உலகின் இரண்டாவது உயரமான சிகரமாக கருதப்படும் K2 சிகரத்தை அடையவுள்ள கண்டி தர்மராஜ வித்தியாலய சாரணர் அணியினருக்கான நிதியுதவி நேற்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் வழங்கப்பட்டது.
பாகிஸ்தானின் வடக்கு மாகாணத்திலுள்ள உலகின் இரண்டாவது உயரமான சிகரத்தை அடைவதற்கு இலங்கை சாரணர் அணியினர் முதற்தடவையாக முன்வந்துள்ளனர். இந்த கடினமான சாதனைக்காக ஜனாதிபதி அவர்களால் பத்து இலட்சம் ரூபா நிதியுதவி மற்றும் K2 சிகரத்தில் ஏற்றுவதற்கான இலங்கை தேசிய கொடி ஆகியவை வழங்கப்பட்டன. சாரணர் அணியினருடனான குழு நிழற்படப்பிடிப்பிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.
மலையேறும் 21 நாள் பயணத்துக்காக இலங்கை சாரணர் அணி எதிர்வரும் 31 ஆம் திகதி நாட்டிலிருந்து செல்லவுள்ளது.
இவ்வாறான சவாலை வெற்றிகொண்டு இலங்கையின் பெருமையை உலகுக்கு எடுத்துச்செல்ல முயற்சிப்போருக்கு ஜனாதிபதி அவர்கள் வழங்கும் ஊக்குவிப்பு இதன்போது பாராட்டப்பட்டது.
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா, மத்திய மாகாண விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் திலிண பண்டார தென்னகோன், இலங்கை சாரணர் சங்க பிரதி ஆணையாளர் ஜே.பெர்ணான்டோ, கண்டி தர்மராஜ கல்லூரி அதிபர் ஜகத் கருணாரத்ன, சாரணர் அணி பொறுப்பாசிரியர் அனில் பெரேரா ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.