
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-
வடமாகாணத்தில் இருந்து நீண்ட காலமாக இடம்பெயர்ந்திருப்பவர்களை மீள்குடியேற்றுவதற்கான விஷேட செயலணி மேற்கொள்ளும் உள்ளக இடம்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான மக்கள் தொகைக்கணிப்பு தொடர்பான பத்திரங்களை பூர்த்தி செய்து 2017 /08 / 31 அன்று அதற்கு முன்னர் பிரதேச கிராம சேவை அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
அதேபோன்று எதிர்வரும் 2017 செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள இத்தொகைக்கணிப்பிற்காக உங்கள் பிரதேசத்திற்கு வருகைதரும் தொகைக்கணிப்பீட்டாளர்களுக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குதல் வேண்டும்.
மேற்படி உத்தியோகபூர்வமான தொகைக் கணிப்பீட்டின் மூலம் பெறப்படும் தரவுகள் புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது, அந்த வகையில் இந்த சந்தர்ப்பத்தை இடம்பெயர்ந்து வாழும் வடபுல முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ள தவறிவிடக்கூடாது, குறிப்பாக மீள் குடியேற்றத்தில் தற்பொழுது ஆர்வம் கட்டாது கவனயீனமாக இருக்கும் புதிய சந்ததிகளும் எதிர்கால அரசியல் பொருளாதார சமூக நலன்களைக் கருத்தில் கொண்டு பதிவுகளை மேற்கொள்ள முன்வருதல் கட்டாயமாகும்.
இன்றுவரை, வடபுலத்தில் இருந்து விடுதலைப்புலிகளால் 1990 ஆம் ஆண்டு ஒட்டு மொத்தமாக விரட்டியடிக்கப்பட்ட மக்களின் சரியான புள்ளிவிபரங்கள், அவர்களது காணிகள் வதிவிடங்கள் இழப்புக்களின் தரவுகள், ஆவணங்கள், கடந்த 27 வருடங்களில் அவர்களது சனத்தொகை அதிகரிப்பு, அவர்களில் மீள்குடியேற விருப்புபவர்களது விபரங்கள் என எதுவுமே எந்தவொரு தரப்பினாலும், அரசியல் கட்சியினாலும், அரச யந்திரத்தினாலும் முழுமையாக ஆவணப்படுத்தப்படவோ, முறையாக அரசினதோ சர்வதேச அமைப்புக்களினதோ கவனத்திற்கு கொண்டுவரப்படவோ இல்லை என்பதே மிகவும் கசப்பான உண்மையாகும்.
2016/07/05 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் கீழ் வடமாகாணத்தில் இருந்து நீண்ட காலமாக இடம்பெயர்ந்திருப்பவர்களை மீள்குடியேற்றுவதற்கான விஷேட செயலணி அமைக்கப்பட்டது, அதன் இணைத் தலைவர்களாக கீழே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள கௌரவ அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்:
1. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி. எம் சுவாமிநாதன்.
2. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
3. உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா
4. விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க
தேசிய கொள்கை திட்டமிடல் பொருளாதார அமைச்சு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சு, வீடமைப்பு நிர்மாண அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள், வடக்கு மற்றும் வட மத்திய மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள், திறைசேரியின் செயலாளர் அல்லது அவரது பிரதிநிதி ஆகியோர் மேற்படி செயலணியின் உறுப்பினர்கள் ஆவார்கள்.
நீண்டகாலமாக இடம் பெயர்ந்திருக்கும் முஸ்லிம் மற்றும் சிங்கள அகதிகளை மீளக் வடக்கு மாகாணத்தில் முழுமையாக மீள் குடியமர்த்துவதற்கான முடிவை அமுல்படுத்துவதற்கான கூட்டு அமைச்சரவைக் உடன்பாட்டின் பின்வரும் முன்மொழிவுகளை ஒருங்கிணைத்து, நடைமுறைப்படுத்துவதற்குமாக மேற்படி செயலணி அமைக்கப்பட்டுள்ளது.
(1) மீள் குடியேற்ற நிகழ்ச்சித் திட்டம் நிறைவுறும் வரையில் பிரதேச செயலகங்கள் மூலம் சாதாரண குடிமக்களுக்கு வழங்கப்படும் வரை GOSL வழங்கிய சேவைகளை (பிறப்பு, இறப்பு, திருமணம், சான்றிதழ் வழங்கல், கல்விச் சான்றிதழ்கள் வழங்குதல்) பதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறைகளை ஏற்படுத்துதல்.
(2) 1980 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க வாக்காளர்களின் பதிவுச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் இடம் பெயர்ந்தவர்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்வதற்காக வாக்காளர்களாக தமது அசல் இடங்களில் வாக்காளர்களாக பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல்.
(3) நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களுக்காக அவர்கள் 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்வதற்கு முன்னர் வாழ்ந்த குடும்ப நிலத்தை வழங்குவதன் மூலம் அல்லது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் உதவியுடன் பிரதேச செயலாளரூடாக புதிய பொருத்தமான அரச நிலங்களை ஒதுக்குதல்.
(4) வடக்கு மாகாணத்தின் தமது பூர்வீக இடங்களில் குடியேற விரும்பும் அகதிகளுக்கு வீடுகள் வழங்குவதற்கு.
(5) மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை துரிதமாக ஏற்படுத்துதல்.
(6) 2020 ஆம் ஆண்டளவில் மீள்குடியேற்ற செயல்முறை முடிவடையும் வரை புத்தளத்தில் இயங்குகின்ற 6 பாடசாலைகளையும் 125ஆரம்பப் பாடசாலைகளையும் 6 மருத்துவ கூடங்களையும் , மத்திய அரசாங்க நிர்வாகத்தின் கீழ் பராமரிப்பதற்கான பொறிமுறையை உருவாக்குவாக்குதல்.
உள்ளக இடம்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான மக்கள் தொகைக்கணிப்ப்பு ஒன்றை நடத்துவதன் மூலம் பெறப்படும் தரவுகளை புள்ளிவிபரங்களை மையமாக வைத்து மீள் குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த மேற்படி செயலணி தீர்மானித்துள்ளது.
மோதல் காரணமாக 1990 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆந் திகதிக்கு முன்னர் வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு நீண்டகாலமாக உள்ளக இடம்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான மக்கள் தொகைக்கணிப்பில் பங்குபற்றுவதற்கு பதிவுசெய்தல்
நீங்கள் மோதல் காரணமாக 1990 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆந் திகதிக்கு முன்னர் வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டவரா? அன்றேல் நீங்கள் அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களின் நேரடி சந்ததியா?
நீண்டகாலமாக உள்ளக இடம்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்களை உரியவாறு நீண்டகால உள்ளக இடம்பெயர்ந்தவர்களை வடமாகாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான செயலணி அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் (UNHABITAT) நிறுவனம் ஆகியவற்றின் பங்களிப்புடன் மோதல் காரணமாக 1990 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 30ஆந் திகதிக்கு முன்னர் வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் வாழும் நபர்கள் தொடர்பான தொகைக்கணிப்பொன்றை மேற்கொள்ள இச்செயலணி தீர்மானித்துள்ளது.
தமது பூர்வீக இடங்களில் மீள்குடியேற விரும்பும் குடும்பங்களின் எண்ணிக்கை, தற்போது தமது பூர்வீக இடங்களுக்கு மீள விரும்பும் குடும்பங்களின் எண்ணிக்கை, மற்றும் அவர்களின் மீள்குடியேற்றம் சார்ந்த தேவைகள் பற்றிய தெளிவான தரவுகளைத் திரட்டுவது மேற்குறிப்பிட்ட தொகைக்கணிப்பை நடாத்துவதன் நோக்கமாகும்.
மோதலினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்டுள்ள நிலையில் தமது ப10ர்வீக இடங்களுக்குச் சென்று மீள்குடியேற விரும்பும் குடும்பங்களும், தற்போது தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்றுள்ள நிலையிலும் நிரந்தரமாக மீள்குடியேறுவதற்கான வசதி வாய்ப்புககளைப் பெற்றுக்கொள்ளாத நிலையில் இருக்கின்ற குடும்பங்களும் இத்தொகைக்கணிப்பில் பங்குபற்றுவதன மூலம் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளையும் வாழ்வாதார உதவிகளையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இத்தொகைக்கணிப்பில் பங்குபற்றுதல் தொடர்பான விடயங்கள்:-
மோதல் காரணமாக 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆந் திகதிக்கு முன்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்த குடும்பங்களும்; இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களது நேரடி சந்ததியினரும் வடக்கு கிழக்கு மாகாணங்களை அண்டிய மாவட்டங்களில் (புத்தளம், அநுராதபுரம், பொலனறுவை, மொணராகலை அம்பாறை, பதுளை) அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து இடம்பெயர்ந்த குடும்பங்களும் இத்தொகைக்கணிப்பில் பங்குபற்ற முடியும்.
விஷேட செயலணியினால் தரப்பட்டுள்ள மாதிரியமைப்பைத் தழுவி தங்கள் விண்ணப்பப்படிவத்தைத் தயாரித்தல் வேண்டும்.விண்ணப்பப்படிவத்தில் கோரப்பட்டுள்ள தகவல்களை உரிய முறையில் ப10ர்த்திசெய்து தற்போது தாங்கள் வசிக்கும்
பிரதேச கிராம சேவை அலுவலரிடம் 2017/08/31 ஆம் திகதி அல்லது அத்திகதிக்கு முன்னர் சமர்ப்பித்தல் வேண்டும்.
2017 செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள இத்தொகைக்கணிப்பிற்காக உங்கள் பிரதேசத்திற்கு வருகைதரும் தொகைக்கணிப்பீட்டாளர்களுக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குதல் வேண்டும்.
மேலதிக விபரங்களை கிராம சேவை அலுவலர், பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளருடன் தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது www.taskforcepidp.lk என்ற இணையத்தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். அன்றேல் கொழும்பு காலி வீதி இல 356 B என்ற முகவரியிலுள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள வடமாகாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான செயலணியின் கருத்திட்ட முகாமைத்துவ அலகின் கருத்திட்ட முகாமையாளரிடமும் அது குறித்து விசாரிக்கமுடியும்.