1950 களின் ஆரம்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அம்பாறை மாவட்டம் பிரிந்தபோது அது அம்பாறை மாவட்டமாக பிரிய இருக்கவில்லை; மாறாக கல்முனை மாவட்டமாகத்தான் பிரிய இருந்தது. கல்முனைதான் அதன் தலைநகரமாக வர இருந்தது. ஆனால் அன்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கேட் முதலியார் MS காரியப்பர்தான் அதனை அம்பாறைக்கு அனுப்பினார். ஏன் தெரியுமா? இரண்டு காரணங்கள்
ஒன்று: அன்று பெரிதாக முஸ்லிம்களுக்கு மத்தியில் கல்விகற்ற அரச உத்தியோகத்தர்கள் இருக்கவில்லை. எனவே கல்முனையில் கச்சேரி அமைந்தால் அந்நிய சமூகத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர்களின் ஆளுகையின் கீழ் கல்முனை வந்துவிடும். அவ்வாறு வந்தால் காலப்போக்கில் கல்முனையை முஸ்லிம்கள் இழக்க வேண்டிவரலாம். அதை அனுமதிக்க முடியாது என்பதாகும்.
நமக்குத் தெரியும், இலங்கையில் எல்லா நகரங்களிலும் முஸ்லிம்கள் வாழுகின்றார்கள், ஆனால் முஸ்லிம்களின் ஆளுகையின் கீழுள்ள முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரேயொரு தொன்மை வாய்ந்த நகரம் கல்முனையாகும். ஒரு காலத்தில் வடகிழக்கில் ஆகக்கூடிய வருமானமீட்டிய ஒரு உள்ளூராட்சி சபையும் கல்முனைதான். ( தற்போதைய தரவு தெரியவில்லை. சிலவேளை தற்போதும் அவ்வாறே இருக்கலாம்)
எனவே இந்த ' கல்முனையைப் பாதுகாப்பதற்காக ஒரு மாவட்டத்தையே இழந்தவர்கள் நாம். இன்று கரையோர மாவட்டம் கேட்டு கெஞ்சுகின்றோம். அத்தனை அரச அலுவலகங்களையும் இழந்துகொண்டிருக்கின்றோம். கல்முனை, இந்த மாவட்டத்தின் தலைநகராக இருந்திருந்தால் இந்த அரச அலுவலகங்களை இழந்திருப்போமா? அவ்வாறு கல்முனையைப் பாதுகாப்பதற்காக அனைத்தையும் இழந்த ஒரு மாவட்டம் நாம். இன்று ஒரு உள்ளூராட்சி சபைக்காக அதனை இழக்கலாமா?
இரண்டாவது காரணம்: அம்பாறைப் பிரதேசத்தில் முஸ்லிம்களைக் குடியேற்றுவது. ஐம்பதுகளில் அம்பாறைத்தொகுதியில் சுமார் 2700 சிங்களக் குடும்பங்களே இருந்தன. அவர்களும் உகன போன்ற இடங்களை அண்மியதாகவே வாழ்ந்தார்கள். 1989 ம் ஆண்டு அம்பாறையில் ஐ தே கட்சியில் தெரிவுசெய்யப்பட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் - தயாரட்ன, கலப்பதி, பக்மீவெவ ஆகிய மூவருமே வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். ஶ்ரீ சு கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட காலம் சென்ற வீரசிங்க அவர்கள் மாத்திரமே அம்பாறையைச் சேர்ந்தவர் ( உகன).
அதுமட்டுமல்ல, அன்று அம்பாறைப் பிரதேசத்தில் நம்மவர்கள் காடு வெட்டி காணிகளை உருவாக்கி இருக்கின்றார்கள். எனவே அம்பாறையில் முஸ்லிம்களைக் குடியேற்றி முழு மாவட்டத்தையும் முஸ்லிம்களுக்குரிய மாவட்டமாக ஆக்கவேண்டும், என்று அவர் கனவு கண்டார். கல்முனைக்கு வந்த கச்சேரியை அம்பாறைக்கு அனுப்புவதற்கு அது இரண்டாவது காரணம்.
நமது மக்களின் வரலாற்றுத் தவறு
-------------------------------
சுதந்திர இலங்கையில் முதலாவது நிறைவேற்றப்பட்ட பாரிய நீர்த்தேக்கத் திட்டம் இங்கினியாகல நீர்த்தேக்கத் திட்டமாகும். அது அன்று ' கல்ஓய' நீர்த்தேக்கத் திட்டம் எனத்தான் அழைக்கப்பட்டது. நீர்த்தேக்கத்திட்டம் நிறைவேறும் தறுவாயில் அன்றைய பிரதமர் D S சேனாநாயக்கா அவர்கள் அங்கு விஜயம் செய்தார். M S காரியப்பரும் உடன் இருந்தார். அவர், D S சேனாநாயக்காவின் பெயரை அந்நீர்த்தேக்கத்திற்கு சூட்டி அதை அந்த மலையில் செதுக்குகின்ற ஆலோசனையை முன்வைத்தார். இதனைக் கேட்டதும் பிரதமருக்கு பெருமகிழ்ச்சி, ஏனெனில் அவர்கூட இதனை யோசித்திருக்கவில்லை. எனவே அவ்வாறே செய்வோம் என்றார்.
இவ்வாறு பிரதமர் மகிழ்ச்சியாக இருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிரதமரிடம் M S காரியப்பர் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார், அதுதான் இந்தப் பிரதேசத்தில் ( இங்கினியாகலை வரை) எனது மக்களைக் குடியேற்ற நீங்கள் அனுமதி தரவேண்டும்; என்பதாகும். மகிழ்ச்சியில் இருந்த பிரதமர் அதற்கு உடனடியாக சம்மதித்தார்.
தேர்தலும் வந்துவிட்டது, ' நான் சோற்றை ஆக்கிவைத்துவிட்டு வந்திருக்கின்றேன்; அகப்பையை என் கையில் தாருங்கள், உங்களுக்கு பங்கீடு செய்வதற்கு' என்று M S காரியப்பர் மக்களிடம் கேட்டார். ஆனால் அத்தேர்தலில் நமது மக்கள் அவரைத்தோற்கடித்தார்கள். நமது வரலாறும் மாறியது. தென்பகுதியில் இருந்து பெரும்பான்மை சமூகத்தவர்கள் கொண்டுவரப்பட்டு வகை தொகையின்றி குடியேற்றப்பட்டார்கள். லஹுகல, தெஹியத்தக்கண்டிய போன்ற பல பிரதேசங்கள் இணைக்கப்பட்டன, என்பதெல்லாம் புதிய வரலாறு.
எனவே, கல்முனையைப் பாதுகாப்பதற்காக ஒருமாவட்டத்தையே இழந்தவர்கள் நாம். ஒரு உள்ளூராட்சி சபைக்காக அந்தக் கல்முனையை இழக்கப்போகின்றோமா? தயவு செய்து சிந்தியுங்கள்.
சாய்ந்தமருது மக்களுக்கு கல்முனை மாநகரசபை தொடர்பாக சில நியாயமான மனக்குறைகள் இருக்கின்றன, என்பதை மறுக்க முடியாது. அவையும் கட்டாயம் எழுதப்பட வேண்டும். ஒருதலைப்பட்சமாக எழுத முடியாது. அதில் நேர்மையும் இருக்காது. Objectivity யும் இருக்காது. மாறாக subjectivity தான் இருக்கும். அவ்வாறு செய்ய முடியாது. எனவே அடுத்தடுத்த பதிவுகளில் அவை தொடர்பாகவும் எழுதப்படும். ஆனால் அந்த மனக்குறைகளுக்குக் காரணம் கல்முனையா அல்லது நாங்கள் சார்ந்துள்ள கட்சிகளும் அரசியல் வாதிகளுமா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
அம்மனக்குறைகளுக்கு காரணமான அரசியல்வாதிகளுக்கு மாலை இட்டுவிட்டு கல்முனையைக் கூறுபோடுவது நியாயமா? இவற்றைப்பற்றியும் நமது ஊர்வேறுபாடுகளைக் களைந்து சகோதர வாசஞ்சையுடன் நாம் சிந்திக்க வேண்டும்.
(தொடரும்.....)
அடுத்த பதிவில் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை தொடர்பாக மறைந்த தலைவரின் நிலைப்பாடு இடம்பெறும்.
வை எல் எஸ் ஹமீட்.