ஆங்கில டிப்ளோமா ஆசிரியர் நியமன உச்ச வயதெல்லையினை 40 ஆக மாற்ற கோரிக்கை.


அகமட் எஸ். முகைடீன்-

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடத்திற்கு டிப்ளோமாதாரர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக கோரப்பட்டுள்ள விண்ணப்பத்தில் பொதுத் தகைமையாக உச்ச வயதெல்லை 35 வயதாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல இனங்களையும் சேர்ந்த பெருமளவிலான ஆங்கில டிப்ளோமாதாரர்கள் விண்ணப்பிக்க முடியாத துர்பாக்கிய நிலை காணப்படுவதாக கிழக்கு மாகாண ஆங்கில டிப்ளோமாதாரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் மிகுந்த இன்னல்களுக்கு மத்தியில் குறித்த கற்கைநெறியினை 35 வயதை கடந்த நிலையிலும் பூர்த்தி செய்து ஆசிரியர் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் கற்பதற்கு வயதில்லை என்ற சிறப்பம்சம் குறிப்பிட்ட அதிகாரிகளினால் மனங்கொள்ளாமல் இருப்பது மனக் கவலையை ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.

மேலும் கிழக்கு மாகாணத்திற்கு அண்மையில் உள்ள வடமத்திய மாகாணத்தில் டிப்ளோமா ஆங்கில ஆசியரியர் நியமனத்திற்காக விண்ணப்பம் கோரப்பட்டபோது உச்ச வயதெல்லை 45 ஆக திருத்தம் செய்து விண்ணப்பங்கள் மீளக்கோரப்பட்டு கடந்த மாதம் நேர்முகப் பரீட்சைகளும் பூர்த்தியடைந்த நிலையில் காணப்படுகின்றது, அத்தோடு அண்மையில் கிழக்கு மாகாணத்தில் கோரப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான உச்ச வயதெல்லையும் 45 ஆக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் ஏன் கிழக்குமாகாண ஆங்கில டிப்ளோமா ஆசிரியர் நியமனத்திற்கான உச்ச வயதெல்லையினை 45 ஆக மாற்ற முடியாதென வினாவெழுப்புகின்றனர். இதனை ஒரு பாரபட்சமாக கருதுவதாகவும் இதனால் தாம் மன உளைச்சலுக்குள்ளாகி இருப்பதாகவும் டிப்ளோமாதாரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தின் சகல இனத்தவர்களும் இதனால் பாதிப்படைவதனால் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த ஆங்கில டிப்ளோமாதாரர்கள் குறித்த வயதெல்லையை 45 ஆக உயர்த்துமாறு கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டை கடந்த சனிக்கிழமை (12) நிந்தவூர் அமீர் மஹாலில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட செயற்குழு கூட்டத்தின்போது சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்ததோடு கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் பொதுச்சேவை ஆணைக்குழு என்பவற்றிற்கு குறித்த மகஜரை தபால் மூலம் அனுப்பியும் வைத்துள்ளனர்.

மேலும் கிழக்குமாகாண ஆளுநர் றோஹித்த போகல்லாகமவை இன்று (16) புதன்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஆங்கில டிப்ளோமா பிரதிநிதிகள் சந்தித்து தமது மகஜர் தொடர்பாக வினவியபோது குறித்த வயதெல்லையினை தற்போது அதிகரிக்க முடியாதென்றும் 35 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் ஆங்கில ஆசிரியர்களாக நியமனம் செய்வதாகவும் பிற்பட்ட காலப்பகுதியில் நிரந்தர நியமனம் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்து அதற்கான பெயர் பட்டியலை தனது அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் திருப்தியற்ற நிலை காணப்படுவதாக தெரிவித்த கிழக்குமாகாண ஆங்கில டிப்ளோமாதாரர்கள் கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பாடசாலை ரீதியாக இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-I இற்கு டிப்ளோமாதாரர்களை ஆட்சேர்ப்புச் செய்யும்போது தங்களையும் உள்ளீர்க்கும் வகையில் குறித்த நியமனத்திற்கான உச்ச வயதெல்லையினை ஆகக் குறைந்ததது 40 ஆகவேனும் உயர்த்துமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களிடம் பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அத்தோடு பட்டதாரி ஆசிரியர் நியமனத்தின் உச்ச வயதெல்லையினை 45 ஆக மாற்றுவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வெற்றிகண்ட கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு தங்களின் கோரிக்கையினையும் கவனமெடுத்து நிறைவேற்றித்தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -