அனா-
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி எதிர்வரும் 31ம் திகதி மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்று கிழக்கு மாகாண விவசாய அசை;சர் கே.துரைராஜசிங்கம் தெரிவித்தார். கரடியனாறு பிரதேசத்தில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் நிர்மானிக்கப்பட்டுள்ள விவசாய சேவைக்காலப் பயிற்சி நிலையக் கட்டிடத் தெகுதியினைத் திறந்து வைப்பதற்காகவே அவரின் வருகை அமைகின்றது.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் பணிப்பாளர் ஆகியோரின் விடா முயற்சியின் பயனாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மாவட்ட அபிவிருத்திகளுக்கான செய்திட்டத்தின் மூலமான 98 மில்லியன் ருபா நிதிப்பங்களிப்பில் உலக உணவு விவசாய ஸ்தாபனத்தின் மூலம் இச் சேவைக்கால பயிற்சி நிலைத்தின் நிர்மானிப்பு பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இப்பயிற்சி நிலையமானது சுதந்திரத்திற்கு முன்பிருந்தே கரடியனாறு பண்ணைப் பாடசாலை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது எனக் கூறப்படுகின்றது. இது இலங்கை சுதந்திரம் அடைந்து அதற்குப் பிற்பட்ட காலப்பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி நிலைகளை அடைந்து பண்ணைப் பாடசாலை உட்பட மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம், சேவைக்காலப் பயிற்சி நிலையம், விதை அத்தாட்சிப் படுத்தல் சேவை, விதை உற்பத்திப் பண்ணை, பிராந்திய ஆராய்ச்சி நிலையம் போன்ற பல பிரிவுகளைக் கொண்டு இயங்கி வந்தது. பின்னர் நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக இப்பண்ணையின் செயற்பாடுகள் முற்றாக ஸதம்பிதம் அடைந்தன.
முன்பு மத்திய அரசிற்கு மாத்திரமே உரித்தாக இருந்த இப்பண்ணைப் பிரதேசமானது மாகாண சபைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட அளவு பிரதேசம் மாகாண விவசாய அமைச்சின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. அதன் பிற்பாடு யுத்தம் முடிவுற்று 2010ம் ஆண்டு காலப்பகுதிகளில் கிழக்கு மாகாணத்திற்கு என சேவைக்காலப் பயிற்சி நிலையம் ஒன்று அத்தியாவசியமானது எனக் கருதப்பட்டு மேற்படி பிரதேசத்தில் 20 ஏக்கர் மேட்டுக் காணியும் 05 ஏக்கர் வயல்காணியும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சிற்கு வழங்கப்பட்டது.
அதன் பின் வந்த காலப்பகுதிகளில் மாகாண விவசாயத் திணைக்களத்தின் மூலம் சுற்று வேலி, சிறிய பயிற்சி மண்டபம், சிறு பயிற்செய்கைகள், பயிர்ச் செய்கைக்கான வசதிகள் போன்ற செயற்பாடுகள் சிறு சிறு தொகையில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இருப்பினும் ஒரு முழுமையான சேவைக்காலப் பயிற்சி நிலையமாக இது இயங்குவதற்குத் தேவையான நிர்வாகக் கட்டிடமோ, கேட்போர் கூடமோ, மற்றும் விடுதி வசதிகளோ இல்லாத நிலையில் இதனை மாகாண விவசாயத் திணைக்களத்தினால் மேற்கொள்ள முடியாமலும் இருந்தது.
2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட மாற்றத்தினூடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மாகாண ஆட்சியில் பங்காளிகளாக உள்ளீர்க்கப்பட்டு விவசாய அமைச்சுப் பொறுப்பினையும் பெற்றது. இதன் படி கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம் மற்றும் அமைச்சின் செயலாளர், பணிப்பாளர்கள் ஆகியோரின் விடாமுயற்சியின் காரணமாக பலவாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் மாவட்ட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 89 மில்லியன் ரூபா கட்டிட நிர்மானிப்புகளுக்கும், 09 மில்லியன் ரூபா கட்டிட உபகரணங்கள் மற்றும் தளபாட கொள்வனவுகளுக்குமாக வழங்கப்பட்டு உலக உணவு விவசாய ஸ்தாபனத்தின் மூலம் இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தற்போது இந்த சேவைக்கால பயிற்சி நிலையத்தில் நிர்வாகக் கட்டிடம், விரிவுரை மண்டபம், சமையலறை உட்பட உணவு உட்கொள்ளும் மண்டபம், நூல் நிலையம், ஆண், பெண் இருபாலருமாக 40 பேர் தங்கிநிற்கக் கூடிய விதத்தில் அமைக்கப்பட்ட விடுதி வசதி, சுமார் 250 பேர் வரை உள்வாங்கக் கூடிய நவீன கேட்போர் கூடம் போன்றன அமைக்கப்பட்டு மிகவும் நவீன வசதியுடன் கூடிய சேவைக்காலப் பயிற்சி நிலையமாக உருவாக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 2016ம் ஆண்டு மத்திய விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இப்பயிற்சி நிலையத்திற்குரிய வீதி புனரமைக்கப்பட்டு கொங்கிறீற்று இடப்பட்டது, இப்பயிற்சி நிலையத்தின் பிரதான நுலைவாயில் அமைப்பானது மாவட்ட செயலகத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு மாகாண விவசாய திணைக்களத்தினுடைய நிதிப்பங்களிப்பும் இதில் இடம்பெற்றுள்ளது.
இக்கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வானது கடந்த 2016.10.24ம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா சம்பந்தன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். தற்போது இந்நிலையமானது முழுமை பெற்று திறப்பு வழா காணும் நிலைக்கு வந்துள்ளது.
எதிர்வரும் 2017.08.31ம் திகதி வியாழக்கிழமை கரடியனாறு விவசாய சேவைக்காலப் பயிற்சி நிலைய கட்டிடத் தொகுதியின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அவர்களின் அழைப்பின் பேரில் இந்நிகழ்விற்கு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து இக்கட்டிடத் தொகுதியினைத் திறந்து வைக்கவுள்ளார். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், மத்திய விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மாலைதீவிற்கான ஆலோசகர் விலம் வர்போஸ்ட், ஐரோப்பிய ஒன்றியத்தின் உலக உணவு விவசாய ஸ்தாபனத்தின் இலங்கை மாலைதீவிற்கான பிரதிநிதி திருமதி நினா பிரன்ஸ்ரப் ஆகியோர் உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், திணைக்களப் பணிப்பாளர்கள், உத்தியோகஸ்தர்கள், எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
தமிழ்; தேசியக் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்படுகின்ற பாரிய செயற்திட்டமாக இது இருப்பதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளால் நாட்டின் தலைவர் ஒருவர் அழைக்கப்படுவதும், மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பிரதேசத்திற்கு நாட்டின் தலைவர் ஒருவர் வருகை தருவதும் இதுவே முதற்தடவை என்பது குறிப்படத்தக்கது.