அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த வீடற்ற மக்கள் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று (03) தங்களுக்கு வீடுகள் வேண்டுமெனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை -அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச்சேர்ந்த 1300ற்கும் மேற்பட்ட வீடற்ற மக்கள் திருகோணமலை உட்துறைமுக வீதியிலுள்ள இந்து கலாச்சார மண்டபத்தில் கலந்துறையாடியதன் பின்னர் அங்கிருந்து நடைபவணியாக கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தை வந்தடைந்தனர்.
கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் தங்களுக்கு இலகு வீடுகள் வேண்டும் என கோசமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கிழக்கு மாகாண ஆளுனரின் செயலாளரிடம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்குமாறு மகஜரொன்றினையும் கையளித்தனர்.
இம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
நீண்ட காலமாக அழிவு யுத்தத்திற்கு முகம் கொடுத்து சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து சென்றோம். யுத்தம் முடிவுக்கு வந்து எட்டு வருடங்கள் கடந்து விட்ட போதும் முப்பது வருடங்களுக்கும் மேலாக தற்காலிக கூடாரங்களிலும். தரப்பாள் கூடாரங்களிலும் தகரக்கொட்டகைகளிலும். ஓலைக்குடிசைகளிலும் பல்வேறு சொல்லொன்னாத்துயரங்களைச் சந்தித்து வாழ்ந்து வருகின்றோம்.
எங்கள் வாக்குகளை பொய் கூறி அபகரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வீட்டுத்திட்டங்களை பெற்றுக்கொடுக்கும் ஆற்றலும் அக்கறையும் இல்லாமல் தமது சுயலாப அரசியல் சுயபோகங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மீள் குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் எமக்கு வழங்குவதற்காக ஒரு வாரத்தில் கட்டி முடிக்கக்கூடிய இலகு வீடுகளை பெற்று தந்திருக்கின்றார். அந்த வீடுகளை பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் விருப்பமாக இருக்கின்ற போதிலும் அதைத்தடுத்து நிறுத்தி எம்மை நிரந்தர துன்பத்திற்குள் விடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை முயற்சிக்கின்றது.
எமது தேவைகளையும் துயரங்களையும் தீர்த்து வைக்க அக்கறையற்று இருக்கும் கூட்டமைப்பினர் தம்மை தமிழ் மக்களின் தலைமை என்று கூறிக்கொண்டு அரசாங்கத்துடன் இணக்க அரசியல் என்ற வழிமுறைக்கு வந்து அதையும் பயனுள்ளவாறு செய்யாமல் கூனல் அரசியல் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
மக்களாகிய எங்கள் முன்னுரிமைக்குறிய அரசியல் தீர்வு.காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை. படையினர் வசமிருக்கும் எமது காணிகளை மீண்டும் பெற்றுற்தரும் பிரச்சினை .எமது பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்ககொடுப்பது என எந்தவொரு பிரச்சினைக்கும் அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமாக எவ்விதமான பேச்சுவார்தைகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை இதுவரை நடத்தவில்லை. அவர்களை நம்பி பயனில்லை. என்று நாங்கள் உணர்ந்த நிலையிலேயே தற்போது எமது பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொள்ள நாமே வீதியில் இறங்கி போராடுகின்ற நிலைக்கு முகம் கொடுத்துள்ளோம்.
எனவே கௌரவ ஜனாதிபதி அவர்களே எமக்கு நிரந்தர வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அம்மகஜரில் தெரிவிக்கப்ட்டுள்ளது.