கஹட்டோவிட்ட ரிஹ்மி -
2016 ஆம் ஆண்டு அரசினால் கொண்டு வரப்பட்ட பாதீட்டின் யோசனைக்கு அமைய, அரச சேவைக்குப் புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இது அரசினால் அது சம்பந்தமான இறுதி முடிவு எடுக்கப்படாததனால், உரிய திருத்தங்கள் எடுக்கப்படும் வரை அரச சேவைக்கு உள்வாங்கப்படும் புதிய ஊழியர்களின் நியமனக் கடிதத்தில் திருத்தங்கள் செய்வதற்கு அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது. அரச சேவை ஆணைக்குழுவின் பூரண அங்கீகாரத்துடன் இத்திருத்தங்களை செய்வதற்கு அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக இலக்கம் 21/2017 அரசாங்க நிர்வாக சுற்றுநிருபம் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி அவர்களின் கையொப்பமிடப்பட்டு சென்ற 25 ஆம் திகதி வௌியிடப்பட்டது.
அதன் படி, 2016 ஜனவரி 01 ஆம் திகதியிலிருந்து செயற்படும் வகையில் அரச சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகளின் இலக்கம் 01 பின்னிணைப்பின் பிரகாரம், புதிய அரச ஊழியர்களுக்கு நியமனக்கடிதங்களின் 06 ஆம் பிரிவினை பின்வருமாறு திருத்தியமைப்பதற்கு 2017.08.15 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
"இப்பதவி ஓய்வூதிய உரித்துடையதாகும். உங்களுக்குரிய ஓய்வூதியத்திட்டம் தொடர்பாக அரசினால் தொடர்ந்து எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு நீங்கள் கட்டுப்படவேண்டும். மேலும் நீங்கள் விதவைகள்/தபுதாரர்கள், அநாதைகள் ஓய்வூதியத்திட்டத்திற்கு பங்களிப்புச் செலுத்த வேண்டும். அரசினால் காலத்திற்குக் காலம் விதிக்கப்படும் வகையில் நீங்கள் அதற்கான பங்களிப்புத் தொகையினை செலுத்த வேண்டும்."
மேற்படி ஏற்பாடுகளுக்கமைய 2016.01.01 ஆம் திகதிக்குப் பின்னர் வழங்கப்பட்ட நியமனக் கடிதங்களின் 06 ஆம் பிரிவினைத் திருத்தியமைப்பது சிறந்ததாகும்.