அப்துல்சலாம் யாசீம்-
நுகர்வோரை பாதிக்கின்ற எந்தவொரு விடயமாக இருந்தாலும் அந்தந்த வியாபார தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தெரிவித்தார்.
அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பஸ் தரிப்பு நிலையங்களிலுள்ள உணவகங்களில் குறிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பான முறைப்பாடுகள் இடப்பட்டிருந்தன.
இது தொடர்பாக உடனடியாக கிழக்கு மாகாண நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் உதவி பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் அவர்களை தொடர்புகொண்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள அணைத்து பஸ் தரிப்பு நிலையங்களில் உள்ள உணவகங்களை சோதனையிடுமாறு பணித்ததற்கு அமைவாக கடந்த தினங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஓட்டமாவடி- நாவலடி- ரெஜிதென்னை -வெருகல் ஆகிய பிரதேசங்களில் உள்ள வியாபார தளங்கள் சுற்றிவளைப்புக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அச்சுற்றிவளைப்பின் போது 12 வியாபார தளங்களில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் சட்ட மீறல்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான சட்ட மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்ட வியாபார தளங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை சட்டத்தை மீறிய வியாபார தளங்கள் அனைத்துமே ஏற்கனவே நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் அதிகாரிகளினால் சுற்றிவளைக்கப்பட்டு போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டு எச்சரிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது என கிழக்கு மாகாண நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் உதவி பணிப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட பொறுபதிகாரியுமான ஆர்.எப்.அன்வர் சதாத் குறிப்பிட்டார்.
அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாரான பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக வேண்டி நுகர்வோர் விழிப்புணர்வுகள் சம்பந்தமாக பல்வேறு செயல்திட்டங்களையும் நடைமுறை படுத்தவுள்ளதாகவும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளரும் சட்டத்தரணியுமான டொக்டர் ஹில்மி மஹ்ரூப் மேலும் தெரிவித்தார்.