வகவத்தின் 40 வது கவியரங்கில் ருஷைக்கா நாகூர் கனிக்கு விருது வழங்கி கௌரவிப்பு..!

கொழும்பு தலைநகரில் வீறு நடைபோடும் தமிழ் கவிஞர்கள் அமைப்பான வலம்புரி கவிதா வட்டம் தனது 40 வது கவியரங்கை கடந்த 07-08-2017 அன்று வழமைபோல் அல் ஹிக்மா கல்லூரியில் நடாத்தியது. மறைந்த கவிஞர் எலுவிலை அமீர் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் அவர் பற்றிய சிறப்புரை இடம்பெற்றது. சிறப்பதிதியாக கலந்து கொண்ட பாணந்துறை அல் பஹ்ரியா கல்லூரி அதிபரும், மறைந்த கவிஞரின் நெருங்கிய நண்பருமான கவிஞர் கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ் அவர் பற்றிய நினைவலைகளைத் உருக்கமாக தவழவிட்டார்.

வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கினார். கௌரவ அதிதிகளாக வகவ கவிஞர்களும் தற்போது துபாய் நாட்டின் சங்கமம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனராக பணியாற்றும் கலையன்பன் ரபீக் அவர்களும், அமெரிக்காவின் டெம்பல் பல்கலைக்கழகத்தில் தற்போது பேராசிரியராக பணியாற்றும் கலாநிதி இம்தியாஸ் ரஸாக் எனும் நிதானிதாசன் அவர்களும் கலந்து கொண்டனர். வரவேற்புரையை செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் நிகழ்த்த, நன்றியுரையை செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஈழகணேஷ் வழங்கினார்.

எலுவில அமீர் பற்றி நினைவுரை நிகழ்த்திய சிறப்பதிதி கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ்;

'பாணந்துறை இரத்தினபுரி வீதியின் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கிராமம் எலுவிலை. அங்கே தமிழ்நாடு காதர் மொஹிதீனுக்கும், எலுவிலை சம்சுல் மலீஹாவுக்கும் 1962ல் பிறந்தவர் எலுவிலை அமீர். அவர் எனது நெருங்கிய நண்பரும்கூட. அவரை ஆமிர் என்றால்தான் அங்கே தெரியும். அவரது தந்தை சூழ்நிலை காரணமாக இந்தியா செல்ல தாயார் இடியப்பம் சுட்டும், வீடு வீடாகச் சென்று தேங்காய் விற்றும் மிகவும் இன்னல்பட்டு அவரை வளர்த்தார். எலுவிலை அலவியா கல்லூhயில் க.பொ.த சாதாரண தரத்தையும், உயர் தரத்தை அல் பஹ்ரியாவிலும், இரத்மலான இந்துக் கல்லூரியிலும் கற்று சித்தியடைந்தார். பாடசாலை காலத்திலிருந்தே கவிதை எழுதுவதில் அற்புதமான ஈடுபாடு அமீருக்கு இருந்தது. இப்படி எனக்கு எழுதமுடியவில்லையே என்று அவரது கவிதைகளைப் பார்த்து நான் ஏங்கியதுண்டு. அவர் எழுதிய 'இறப்பர் தேவதைகள்' என்ற கவிதை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கவிதையாகும். இளைஞர் மன்றப் போட்டிகளில் தேசிய விருது பெற்றவர் அமீர். 1983ல் தோட்டப்பாடசாலை ஆசிரியர் நியமனம் கிடைத்தது. 86, 87 களில்; அட்டாளச்சேனை ஆசிரியப் பயிற்சி கல்லூரியில் ஒலித்த அமீரின் காத்திரமான கவிதைகள் அவரது சகாக்களின் உள்ளங்களில் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன். 

1989ல் ரஸானா ஆசிரியை அவரது இல்லத் துணையானர். இக் கால கட்டத்தில் அவரை நோயும் சூழ்ந்து கொண்டது. ஆத்மார்த்தமான கவிதை பாடி பல மனங்களை வென்ற கவிஞனின் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டன. 1995 வரைதான் உயிர் வாழ்வார் என்று டாக்டர்களால் இந்த ஆற்றல்மிகு கவிஞனுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டது. அவரது தாயார் அவருக்கு ஒரு சிறுநீரகத்தை வழங்கியும்கூட அவரது இறப்பைத் தடுக்கமுடியாமல் போனது. பாணந்துறையில் மாபெரும் இலக்கியப் பணி ஆற்றியவர் எருவிலை அமீர். துறையொளி இலக்கிய வட்டம் என்ற அமைப்பின் தலைவராக அவர் இருந்தார். அதன் செயலாளராக நான் இருந்தேன். அதன் மூலம் ரோணியோ வெளியீடாக வெளிவந்த 'எதிர்ப்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்' கவிதைத் தொகுதியில் சமூகத்தின் சிந்தனையைக் கிளறும் அவரது கவிதை இடம்பெற்றுள்ளது.' என்று தெரிவித்தார்.

நிகழ்வில் வகவ கவிஞராக இருந்தவரும் வகவ ஸ்தாபக உறுப்பினர் சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ.நாகூர் கனி அவர்களின் மகளும் தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ துறையில் டாக்டர் பட்டம் பெற்ற செல்வி ருஷைக்கா நாகூர் கனி 'பாராட்டு விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டார். விருதினை கலாநிதி இம்தியாஸ் ரஸாக் அவர்களும், கலையன்பன் ரபீக் அவர்களும் வழங்கி வைத்தனர். வகவ ஸ்தாபக தலைவர் டாக்டர் தாசிம் அகமது ருஷைக்காவுக்கான பாராட்டுரையை நிகழ்த்தினார்.

