ஏ.எல்.எம்.ஷினாஸ்-
எழுத்திலும் இலக்கியத்திலும் கலைகளிலும் ஒன்று பட்டு செயலாற்றுகின்ற தமிழ்- முஸ்லிம் இனங்கள் ஏன் அரசியல் முயற்ச்சிகளில் ஒன்றுபட்டு செயற்பட முடியாது? என கிழக்கு மாகாண கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சர் சி.தண்டாயுதபாணி கேள்வி எழுப்பினாா்.
கிழக்கு மாகாண கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சும் மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களகமும் இணைந்து நடாத்திய 2017 ஆம் ஆண்டிற்கான மாகாண கலை இலக்கியப் பெருவிழா வின் இறுதி நாள் நிகழ்வு நேற்று (02.08.2017) கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நடைபெற்றது இங்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து இங்கு உரையாற்றிய அமைச்சர்,
இந்த நாட்டிலே வாழுகின்ற தேசிய இனங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் எதிர் கொள்கின்ற அரசியல் பிரச்சினை ஒன்றுதான் என்பதை மறந்து விடக்கூடாது. வடக்கிலும் கிழக்கிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் பரந்து வாழுகின்ற தமிழர்களும் முஸ்லிம்களும் ஏன் மலையகத் தமிழர்களும் கூட அரசியல்,பொருளாதாரம், சமூக கலாச்சார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தவர்களாகத்தான் இருக்கிறாா்கள்.
இந்த நாட்டிலே சம உரிமை உள்ள மக்களாக வாழ வேண்டும் என்பதற்காக நீண்ட காலமாக தமிழ் மக்கள் அற வழியிலே நியாயமான போராட்டங்களை முன்னெடுத்து வந்திருக்கிறாா்கள் ஆயுதப் போராட்டம் கூட 30 வருடங்களாக நடைபெற்றன. ஆயினும் சிறுபான்மை இனங்களுக்கு நேர்மையான அரசியல் தீர்வு கிடைக்க வில்லை.
தமிழ் பேசும் மக்கள் எதிர் கொள்ளும் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு அரசியலமைப்பு மாற்றத்தினுடாக ஏற்படுகின்ற போதே அது உறுதியானதாக அமையும் என்றாா்.