க.கிஷாந்தன்-
ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருளுடன் நான்கு பேர் அட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் 02.08.2017 அன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, பத்தனை மற்றும் சென்.கிளயார் பிரதேசத்தில் வைத்து 02.08.2017 அன்று மாலை முதல் இரவு வரை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றினை அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபர்களை சோதனையிட்ட போது இவ்வாறு ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் கேரளா கஞ்சா ஆகியன மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் விற்பனை செய்பவர்களும், போதைபொருள் பாவிப்பவர்களும் உள்ளடங்குவதாக அட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நான்கு பேரும் திம்புள்ள பத்தனை மற்றும் அட்டன் சமனலகம பகுதியை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இதன்போது இவர்களிடமிருந்து 640 மில்லிகிராம் ஹெரோயினும், 1500 மில்லிகிராம் கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை 03.08.2017 அன்று அட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.