ஏற்புரையை கவிதையில் வழங்கிய டாக்டர் ருஷைக்கா தனது அனைத்து முன்னேற்றங்களுக்கும் தனது தந்தையின் தியாகமே காரணம் என்று கூறியதுடன் தான் கொண்டு வந்த பொன்னாடையை வகவத் தலைவர் நஜ்முல் ஹுசைன் தன் தந்தைக்குப் போர்த்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். சபையின் பலத்த கரகோஷத்தின் மத்தியில் சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி அவர்களுக்குப் பொன்னாடைப் போர்த்தப்பட்டது.

வகவ கவிஞர்கள் பல்வேறு துறைகளில் சர்வதேசங்களில் புகழ் பெற்றுள்ளது வகவத்திற்கு கிடைத்த பெருமை என்பது மேடையில் சிலாகித்துப் பேசப்பட்டது. அதற்கு சான்று பகர்வதாக அன்றைய மேடை அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் மறைந்த பொல்கஹவெல ஏ.எல்.எம். ராஸிக், கல்வீட்டுக் கவிராயர் கல்ஹின்ன ஹலிம்தீன், கவிஞர் ஏ. இக்பால், தமிழகத்தின் ஹெச். ஜி. ரசூல் ஆகியோர் நினைவு கூரப்பட்டனர். இவர்களைப் பற்றிய நினைவுக் குறிப்புகளை வகவ தேசிய அமைப்பாளர் கவிஞர் மேமன்கவி தெரிவித்தார்.

கவிஞர் எம்.ஏ.எம்.ஆறுமுகம் தலைமையில் விறுவிறுப்பாக நடந்த கவியரங்கில் கவிஞர்கள் பாணந்துறை நிஸ்வான், எம்.எல்.எம்.அன்ஸார் (காத்தான்குடி), தேஜஸ்வினி பிரணவன், கலேவெல ஷப்னா, எம்.பிரேம்ராஜ், எஸ்.தனபாலன், பபியான் சுதா (ஹற்றன்) கே.லோகநாதன், எம்.வசீர், ரிஸ்லி சம்சாட் (அட்டாளைச்சேனை), உணர்ச்சிப்பூக்கள் ஆதில், ரி.என்.இஸ்ரா, அப்துல் லத்தீப், இளநெஞ்சன் முர்ஷிதீன், கம்மல்துறை இக்பால், சுபாஷினி பிரணவன், கிண்ணியா அமீர் அலி, சுதர்ஷனி பொன்னையா (அக்கறைப்பற்று), போருதொட்ட ரிஸ்மி, பாயிஸா ஹமீத், கிராமத்தான் கலீபா (பொத்துவில்), வெலிமடை ஜஹாங்கீர், ரஷீத் எம். இம்தியாஸ், மஸீதா அன்சார், அலி அக்பர் , நாச்சியாதீவு பர்வீன் ஆகியோர் கவி மழை பொழிந்தனர்.

கௌரவ அதிதிகளில் ஒருவரான துபாய் சங்கமம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் கலையன்பன் ரபீக் ' வகவத்தின் வளர்ச்சி எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியைத் தருகிறது. சில வருடங்களுக்கு முன் என் முன்னிலையில் மீள் ஆரம்பம் செய்யப்பட்ட வகவத்தில் இந்த 40 வது நிகழ்வில் மீண்டும் இன்று அதிதியாக கலந்து கொள்வது இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது. இங்கே உள்ள கவிஞர்களுக்கும் எமது துபாய் சங்கமம் தொலைக்காட்சி மூலம் களமமைத்துக் கொடுக்க தயாராக இருக்கிறேன் ' என்று கூறினார்.

மற்றொரு அதிதியாக கலந்து கொண்ட அமெரிக்க டெம்பல் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி இம்தியாஸ் ரஸாக் உரையாற்றும் போது தற்போதைய தனது நிலையின் காரணத்தால் தனது முழு பணியையும் ஆங்கிலத்திலும் சீன மொழியில் மட்டுமே புரிந்து வருவதாகவும் இப்போது வகவம் தன்னை மறுபடி தமிழின் பக்கம் இழுத்து வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். சீன மொழி கவிதைகள் குறித்தும் உரையாற்றிய அவர் எதிர்காலத்தில் சீன மொழி கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்து நூல்கள் வெளியிட எண்ணியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

த.மணி, கலைவாதி கலீல், எம்.எஸ்.எம்.ஜின்னா, ஜே.டீக. நஜிமுதீன், நூருல் அயின் நஜ்முல் ஹுசைன், வை.சுசீலா, எம்.எச்.எம்.நவ்சர், ஜொயெல் ஜோன்சன், சிவபிரதீபன், கவிநேசன் நவாஸ், ஏ.எஸ்.எம்.நவாஸ், கே.சற்குருநாதன், முல்லை முஸ்ரிபா, ரஷீத் எம்.ஹாயிஸ், எஸ்.ஏ.கரீம், ஜீவா மஹேஷ், மலேகவி டிவங்ஸோ, தஹானி நவ்பர், அன்பால் புஹாத் போன்றோர் சபையை அலங்கரித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -