ஹம்ஸா கலீல்-
புதிய காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயத்தின் மூன்று மாடிக்கான கட்டட நிர்மாணப் பணிகளை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார். இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கடந்த அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக இருந்த காலப் பகுதியில் கிழக்கின் உதயம், தெயட்ட கிருல்ல போன்ற திட்டங்களினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 02 கோடி ரூபாய் நிதியில் அல் அமீன் வித்தியாலயத்தின் கட்டட நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதனடிப்படையில் மிகுதியாக உள்ள கட்டட நிர்மாணப் பணிகளையும் மிக அவசரமாக முடிவுருத்துவதற்காக சுமார் 05 மில்லியன் ரூபாய் நிதி புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடைபெற்றுவரும் இவ்அபிவிருத்திப் பணிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் அவர்கள், இதன்போது பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்திக்குழு உறுப்பினர்களை சந்தித்து மேலதிக தேவைகள் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டார்.
இதற்கமைவாக பாடசாலைக்கான வரவேற்பு கோபுரம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான வேலைகளை மிக விரைவில் ஆரம்பிக்க இருப்பதாகவும் இந் நிகழ்வின் போது இராஜாங்க அமைச்சர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.