களனியில் அமைக்கப்பட்டு வரும் வீடமைப்புத்திட்டத்தில் 4 மாடிகளும், 32 வீடுகளும் காணப்படும். ரூபா 300 மில்லியன் செலவில் நடைபெறும் இத்திட்டத்திற்கு பொறியியல் பணிகளை மேல் மாகாண பொறியியலாளர் காரியாலயம் மேற்கொள்வதுடன், கட்டுமாணப் பணிகள் லிங்க் இன்சினியரிங் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகின்றன. களனி பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் உள்ள இடத்திலேயே இவ்வீடமைப்புத்திட்டம் அமைகிறது. இவ்வாறான திட்டங்கள் மூலம் இவ்வளவு காலமும் நாடளாவிய ரீதியில் ஊழியர்கள் எதிர்கொண்ட முக்கிய பிரச்சினை ஒன்றுக்குத் தீர்வு கிடைக்கிறது.
ஆண்டுக்கு 5 மாவட்டங்களுக்கான 5 வீடமைப்புத்திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளதுடன், 5 வருடங்களில் முழு நாட்டிற்கும் இத்திட்டங்கள் சென்றடையும் என்பது எமது அமைச்சின் எதிர்பார்ப்பாகும். மொனராகலை, கம்பஹா மாவட்டங்களில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கான இடமும் தற்போது இனங்காணப்பட்டுள்ளது. 8 மாடிகள் கொண்டு அமைக்கப்படவுள்ள இத்திட்டத்திற்கான செலவு ரூபா 935 மில்லியன்களாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசாங்க நிர்வாக அமைச்சு எதிர்பார்ப்பது, ஊழியர்களுக்குத் தனது சேவை மூலம் திருப்தியும் மன நிறைவும் கிடைக்க வேண்டும் என்பதாகும். அதன் மூலம் உற்பத்தித்திறன் மற்றும் வினைத்திறன் மிக்க சேவை ஒன்றை வழங்க முடியுமாக இருக்கும் என்று இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த எமது அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (வீடு மற்றும் அபிவிருத்தி) சாந்த வீரசிங்க அவர்கள் தெரிவித்தார்.
களனி "நில பியச" வீடமைப்புத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்விற்கு மேல் மாகாண பொறியியலாளர் காரியாலய ஊழியர்கள், களனி பிரதேச செயலாளர் அவர்கள், லிங்க் இன்சினியரிங் நிறுவனத்தின் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
கஹட்டோவிட்ட ரிஹ்மி
அமைச்சின் ஊடக ஒன்றியம்