------------------------------------------
தலைவர் அமைச்சரானதன் பின் பிரதேசபைக் கோரிக்கை முழுமையாக கைவிடப்பட்டு பிரதேச செயலகக் கோரிக்கை வீரியம்பெறத் தொடங்கியது. இந்நிலையில் பிரதேச செயலகம் தலைவரால் பெற்றுக் கொடுக்கப்பட்டது. அன்றிலிருந்து சிறாஸ் மீராசாஹிபின் மேயர் பதவி பறிக்கப்படும்வரை பிரதேசசபைக் கோரிக்கை எழவில்லை. எனவே பிரதேசசபைக் கோரிக்கை ஒரு நீண்டகாலக் கோரிக்கை என்பது தவறான ஒரு கூற்றாகும்.

ஒரு கோரிக்கையைக் கைவிட்டு அதற்குப் பகரமாக இன்னொன்றைப் பெற்றுவிட்டு பல ஆண்டுகள் கழித்து அக்கோரிக்கைக்கு மீண்டும் உயிர்கொடுத்துவிட்டு அது ' நீண்டகாலக் கோரிக்கை' என்று கூறமுடியுமா? தலைவர் இருந்திருந்தால் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்க முடியுமா? " நீங்கள் அன்று பிரதேசசபைக் கோரிக்கையைக் கைவிட்டுத்தானே பிரதேச செயலகம் பெற்றீர்கள்; இப்பொழுது எவ்வாறு மீண்டும் அக்கோரிக்கையைக் கொண்டுவருகிறீர்கள்"; என்று தலைவர் கேட்டிருக்க மாட்டாரா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அக்கோரிக்கை நீண்டகாலக் கோரிக்கையாக இருந்திருந்தால், தலைவரின் மரணத்திற்கும் சிறாஸ் மீராசாஹிப் தான் பாதிக்கப்பட்டதனால் அக்கோரிக்கைக்கு மீண்டும் உயிர்கொடுத்ததற்கும் இடையில் சுமார் பன்னிரண்டு அல்லது பதின் மூன்று ஆண்டுகள் கடந்திருக்கின்றன. ஏன் அக்கோரிக்கை அக்காலப்பகுதியில் எழவில்லை. சிறாஸ் மீராசாஹிப் தொடர்ந்து மேயராக இருந்திருந்தால் இக்கோரிக்கை எழுந்திருக்குமா? என்பதையும் நாங்கள் சிந்திக்க வேண்டும்.

இங்கு இதனைப் பதிவு செய்வதன் காரணம் சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சிசபை வழங்கக் கூடாது; என்பதல்ல. ஒரு காலத்தில் சாய்ந்தமருது பிரிந்துவிடக்கூடாது, கல்முனையின் முஸ்லிம்களின் அரசியல் பலம் கூறுபோடப்பட்டுவிடக் கூடாது; என்று நினைத்தவர்கள்கூட இன்று சாய்ந்தமருது பிரியவிருப்பமில்லை; என்றால்கூட, இல்லை பிரித்துக் கொடுக்கத்தான் வேண்டும்; இவ்வாறன ஒரு சூழ்நிலை மீண்டும் எழக்கூடாது, ஆனால் கல்முனை பாதுகாக்கப்படுவதற்கான ஏற்பாட்டைச் செய்துவிட்டு எப்படியாவது பிரித்துக் கொடுத்துவிட வேண்டும், என்கின்ற மனோநிலை இன்று பொதுவாக எல்லோரிடமும் ஏற்பட்டுவிட்டது. இந்த உள்ளூராட்சி சபைக் கோரிக்கை கையாளப்பட்டவிதம் அந்தளவு தூரம் மனங்களைக் காயப்படுத்தி விட்டது.

இங்கு பலருடைய உள்ளத்திலும் எழுகின்ற கேள்வி, சிறாஸ் மீராசாஹிப்பின் மேயர் பதவி பறிக்கப்படாமல் இருந்திருந்தால் இன்றுவரை எழுப்பப்பட்டிருக்க முடியாத ஒரு கோரிக்கை, இவ்வளவு உக்கிரம்பெற்று மொத்த முஸ்லிம்களின் முதுசமான கல்முனைக்கு எதுநடந்தாலும் பறவாயில்லை; உள்ளூராட்சிசபை வேண்டும், அதுவும் அதிஅவசரமாக வேண்டும்; என்கின்ற அந்த நிலைப்பாட்டின் பின்னணி என்ன? என்பதாகும். இதற்குள் ஒருவகையான அரசியல் புகுந்திருக்கின்றதா? அது எந்த மட்டம்வரை புகுந்திருக்கின்றது. அது இந்த இரண்டு ஊர்களையும் பிரித்து குளிர்காய முற்படுகின்றதா? அதற்கு சில உயர்சபைகள்கூட பலியாகின்றதா? அல்லது அந்த உயர்சபைகளுக்குள்ளேயே, இந்த அரசியல் சக்திகளின் முகவர்களாக சில கறுப்பாடுகள் இருக்கின்றனவா? போன்ற கேள்விகள் புறக்கணிக்கக்கூடியவை அல்ல.

கடந்தமுறை உள்ளூராட்சிசபைக் கோரிக்கை கையாளப்பட்ட விதத்திற்கும் இம்முறை கையாளப்படுகின்ற முறைக்குள்ள வித்தியாசம்
-------------------------------------------
மேலே குறிப்பிட்டதுபோல் 90 களின் ஆரம்பத்தில் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, சாய்ந்தமருதுப் பள்ளிவாசல் ஒரு அழகான முறையைக் கையாண்டது. அது தொகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களுடனும் பேசியது. நான்காகப் பிரிக்கின்ற கோரிக்கை ஒரு ஒருமித்த கோரிக்கையாக முன்வைக்க முற்பட்டது.

அக்கோரிக்கை அன்று கைவிடப்பட்டு இன்று மீண்டும் எழுகின்றபோதும் அதே நடைமுறை ஏன் பின்பற்றப்படவில்லை. அவ்வாறு செய்திருந்தால் எவ்வளவு சந்தோசமாக கல்முனையையும் பாதுகாத்து சாய்ந்தமருதுக் கோரிக்கையையும் நிறைவேற்றுகின்ற ஒருமுயற்சியை செய்திருக்கலாம்.
கல்முனை ஒற்றுமையாக இருக்க வேண்டும்; என்கின்ற விருப்பம் கல்முனையில் இருந்தாலும் சாய்ந்தமருது பிரியத்தான் வேண்டுமென்றால் அதனை எதிர்க்கின்ற மனோநிலையில் அவர்கள் இருக்கவில்லை.

இங்கு சாய்ந்தமருதில் இருந்து முன்வைக்கப்படுகின்ற வாதம் ' நாம் ஒரு காலத்தில் கரவாகு தெற்காக தனியாக இருந்தோம்; எம்மைக் கேளாமல் அல்லது சம்மதம் பெறாமல் ( அல்லது சம்மதத்துடன் ) இணைத்துவிட்டார்கள்; எனவே பிரிந்து செல்வது எமது உரிமை' என்பதாகும்.

சம்மதம் பெற்று அன்று இணைத்தார்களா? பெறாமல் இணைத்தார்களா? என்ற கேள்விக்குரிய பதில் எதுவாக இருந்தாலும், அன்று இணைத்தபோது சாய்ந்தமருது எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை, என்பது மட்டும் தெளிவாகும். அவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்திருந்தால் சாய்ந்தமருது சிலவேளை இணைக்கப்படாமல் விட்டிருக்கலாம்.அவ்வாறு இணைக்கப்படாமல் விட்டிருந்தால் ஏனைய ஊர்களும் பெரும்பாலும் இணைக்கப்பட்டிருக்க மாட்டாது. அவ்வாறு இணைத்து கல்முனையை இழக்க அன்றைய தலைவர்கள் அனுமதித்திருக்க மாட்டார்கள். கல்முனை பட்டினசபை எல்லை மாற்றப்படாமல் இருந்திருக்கும். இன்று கல்முனைவடக்கு எல்லைப் பிரச்சினையும் எழுந்திருக்காது.

எனவே, கல்முனையின் எதிர்காலம் தொடர்பான கேள்வி எழுவதற்கு காரணமே அன்றைய எதிர்ப்பில்லாத இணைப்பும் இன்றைய பிரிப்புக் கோரிக்கையும்தான், என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே இன்று பிரிக்கின்றபோது, சில அரசியல் தலைவர்களின் பரிபாசையில் கூறுவதானால் " சேதாரம் இல்லாத பிரிப்பைச் செய்யவேண்டும்". அவர்களுக்கு என்ன சேதாரம் ஏற்பட்டாலும் பறவாயில்லை; எங்களைப் பிரித்து விடுங்கள்; என்பது ஒரு எதிரிச்சமூகமாக இருந்தால் கூட நியாயமில்லை.

விரும்பியோ விரும்பாமலோ அன்று இணைக்கப்பட்டுவிட்டது. இன்று ஒரு புதிய எல்லையுடன் புதிய சபை இருக்கின்றது. சாய்ந்தமருதுக்கு ஒரு காலத்தில் தனியான சபை இருந்தது, எனவே இன்று அதை மீண்டும் பெற்றுக்கொள்வது எமது உரிமை என்ற கோசத்தைக் காணுகின்றோம். ' உரிமை' என்றால் என்ன? முன்பு வேறாக இருந்ததனால் இப்பொழுது மீண்டும் கேட்பது ' உரிமை' என்ற பதத்திற்குள் அடங்குமா? அவ்விணைப்பு அரசின் பொதுக்கொள்கைக்கு கீழ், எல்லா இடங்களிலும் நடந்தது போன்று இங்கும் நடந்ததா? அல்லது இங்கு மட்டும் இது நடந்ததா?

