அரசியல்வாதிகளே கல்வி அதிகாரிகளே இது உங்கள் கண்பார்வைக்காக கட்டாயம் பாருங்கள்




ட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கல்விக்கோட்டதிலுள்ள பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலய மாணவர்கள் பல்வேறு தேவைப்பாடுகளுடனும் அமர்ந்து கல்வி கற்பதற்கு தளபாட வசதிகள் இன்மையாலும் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

பின் தங்கிய பிரதேசத்தில் காணப்படும் இப்பாடசாலையில் பெரும்பாலாக வறுமைக்கோட்டின் கீழுள்ள கூலித்தொழிலாளர்களினதும், மீனவர்களினதும் பிள்ளைகளே கல்வி கற்று வருகின்றனர். இப்பாடசாலையில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பிலும் பாடசாலை மாணவர்களின் தேவைக்கான ஆராதனை மண்டபத்தின் அவசியத்தேவை குறித்தும் சகல அதிகாரிகள், அரசியல் மட்டத்தினருக்கு பல்வேறு வேண்டுகோள்களை விடுத்தும், இதற்கான சரியான தீர்வுகளை எவரும் பெற்றுக் கொடுக்கவில்லை. 

அதன் காரணமாக, மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டே மேற்கொள்ள வேண்டியுள்ளது. மாணவர்களுக்குப் போதுமான தளபாட வசதியின்மையினால் பரீட்சை எழுதும் மாணவர்கள் மேசைகளில் அமர்ந்து எழுதும் நிலையும், சாதாரண தர மாணவர்கள் ஆரம்பப்பிரிவு மாணவர்கள் பயன்படுத்தும் சிறிய தளபாடங்களைப் பயன்படுத்தும் துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது. இவ்வாறான நிலைமைகள் மாணவர்களுக்கு உடலியல் ரீதியான பாதிப்புக்களையும் உள ரீதியான பாதிப்புக்களையும் ஏற்படுத்துமென்பது நிச்சயம்.

 அது மாத்திரமன்றி, இப்பாடசாலையின் ஆராதனை மண்டபம் மற்றும் கட்டடத்தேவைப்பாடுகள் குறித்து இப்பிரதேசத்தில் அரசியல் ஆதிக்கம் செலுத்தி வரும் எமது மாகாணத்தின் முதலமைச்சர் கெளரவ நஸீர் ஹாபிஸ் அஹமட் அவர்களின் கவனத்திற்கும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கெளரவ எம்.ஷிப்லி பாறுக் ஆகியோரது கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டும், எதுவித நடவடிக்கையும் அவர்கள் இதுவரை மேற்கொள்ள வில்லையென்பது கவலையளிக்கின்ற அதே வேளை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கெளரவ ஷிப்லி பாறுக் அவர்கள் நேரடியாக பாடசாலைக்கு வருகை தந்து, இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு தளபாடங்களைப் பெற்றுத்தருவதாக உறுதிமொழியினையும் வழங்கியிருந்தார். 

இருப்பினும், இதுவரை எந்தத்தரப்பினரும் எமது மாணவச்செல்வங்களின் கல்வியில் அக்கறை கொண்டு இவ்வாறான அவரச, அவசியத் தேவைகளைக்கூட செய்து தர முன்வரவில்லை. கிழக்கு மாகாண மக்களின் தேவைகளை அவர்கள் காலடிக்குச்சென்று நிறைவேற்றி வரும் கிழக்கு மாகாண முதலமைச்சர் கெளரவ நஸீர் ஹாபிஸ் அவர்கள் பல்லாயிரம் தடவைகள் கல்குடாவுக்கு வருகை தருவதும் கல்குடாவின் அபிவிருத்தி, அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகிறார். 

இருப்பினும், இவ்வாறான நிலையில் எமது பின்தங்கிய பாடசாலையும் வறிய மாணவர்களும் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து தங்களது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதனைக் கண்டு கொள்ளாமையும், அவரது இணைப்பாளர்களாக கல்குடா பிரதேசத்திலுள்ள எமது சகோதரர்களும் எமது பிரதேசத்தின் இவ்வாறான நிலை தொடர்பில் முதலமைச்சருக்கு எடுத்துக்கூறி தீர்வுகளைப் பெற்றுத்தர முயற்சிக்காமையும் கவலையளிக்கின்றது. 

அதே நேரம், கிழக்கு முதலமைச்சரின் வருடாந்த அமுலாக்கல் செயற்றிட்டத்தின் (CBG-2017 ) கீழ் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு தளபாடம் மற்றும் ஏனைய அத்தியாவசியத் தேவைகளுக்காக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அத்திட்டத்திலும் பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயம் உள்ளடக்கப்படவில்லை. இதில் ஓட்டமாவடிக் கோட்டத்திலுள்ள ஓரிரு பாடசாலைகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. கெளரவ முதலமைச்சர் இத்திட்டத்திலாவது குறித்த பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தை உள்வாங்கி தளபாட, கட்டடத் தேவைகளுக்கான நிதியொதுக்கீடுகளை செய்து தர நடவடிக்கையெடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.

 அத்தோடு, பாடசாலையின் கல்வி முன்னேற்றமும் அதாளபாதாளத்தை எதிர்நோக்கி இருப்பதும், திறமையான மாணவர்கள் இடைவிலகி வருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இப்பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றிய அதிபர் எம்.எம்.ஸாபிர் அவர்களின் அயராத முயற்சியினால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு கல்வியில் முன்னேற்றகரமான பாடசாலையாக பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தைக் கொண்டு வந்திருந்தார். தற்போது இதன் கல்வி நிலை வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றமை தொடர்பில் சகல மட்டத்தினரும் அக்கறை செலுத்த வேண்டிய கட்டாயத்தேவையுள்ளது. 


ஆகவே, மேற்படி எமது பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் காணப்படும் தளபாடத் தட்டுப்பாட்டை, கட்டடத்தேவைப்பாடுகளை உடனடியாகத் தீர்த்து வைத்து, எமது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவ கெளரவ கிழக்கு மாகாண முதலமைச்சர், மத்திய அரசிலுள்ள பிரதியமைச்சர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண கல்வியமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச அரசியவாதிகள், கல்வி வலய அதிகாரிகள், கோட்டக்கல்வி அதிகாரிகள் முன் வர வேண்டுமென பாடசாலை மாணவர்கள், பிரதேச மக்கள் சார்பாக கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -