தமிழக துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், மாநில அமைச்சராக கே.பாண்டியராஜனும் இன்று (திங்கள்கிழமை) மாலை பதவியேற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு மாநில பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய நிகழ்வில் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
துணை முதல்வராக பதவியேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் வசம் நிதி, வீட்டுவசதி, கிராமப்புற வீட்டு வசதி, குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற திட்டமிடல், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கே.பாண்டியராஜனுக்கு தமிழ் ஆட்சி மொழித் துறை மற்றும் தொல்லியல் துறை வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆளுநர் மாளிகைக்கு வரும் முன்பு பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் சென்னை கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக அமைச்சரவையில் அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டி வசம் உள்ள கால்நடைத்துறை, உடுமலை கே.ராதாகிருஷ்ணனிடமும், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கவனித்து வந்த இளைஞர் விவகாரங்கள் துறை, பி.பாலகிருஷ்ண ரெட்டியிடமும் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல, அமைச்சர் எம்.சி. சம்பத் வகித்து வந்த சுரங்கம் மற்றும் கனிம வளத் துறைகளின் பொறுப்பு, அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.