நாடு பூராகவும் அவ்வாறான இணைப்புகள் அன்று நடந்திருந்தால் அந்த உரிமை எல்லாப் பிரதேசங்களுக்கும் இருக்க வேண்டும். உரிமை என்பது அதை நிறைவேற்றுவதற்குரிய கடமையையும் ( duty) அந்தக் கடைமை யார்மீது சாட்டப்பட்டிருக்கின்றது ( addressee) என்பதும் அடையாளம் காணப்படாமல் வருவதில்லை. அப்படியானால் அது அரசாகத்தான் இருக்க வேண்டும். எனவே அன்று நாடுபூராகவும் இவ்வாறான இணைப்புகள் நடந்திருந்தால் அவ்வாறு அனைத்து இணைப்புகளையும் பிரித்து தனித்தனி சபைகள் ஏற்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு இருக்கும். எனவே அன்று அவ்வாறு இணைத்தது ஒரு உரிமை மீறல், அவற்றை இன்னும் பிரியாமல் வைத்திருப்பது தொடர் உரிமை மீறல், அவ்வாறாயின் நாடுபூராகவும் அவ்வாறு பிரிப்பினை கோரி வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.

எனவே அது உரிமையாயின் அவ்வுரிமை எந்த சட்டத்தின் அடிப்படையில் எழுந்தது. ஏனெனில் சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத உரிமைகள் சட்டத்தின் பார்வையில் உரிமைகளே அல்ல, போன்ற பல கேள்விகள் எழும். எனவே மக்களை உசுப்பேற்றுவதற்காக நாங்கள் வார்த்தைகளை விரும்பிய விதத்தில் பாவிக்க முடியாது. ' இவ்வளவு காலமும் ஏதோ ஒரு பாரிய அடிப்படை உரிமையை இழந்து விட்டு வாழ்ந்திருக்கின்றோம், எனவே அதற்காக போராடுவது நமது உரிமை' போன்ற உணர்வை மக்களுக்கு கொடுப்பது ஆரோக்கியமானதல்ல. ஒரே கலிமாவைச் சொன்ன அருகே உள்ள ஊர்களுடன் ஒரே அரசியல் அலகுக்குள் இணைந்த வாழ விருப்பமில்லை; எனவே பிரிந்துபோக விரும்புகின்றோம்; என்பது ஒரு அரசியல் நிலைப்பாடு மாத்திரம்தான்.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க, அன்று நாங்கள் தனி சபையாக இருந்தோம், எனவே பிரிந்து செல்வது எமது உரிமை, அது நியாயம் என்றால் அடுத்த தரப்பினர் நாம் அன்று இருந்த பட்டினசபை எல்லையுடன் எம்மை விட்டுவிட்டு இணந்தவர்களைப் பிரித்து விடுங்கள்; என்று கேட்பது அவர்களின் உரிமையாகாதா? அல்லது நியாமாகாதா? நியாயமில்லை என்றால் எவ்வாறு?

நியாயமென்றால் அந்த நியாயத்திற்கு அநியாயம் செய்துவிட்டு அல்லது உரிமை என்றால் அந்த உரிமையை மறுத்துவிட்டு ( ஏனெனில் சாய்ந்தமருது மட்டும் பிரிக்கப்படும்போது கல்முனைக்கு அந்த உரிமை மறுக்கப்படுகின்றது என்று பொருள்) இன்னொரு தரப்பு தனக்கான உரிமையை நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முயலலாமா?

அது எங்களுடைய பிரச்சினையல்ல. எங்களுக்குத் தேவை பிரிவினை. மற்றவர்களுடைய பிரச்சினையைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. அதை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும், என்றொரு நிலைப்பாட்டையும் எடுக்கலாம். அவ்வாறு எடுத்தால் அடுத்த தரப்பினர் இதை நான்காகப் பிரிக்கின்றவரை சாய்ந்தமருதுக்கு வழங்க வேண்டாம்; என்ற கோசத்தைக் கையிலெடுப்பதைப் பிழைகாண முடியுமா? அவ்வாறான ஒரு சூழல் இந்த இரண்டு ஊர்களுக்கும் உகந்ததா? அன்று சாய்ந்தமருதுப் பள்ளிவாசல் செய்ய முற்பட்டதுபோல் இன்றும் ஒரு இணைந்த கூட்டு முயற்சியை செய்திருந்தால் விடயங்கள் எவ்வளவு இலகுவாகவும் சந்தோசமாகவும் இருந்திருக்கும்.

