காணிகளை மீட்க முடியாமைக்காக றிஷாட் பதவி துறக்க வேண்டும் - அயூப் அஸ்மின்

பாறுக் ஷிஹான்-
முசலி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட முஸ்லிம் மக்களின் காணிகளை மீட்பதற்கு முஸ்லிம் தலைவர்கள் மற்றும் வடமாகாண முதலமைச்சர் ஆகியோர் தலையிடுவதற்கு அமைச்சர் றிஷாட் பதியூதீன் தடையாக உள்ளார் என வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்துள்ளார்.

மேற்படி மாவில்ல பேணல் காடுகளாக அறிவிக்கப்பட்டிருக்கும் காணிகளை மீட்க முடியாமைக்காக அமைச்சர் றிஷாட் பதியூதீன் பதவி துறக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார். வடமாகாண சபையின் 102 ஆம் அமர்வு இன்று பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

மாவில்ல பேணல் காடுகளாக மன்னார் மாவட்டத்தில் முசலி மற்றும் மடு பிரதேச செயலக பகுதிகளில் சுமார் 1 லட்சம் ஏக்கர் முஸ்லிம் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக மாகாணசபையில் 2 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி குழு ஒன்றை நியமித்துள்ளார்.

அந்த குழு விசாரணைகளை நடத்தி 20.08.2017 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. ஆனால் இந்த விசாரணை குழு மக்களின் கருத்துக்களை பெறவில்லை. அத்துடன், மாகாணசபை இந்த விடயத்தில் தலையிடவில்லை. இதற்கு அமைச்சர் றிஷாட் பதியூதீனும் காரணம். குறிப்பாக இந்த விடயத்தை தானே செய்ய வேண்டும் என்பதால், மற்றைய முஸ்லிம் தலைவர்களையும் வடமாகாணசபை மற்றும் முதலமைச்சரையும் தலையிட விடாமல் தடுக்கிறார்.

ஆனால் அங்கே காணி அபகரிப்பினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. எனவே அமைச்சர் றிஷாட் பதியூதீன் தன் பதவியை துறக்க வேண்டும் அல்லது அந்த காணிகள் பறிபோனமைக்கு அமைச்சர் பொறுப்பாளியாக வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் குறிப்பிட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -