ஹஜ்: மில்லத் இப்ராஹீம் காட்டித் தரும் அழகிய வாழ்வு நெறி..!

                          அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர். 
மது வாழ்வும் மரணமும், தொழுகைகளும் கிரியைகளுக்கும் அகிலங்களின் இரட்சகனான எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு உரியனவாகும். இறைவன், பிரபஞ்சம், உலகம், மனிதன், வாழ்வு, மரணம், வழிபாடுகள், கிரியைகள் என மனிதனின் தேடலில் உள்ள அத்தனை கேள்விகளிற்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஹசரத் இப்ராஹீம் (அலை) அவர்களின் தேடல்களினூடாக பதில் சொல்லியுள்ளான்.

“(நபியே!) நீர் கூறும்; “மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பால் வழி காட்டினான் – அது மிக்க உறுதியான மார்க்கமாகும்; (மில்லத் இப்ராஹீம்) இப்றாஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும், அவர் இணைவைப்வர்களில் ஒருவராக இருக்கவில்லை.”

“நீர் கூறும்; “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.”

“அவனுக்கு யாதோர் இணையுமில்லை – இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் – (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் – முஸ்லீம்களில் – நான் முதன்மையானவன் (என்றும் கூறும்).” (ஸுரத்துல் அன்ஆம் 6 : 161,162, 163)

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்.

அல்லாஹ் மிகப் பெரியவன் எனத் துதித்துப் போற்றி எங்கும் எதிலும் எப்பொழுதும் இணை துணையற்ற ஏக வல்லோனாகிய அல்லாஹ்வை முதன்மைப் படுத்துகின்ற இஸ்லாமிய வாழ்வு நெறி எவ்வளவு அழகானது.

மனிதனின் கரங்கள் படைத்த சிலைகளையன்றி மனிதனைப் படைத்த இறைவனே மிகப் பெரியவன், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்,

“இப்றாஹீம் தம் தகப்பனார் ஆஜரிடம், “விக்கிரகங்களையா நீர் தெய்வங்களாக எடுத்துக் கொள்கிறீர்? நான் உம்மையும் உம் சமூகத்தாரையும், பகிரங்கமான வழி கேட்டில் இருப்பதை நிச்சயமாக பார்க்கிறேன்” என்று கூறியதை நினைத்துப்பாரும்.” (ஸுரத்துல் அன்ஆம் 6 : 74)

அகன்று விரிந்த பிரபஞ்சம், கோல்கள், சூரியன், சந்திரன் , இரவு பகல் , பஞ்சபூதங்கள் என்பவற்றை விட அவற்றைப் படைத்து இயக்கிக் கொண்டிருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே மிகப் பெரியவன்.

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்.


“அவர் உறுதியான நம்பிக்கையுடையவராய் ஆகும் பொருட்டு வானங்கள், பூமி இவற்றின் ஆட்சியை இப்றாஹீமுக்கு இவ்வாறு காண்பித்தோம்.

ஆகவே அவரை இரவு மூடிக் கொண்டபோது அவர் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தார்; “இதுதான் என் இறைவன்!” என்று கூறினார்; ஆனால் அது மறைந்த போது அவர், “நான் மறையக் கூடியவற்றை நேசிக்க மாட்டேன்” என்று சொன்னார்.

பின்னர் சந்திரன் (பிரகாசத்துடன்) உதயமாவதைக் கண்டு, அவர், “இதுவே என் இறைவன்” என்று கூறினார். ஆனால் அது மறைந்த போது அவர், “என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லையானால், நான் நிச்சயமாக வழி தவறியவர்கள் கூட்டத்தில் (ஒருவனாக) ஆகிவிடுவேன்” என்று கூறினார்.

பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்டபோது “இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது” என்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்” என்று கூறினார். (ஸுரத்துல் அன்ஆம் 6 : 75,76,77,78)

எமது வாழ்வின் அத்தனை அளவுகோல்களும், பெறுமானங்களும், கணிப்பீடுகளும் அந்த அல்லாஹ்வை முதன்மைப் படுத்துகின்றன, அத்தகைய உயரிய செய்தியை இந்த அர்பணிப்பின் தியாகத்தின் திருநாள் சொல்லிச் செல்கின்றது..

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்.

வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்கானவனாக – (இணைவைப் போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்” (என்று கூறினார்).”
(ஸுரத்துல் அன்ஆம் 6 : 79)

அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்
லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் வ லில்லாஹில் ஹம்து.

திருமணம், குடும்ப வாழ்வு அல்லாஹ்வின் கட்டளைகளிற்கு முற்றிலும் கட்டுப் பட்டதாக இருக்க வேண்டும் என்பதனை ஹசரத் இப்ராஹீம் (அலை) அவர்களது சரிதம் எங்களிற்கு உணர்த்துகின்றது

(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்;. அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்;. நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்;. அதற்கு இப்ராஹீம்; “என் சந்ததியினரிலும்(இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்;. என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான். (ஸுரத்துல் பகறா 2:124)

தவமிருந்து பெற்ற மகனை அர்பணிக்கும் தாயும் தந்தையும் இறைகட்டளைக்கு இணங்கிப் போகும் மகனும்

“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).

எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் – என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”

ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது

நாம் அவரை “யா இப்றாஹீம்!” என்றழைத்தோம்.

“திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.

“நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”

ஆயினும், நாம் ஒரு மகத்தான் பலியைக் கொண்டு அவருக்குப்ப பகரமாக்கினோம்.

இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்;

“ஸலாமுன் அலா இப்ராஹீம்” (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!

இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம்.

(ஸுரத்துஸ் ஸாஃப்பாத் 37: 100 -110)

அல்லாஹு அக்பர் 
அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்
லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் 
அல்லாஹு அக்பர் வ லில்லாஹில் ஹம்து.

வாழ்க்கைப் பாடமாகியது இப்ராஹீமிய வரலாறு :

(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்;. இப்ராஹீம் நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் ‘என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்’ என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.

(இன்னும் நினைவு கூறுங்கள்;) இப்ராஹீம்; “இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று கூறினார்;. அதற்கு இறைவன் கூறினான்; “(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்” பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன். அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.”

இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினர்).

“எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”

“எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக – நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.”

(மில்லத் இப்ராஹீம்) இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர. நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்;. நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.

இன்னும், அவரிடம் அவருடைய இறைவன்; “(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்” என்று சொன்னபோது அவர், “அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்” என்று கூறினார்.

(ஸுரத்துல் பகறா 2: 125,126,127, 128, 129,130,131 )

அல்லாஹு அக்பர் 
அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்
லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் 
அல்லாஹு அக்பர் வ லில்லாஹில் ஹம்து.

ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -