மட்டக்களப்பு கெம்பஸில் நிறுவப்படவுள்ள சட்டபீடத்தின் கல்வி நடவடிக்கைகள் சம்பந்தமாக உலகப்புகழ் பெற்ற பிரித்தானியாவின் மிகப்பெரும் பல்கலைக்கழகங்களில் ஒன்றான லண்டன் நாட்டிங்ஹாம் டிரென்ட் பல்கலைக்கழகத்துக்கும் (Nottingham Trent University) மட்டக்களப்பு கெம்பஸுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று இடம்பெற்றது.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சில் மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், மட்டக்களப்பு கெம்பஸ் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹஸ்புல்லாஹ்வும் - நாட்டிங்ஹாம் டிரென்ட் பல்கலைக்கழகத்தின் சட்டபீட பேராசிரியர் டேவிட் சேர்ச்சிலும் கலந்து கொண்டனர். அத்துடன், மட்டக்களப்பு கெம்பஸ் சார்பில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு கெம்பஸ் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் மற்றும் பொறியியலாளர் நிப்றாஸ் மொஹமட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது, மட்டக்களப்பு கெம்பஸில் நிறுவப்படவுள்ள சட்டபீடத்துக்கு தேவையான கல்விசார் ஆலோசனைகள், சட்டபீட ஆசிரியர்களுக்கான பயிற்சி, ஆலோசனை, புதிய கல்வி முறைகளை அறிமுகப்படுத்துவது சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டன. அத்துடன், இரு பல்கலைக்கழகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளவது சம்பந்தமாக இதன்போது ஆராயப்பட்டது. அதற்கமைய எதிர்வரும் அக்டோபர் மாதம் அளவில் இரு பல்கலைக்கழகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளதாக மட்டக்களப்பு கெம்பஸ் தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டிங்ஹாம் டிரென்ட் பல்கலைக்கழகத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ளும் இலங்கையின் முதலாவது பல்கலைக்கழகம் என்ற பெருமை மட்டக்களப்பு கெம்பஸுக்கு இதன் மூலம் கிடைக்கும். இது மட்டக்களப்பு கெம்பஸுக்கு சர்வதேச ரீதியில் மிகப்பெரும் அங்கீகாரம் என அவர் மேலும் தெரிவித்தார்.