கடந்த 14 வருங்களாக இடம் பெறும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்முறை சீர்திருத்த நகர்வுகள் மற்றும் வட்டார மீள்நிர்ணய குழுக்களின் செயற்பாடுகள் குறித்து நன்கு அறிந்திருந்தும் முஸ்லிம்களின் அரிசயல் பிரதிநிதித்துவம் குறைவதனை தடுக்கவோ அல்லது எல்லைகள் மீள்நிர்ணயம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவோ எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத முஸ்லிம் அரசியல் கட்சிகள் இன்று கைசேதப் படுகின்றமை வியப்பிற்குரிய விடயமாகும்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் மற்றும் உள்ளூர் அதிகார சபைகள் விசேட திருத்தச் சட்ட மூலம் ஆகிய உத்தேச சட்டமூலங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 10 முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பு போன்றவற்றினால் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஒரு மனுவைக்கூட பாராளுமன்றத்தில் ஆளும் எதிர்க்கட்சிகளில் இருந்த முஸ்லிம் அரசியல் கட்சிகள் முன்வைக்கவும் இல்லை, ஏனைய மனுதாரர்களுக்கு ஆதரவு வழங்கவும் இல்லை.
மாகாண சபைகளின் முஸ்லிம் பிரதிநிதிகளும் அங்கீகாரம்
உள்ளுராட்சி திருத்தச் சட்டம் 19/10/2010 செவ்வாய் கிழமை கிழக்குமாகாண சபையில் நிறைவேற்றப் பட்டது. மாகாணசபையில் உள்ள 37 உறுப்பினர்களில் ஆளும் தரப்பில் உள்ள 20 பேரில் 18 பேர் ஆதரவாக வாக்களித்ததுடன் (2 பேர் சமூகமளிக்வில்லை) எதிர் தரப்பில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேர் நடுநிலை வகித்ததுடன் 6 பேரில் 5 தமிழ் உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களிக்க எதிர்கட்சித் தலைவர் தயாகமகே சபையில் இருந்த போதும் வாக்களிக்கவில்லை.
இச்சட்ட மூலத்திற்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாக வாக்களித்தது இச்சட்டமூலம் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் மூன்று மாகாண சபை உறுப்பினர்களும் இச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாகவும் அறிவித்தது இதே நிலைப்பாட்தைத்தான் தேசிய காங்கிரசும் எடுத்திருந்தது.
வடமாகாண சபை ஆளுனரின் கட்டுப்பாட்டில் இருந்ததால் ஆளுனரின் அனுமதி பெறப்பட்டமை இன்றும் சட்ட ரீதியிலான சர்ச்சைகளை கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும், இன்றைய முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரனோ அல்லது மாகாண அரசோ அன்று பதவியில் இருந்திருந்தால் நிச்சயமாக அந்த சட்ட மூலம் வட மாகாண சபையின் அனுமதியைப் பெற்றிருக்குமா என்பது சந்தேகமே.
அரசியலமைப்பின் மீதான 13 சீர்திருத்தச் சட்டத்திற்கு அமைய மாகாண சபைகளின் காட்டுப்பட்டிற்குள் வரும் உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் முறையில் மாத்திரமன்றி அவற்றின் எல்லைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்ற சட்டமூலம் சகல மாகாண சபைகளினதும் அனுமதி பெறப்பட்டதன் பின்னர் 2011 ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
முன்னாlள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்களின் தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக் குழுவின் சிபாரிசின் படி உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய இரண்டு சட்டமூலங்களான உள்ளூராட்சி மன்றங்களின் விசேட ஏற்பாடு மற்றும் தேர்தல் முறை திருத்தம் ஆகிய சட்டமூலங்கள் பாராளுமன்றத்தின் 10/10/2012 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
முஸ்லிம் தலைமைகளின் ஆதரவுடன் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேறிய சட்டமூலம்:
அமைச்சர் ஹகீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிஷாது தலைமையிலான மக்கள் காங்கிரஸ் என சகலரும் மேற்படி சட்டமூலத்தை ஆதரித்துவாக்களித்தனர்.
அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரகடனம்
2013 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட உரையை பாராளுமன்றத்தில் நிகழத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ: “இப்பாராளுமன்றம் உள்ளூராட்சி சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மற்றும் உள்ளூராட்சி சபைகள் (திருத்தச்) சட்டமூலம் இரண்டினையும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டுள்ளது
ஜேர்மனிய முறை அறிமுகப்படுத்தப் படுகிறது
புதிய தேர்தல் முறையின் கீழ் தொகுதி வாரி முறையும் விகிதாசார முறையும் கலந்த ஜேர்மனிய முறை அறிமுகப்படுத்தப் படுகிறது, எனினும் ஐந்து வீத வெட்டுப்புள்ளி ஒவ்வொரு உள்ளுராட்சி உப வலயங்களிலும் (Ward) கணிப்பீடு செய்யப் படுகின்ற போது சிறு கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகள் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும்.
இதே தேர்தல் முறை எதிர் காலத்தில் மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களுக்கும் அறிமுகப்படுத்தப் படின் இரு பிரதான கட்சிகள் மாத்திரம் அரசியல் செய்கின்ற ஒரு நிலை உருவாவதொடு சிறுபான்மை இனங்களின் அரசியலுக்கு சாவு மணி அடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
தேசிய எல்லைநிர்ணய கமிட்டி
முன்னாlள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்களின் தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவே விகிதாசார மற்றும் வட்டார கலப்புத் தேர்தல் முறையை (70/30) சிபாரிசு செய்திருந்தது, அந்தக் கலப்பு முறையின் கீழ் தேர்தல்களை நடத்துவதற்கு உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளை மீல்நிரணயம் செய்ய வேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டதால் நான்கு பேரைக் கொண்ட தேசிய எல்லைநிர்ணய கமிட்டி அரசசேவை அதிகாரி திரு ஜெயலத் திசாநாயக தலைமையில் 2013 ஆண்டு நியமிக்கப்பட்டது.
மேற்படி நான்கு பேரைக் கொண்ட தேசிய எல்லைநிர்ணய கமிட்டி சமர்ப்பித்திருந்த அறிக்கையில் குறைபாடுகள் இருப்பதாக மைத்ரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசு கருதியதனால் 01/12/2015 அன்று திரு அசோகா பீரிஸ் தலைமையில் மற்றுமொரு ஐவர் அடங்கிய மீளாய்வு குழு ஒன்று நியமிக்கப்பட்டது, மூன்று மாதத்திற்குள் தமது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தாலும் 2017 ஜனவரி 17 வரை அவர்களது அறிக்கை தாமதப்படுத்தப்பட்டது.
மாறாக, முஸ்லிம் பிரதேசங்களில் பிரதிநிதித்துவங்கள் குறைகின்ற விதத்தில் பல இடங்களில் உள்ளூராட்சி மன்ற எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம் பிரதேசங்களைப் பொறுத்தவரை சனத்தொகைக்கு ஏற்ப உள்ளூராட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது, நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரை உள்ளூராட்சி அலகுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள அமைச்சர் மனோ கனேஷனால் முடிந்தது. ஆனால் உள்ளூராட்சி அதிகார அலகுகளின் பெறுமதி அறியாதவர்களாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் காலத்தைக் கடத்தி விட்டிருக்கின்றனர்.
சிறுபான்மைக் கட்சிகள் அல்லது சிறிய கட்சிகளுக்கு ஏற்படும் இழப்புக்கள்
சட்ட மூலத்தில் 5% வெட்டுப்புள்ளி அறிமுகமாகின்றது. அதாவது, போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் குறைந்தப்பட்சமாக 5% வாக்குகளை பெற்றிருந்தாலேயே கணக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ளப்படும்.
இதனால் சிறுபான்மை கட்சிகளின் வாக்குத் தொகை கணிசமாக குறையும். ஆகவே நேரடியாக வட்டாரங்களின் மூலமாக வெற்றிப்பெற முடியாத சிறுபான்மை வேட்பாளர்கள் விகிதாசார முறையின் கீழும் தெரிவு செய்யப்பட முடியாத நிலைமை ஏற்படும். இது சிறுபான்மை கட்சிகளையும், சிறிய கட்சிகளையும், சுயேட்சைக் குழுக்களையும் வெகுவாக பாதிக்கும்.
இச்சட்ட மூலம் பெரும்பான்மை கட்சிகளுடன் கட்டாயமாக கூட்டு சேர வேண்டிய ஒரு நிர்பந்தத்தை சிறிய கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றது. சிறுபான்மை கட்சிகள், பெரும்பான்மை கட்சிகளுடன் விரும்பி கூட்டு சேர்வது என்பது வேறு, பலவந்தமாக கூட்டு சேர்க்கப்படுவது என்பது வேறு.