இந்தக் கட்டுரையின் அடிப்படை நோக்கமே இந்தப் பிழையைச் சுட்டிக்காட்டுவதும் இந்தப்பிழை இந்த இரண்டு ஊர்களுக்குள்ளும் எந்த ஒரு பிளவையும் யாருடைய உள்ளங்களிலும் ஏற்படுத்திவிடக் கூடாது; என்கின்ற கவலையும்தான்.

அரசியல் தலைவர்களின் தவறு
-----------------------------
கோரிக்கையை முன்வைத்தவர்கள் அதை ஒரு இணைந்த கோரிக்கையாக முன்வைக்கத் தவறிவிட்டார்கள். அதிகாரத்தில் உள்ள தலைவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். ஒன்றில் பிரதேசசபைக் கோரிக்கையைக் கைவிட்டு அன்று மறைந்த தலைவர் மூலம் பிரதேச செயலகம் பெற்றீர்கள். அரசியல் அலகான கல்முனையைக் கூறபோட முடியாது; என்று மறைந்த தலைவர் பிரகடனம் செய்த ஒரு விடயம். எனவே, இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது; என்று கூறியிருக்க வேண்டும். அல்லது இதில் பல ஊர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் எல்லோருடனும் கலந்துபேசி ஒரு பொதுக்கோரிக்கையைத் தாருங்கள் என்று கேட்டிருக்க வேண்டும். அதையும் செய்யாவிட்டால் ஆகக்குறைந்தது அவர்களாவது ஏனைய ஊர் பள்ளிவாசல்களை அழைத்து இந்த விடயத்தைக் கலந்தாலோசித்திருக்க வேண்டும்.

இவை எவற்றையும் செய்யாமல் ஒருவர் ரணிலை அழைத்து வந்து வாக்குறுதி கொடுக்கின்றார். இன்னொருவர் பைசர் முஸ்தபாவை அழைத்துவந்து வாக்குறுதி கொடுக்கின்றார். பல தரப்பினரின் நலன்கள் சம்பந்தப்பட்ட விடயத்தில் ஒரு தரப்பினரின் கோரிக்கையை மட்டும் ஏற்று மற்றத் தரப்பினருக்கு பாதகமான வாக்குறுதிகளை இவர்கள் வழங்கியது சரியா? இவர்களின் நியாமற்ற வாக்குறுதியை அடிப்படையாக வைத்து நாம் ஓர் உரிமைப் போராட்டம் நடாத்த முற்படுவதும் முறையா?

இவர்கள் வோட்டுக்காக வருபவர்கள். வியாபாரம் முடிந்தால் சென்றுவிடுவார்கள், ஆனால் இந்த இரண்டு ஊர்மக்களும் சந்தோசமாக வாழ வேண்டும்.

எனவே, சாய்ந்தமருது உள்ளூராட்சிசபை அல்ல இங்கு பிரச்சினை. இந்த விடயம் கையாளப்பட்ட முறையும் அது அடுத்த தரப்பினருக்கு ஏற்படுத்தக் கூடிய சாத்தியமான பாதிப்புக்களும்தான் பிரச்சினையாகும்.

இன்னும் காலம் கடந்துவிடவில்லை. இப்பொழுதாவது அனைத்துப் பள்ளிவாசல்களும் ஒன்று சேருங்கள். ஒரு பொதுக் கோரிக்கையை முன்வையுங்கள். சாய்ந்தமருதுக்காக கல்முனைக்குடியும் மருதமுனையும் நற்பிட்டிமுனையும் பேசவேண்டும், கல்முனைக்காக சாயந்தமருதும் மருதமுனையும் நற்பிட்டிமுனையும் பேசவேண்டும். அதேபோன்று மருதமுனைக்காகவும் நற்பிட்டிமுனைக்காகவும் இந்த இரண்டு ஊர்களும் பேசவேண்டும். அவ்வாறான ஒரு சூழ்நிலை எவ்வளவு மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

இந்த இரண்டு ஊர்களிலும் எத்தனைபேர் மாறி மாறி திருமணம் முடித்திருக்கின்றார்கள். அந்த உறவுகளில் ஏன் வீணான கீறல்கள் ஏற்படவேண்டும். எனவே ஒன்றுபட்டு அபிலாஷைகளை வென்றெடுக்க இனியாவது முயற்சிப்போம்.

வை எல் எஸ் ஹமீட்

குறிப்பு: சாய்ந்தமருது மக்களின் நியாயமான மாநகரசபை தொடர்பான மனக்குறைகள் பற்றி எழுதுவதாக குறிப்பிட்டிருந்தேன். அது இன்ஷாஅல்லாஹ் அடுத்த பதிவில் இடம்பெறும்,

( தொடரும்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -