ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
மட்டக்களப்பு சின்னவத்தையில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை 13.08.2017 அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் சின்னவத்தைக் கிராமத்தைச் சேர்ந்த 7 பிள்ளைகளுக்குத் தந்தையான சீனித்தம்பி செல்லத்துரை (வயது 56) என்பவரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவர் தனது நெல்வயலை காவல் செய்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக காட்டுக்குள்ளிருந்து திடீரென வந்த யானை தன்னைத் தாக்கி தும்பிக்கையால் தன்னை தூக்கி வீசியெறிந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தான் இட்ட கூக்குரலில் அவ்விடத்திற்கு விரைந்து வந்த சக விவசாயிகள் தன்னை மீட்டு வைத்தியசாலையில் சேர்ப்பித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவசர சத்திர சிகிச்சையின் பின்னர் அவர் தேறிவருவதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.